Thursday, December 30, 2010
Monday, December 20, 2010
Tuesday, December 7, 2010
வாழ்வியல் சிந்தனைகள் - மானமிகு.கி.வீரமணி அவர்கள்
யானைகளைத் தேடாதீர்; நாய்களைத் தேடுங்கள்!
உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது! பல மனிதர்கள் பல நேரங்களில் மனிதர்கள்மீது விழுந்து, விழுந்து கவனிப்பார்கள்; நீங்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்கிறோம் என்ற ஆஷாடபூதித்தனத்தின் அப்பட்டமான வேடத்தை அருமையாகச் செய்வார்கள்!
பல பதவியாளர் - நண்பர்கள் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வைப்பதற்குத் தெரியாமல், அவர்களின் முகஸ்துதிக்குப் பலியாவது வழமையாகிவிட்டது.
நகுதல் பொருட்டல்ல நட்பு என்பதை பலரும் உணர்ந்து, ஒளிவு மறைவின்றி கசப்பான விஷயங்களைக் கூறும் நண்பர்கள்தான் நமது உண்மையான பாதுகாவலர்கள் என்று எண்ணினால், அது அவர்களுக்கேகூட நல்ல பாதுகாப்பு அரணாக விளங்கும்!
அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகளைப் போன்ற நண்பர்கள் - நெருக்கடியும், சோதனையும் வரும்போது காணாமற்போய் விடுவார்கள்! இது உலகியல் வாழ்க்கை.
உண்மையான நட்பு என்பது ஒருவர் நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி, இல்லாதிருக்கும்போதும் சரி நிழல்போலத் தொடருவதே. அவர்களே உயிர் நண்பர்களாவார்கள்.
பெரியவர்கள், லட்சாதிபதிகள், கோடீசுவரர்கள், பதவிப் பவிசில் ஜொலிப்போர் - இவர்கள் என் நண்பர்கள் என்று பெருமை கொள்வதைவிட, எளிய நண்பர்கள் எக்காலத்தும் நண்பர்கள் - எதையும் எதிர்பாராது பாசத்தையும், அன்பையும் ஊற்றுக் கிளம்புவதுபோல் காட்டத் தவறாத நல்லவர்கள் என்பவர்களையே தேர்வு செய்து பழகிடப் பயிலவேண்டும்.
கல்வி பயிலுவதைவிட, நட்பைத் தேர்வு செய்ய அதிகமாகவே பயிலவேண்டும்; வாழ்க்கைக் கல்வி அது. சுற்றங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது; நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது!
நாலடியாரில் 22 ஆம் அத்தியாயத்தில், நட்பாராய்தல் என்ற ஒரு தலைப்பில் ஓர் அருமையான பாட்டு -
யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; யானை
அறிந்தறிந்துப் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்
- நாலடியார் (213)
இதன் கருத்து: யானை போன்றவர்களுடைய நட்பை - நேசத்தை விட்டு, நாய் போன்றவர்களுடைய சிநேகத்தைச் சேர்த்துக் கொள்வது அவசியம்; ஏனெனில், யானை பலதரம் அறிந்திருந்தும், தனக்கு உணவு கொடுத்துக் காக்கிற பாகனையே கொல்லுகின்றது; தன்னை யுடையவன் பிரயோகித்த ஆயுதமானது தன் உடலில் பொத்தியிருக்கவும் நாய் வாலை யாட்டும்.
என்னே அருமையான உவமை நயம்!
தனக்கு நாள்தோறும் உணவு தந்து, குளிப்பாட்டி, நோய் தீர்த்து, முகப்படாம் அணிவித்துப் பெருமை சேர்க்கும் பாகனைக்கூட அது விட்டுவிடுவதில்லை என்பது உண்மை.
அதுபோலவே, நாய் இரண்டுவேளை உணவு ரொட்டி போட்டுவிட்டால், வாலைக் குழைத்து வந்து நிற்கும்; அடித்து விரட்டினாலும் விசுவாசத்தை மறக்கவே செய்யாது!
இது நட்புக்கும் பொருந்தும்; குடும்பங்களுக்கும் பொருந்தும். மிக ஆடம்பரத் திருமணம், பெரிய இடத்து சம்பந்தம் யானைபோல ஆகிவிடுகிறதே பலருக்கு!
அதுவே, கூட்டுக் குடும்பத்திற்கு மட்டுமல்ல, கூட்டணி அரசியலுக்கும் கூடப் பொருந்தும்தானே!
எனவே, யானைகளைத் தேடவேண்டாம்;
நாய்களைத் தேடுங்கள் - நட்பு பாராட்ட! நன்றி காட்ட!!
Subscribe to:
Posts (Atom)