பாவேந்தர் பாரதிதாசன்



புரட்சிக் கவிஞர் சொன்ன"படி"

நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி   

காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி   ( நூலைப் )

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ?  ( நூலைப் )

பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )

தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி  ( நூலைப் )


நேர்பட ஒழுகு

படுக்கைவிட் டெழுந்தால்
பாயைச் சுருட்டு - நீ
பானையிலே பாலைக் கண்டால்
நாயை வெருட்டு - சுவர்
இடுக்கினிலே தேளைக் கண்டால்
கொடுக்கை நசுக்கு - நீ
இருட்டறையில் போகுமுன்னே
விளக்கினை ஏற்று!

மடார் என்று வெடிவெடித்தால்
வாய் திறந்து நில் - நீ
மழைவரும் முன் காயவைத்த
வற்றலை எடுப்பாய்
கொடியவர்கள் தாக்க வந்தால்
தடியினைத் தூக்கு - வெறும்
கோழைகளை ஏழைகளை
வாழவைப்பாய் நீ!

ஏமாறாதே

ஆரஞ்சுப் பழத்தையும் தம்பி - நீ
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு
நீர்சுண்டி இருக்கவும் கூடும் - அது
நிறையப் புளிக்கவும் கூடும்
ஓர்ஒன்றை உண்டுபார் தம்பி - உனக்கு
உகந்ததென் றால் அதை வாங்கு
பாரெங்கும் ஏமாற்று வேலை - மிகப்
பரவிக்கி டக்கின்றது தம்பி!

அழுகிய பழத்தையும் தம்பி - அவர்
அன்றைக்குப் பழுத்ததென் றுரைப்பார்
புழுக்கள் இருப்பதுண்டு தம்பி - உள்
பூச்சி இருப்பதுண்டு தம்பி
கொழுத்த பலாப்பழத்தி னுள்ளே - வெறும்
கோது நிறைந்திருக்கும் தம்பி
அழுத்தினா லும்தெரி யாது - அதை
அறுத்துக் காட்டச் சொல் தம்பி!

நெய்யிற் கொழுப்பைச் சேர்த்திருப்பார் - அதை
நேரில் காய்ச்சிப்பார் தம்பி
துய்ய பயறுகளில் எல்லாம் - கல்
துணிக்கை மிகவும் சேர்ப்பார்கள்
மையற்ற வெண்ணெயென்றுரைப்பார் - அதில்
மாவைக் கலப்பார்கள் தம்பி
ஐயப்பட வேண்டும் இவற்றில் - மிக
ஆராய்ந்து பார்த்தபின் வாங்கு!

வகுத்து வகுத்துச் சொல்வார்கள் - அதன்
வயணத்தை ஆராய வேண்டும்
பகுத்தறி வழியாச் சொத்தாம் - அதைப்
பாழாக்கக்கூடாது தம்பி
நகைத்திட எதையும்செய்யாதே - மிக
நல்லொழுக் கம்வேண்டும் தம்பி
தகத்தகப் புகழினைத் தேடு - நீ
தமிழரின் வழியினில் வந்தாய்!


களவு

கூழ்நிறைந்த குண்டான் - அதைக்
குப்பன் கண்டு கொண்டான்
ஏழ் குவளை மொண்டான் - மிக
இன்பமாக உண்டான்
வாழைத் தோட்ட முத்து - முன்
வந்து நாலு வைத்து
சூழ்ந்த நிழலில் படுத்தான் - அவன்
பசியில் நெஞ்சு துடித்தான்!


வீண் வேலை

மாமரத்தின் கிளையி லொரு
மாங்காய் தொங்கக் கண்டேன்;
மாங்காயின்மேல் கல்லைவிட்டேன்
மண்டை உடை பட்டேன்.

பூமரத்தில் ஏறி ஒரு
பூப்பறிக்கப் போனேன்;
பூப்பறிக்கத் தாவுகையில்
பொத்தென்றுவிழ லானேன்.

ஊமையைப்போல் இருந்த நாயை
உதைக்கக் காலை எடுத்தேன்;
உயரத் தூக்கிய வலதுகாலைக்
கடித்து விட்டது மாலை.

தீமையான செய்கைகளைச்
செய்யவுங்கூடாது;
செய்வோரிடம் எப்போதும்
சேரவும்கூ டாது!


தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!