Friday, August 30, 2019

பைந்தமிழ் மொட்டுகளுக்குத் தாலாட்டு

ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...

(1)ஆரா வமுதே! அருந்தமிழர் காப்பியமே!!
தேரா தெதையுந் தெளியாத் தென்னகமே!!
பொன்வான் கதிரே! புவியில் பிறந்தோரெல்லாம்
உன்றன் உறவென்றே ஓதவந்த பேரருளே!!(2)
நூறாயி ரமாண்டு நுடக்கிவைத்த மதஞ்சாதி,
கூராய்ந்துக் குப்பையெனக்
கொளுத்தவந்த பகுத்தறிவே!!(3)
வேராங் கிளைகளையே விருந்தோம்பித் தாங்குதற்கே
சீராய்ப் பிறந்துவந்த செல்லமே கண்ணுறங்கு!!.... செல்லமே கண்ணுறங்கு!!
செங்காந்தள் பூச்சரமே!! செந்தமிழே !!!
நீயுறங்கு!!....செந்தமிழே !!!
நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...
(5)
கானக் குயில்மொழியே! கட்டிவைத்த மல்லிகையே!!
மானம் அழகென்னும் மாத்தமிழர் பண்பாடே(6)
கூனில் முழுநிலவே! குதித்தாடும் மயிலழகே!!
வேனில் முடித்துவைக்க வீடுவந்த தென்காற்றே!!(7)
ஆனிப்பொன் தொட்டிலே! அழகேநீ கண்ணுறங்கு!!
அன்னச் சிறகாலே! அடுக்கிவைத்த மெத்தையிலே!!
சின்னக் கண்மூடி சிணுங்காமல் நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...

(8)
அய்யன் சொன்னகுறள் அழகாக எடுத்தியம்பிப்
பொய்யர்  புரட்டுகளைப் புறங்காணச் செய்வாயோ(9)
உய்யும் வழிதேடி உலழு முலகோர்க்கு
பொய்யா மொழிசொல்லி பொருளு முரைப்பாயே(10)
உண்ணல் சமனாக்கி உழைப்பும் பொதுவாக்கி
உலகம் ஒன்றாக்க உறுதி கொள்வாயோ(11)
நம்மில் பிளவாக்கும் நரியார் செய்கையெண்ணி
விம்மி யரற்றாமல் வேங்கையே! நீயுறங்கு!!
வேங்கையே! நீயுறங்கு!!
வேளை வரும்   கண்ணுறங்கு!
வேளைவரும்...... கண்ணுறங்கு !!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!