Tuesday, July 5, 2011

மதுரை வனொலியில் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -7. நூல் அறிமுகம்





மதுரை வனொலியில் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -7.   நூல் அறிமுகம் கடந்த 02.07.2011 அன்று காலை 7.05 முதல் 7.15 மணிவரை  ஒளிபரப்பப்பட்டது.வழங்கியவர் சுப.முருகானந்தம், மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்.


"எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அதன் மதிப்பு என்பது அதன் பயனை அளவாகக் கொண்டதேயொழிய, அதை ஆக்கியவனையோ,தெய்வீகத்தன்மையையோ, இலக்கண அளவையோ, அவ்விதத் தன்மைகளையோ அளவாகக் கொண்டது ஆகாது." என்ற தந்தை பெரியாரின் கருத்துக்களை அப்படியே பின்பற்றி நடைபோடும் திரு.கி.வீரமணி அவர்களால் 'விடுதலை' நாளிதழில் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
75 தலைப்புக்களில் பல்வேறு துறைகளைப் பற்றி ஆசிரியரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.உடல் நலம்,மன நலம் என்று இரு கூறுகளாக அவற்றைப் பிரித்துவிடலாம்.உடல்நலம் பற்றிய செய்திகள் தனிமனித வாழ்வின் வெற்றிக்கும், மனநலம் தொடர்பான கருத்துக்கள் பெரும்பாலும் சமுதாய நலனுக்கு அடிப்படையான செய்திகளைக் கொண்டும் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு.
சங்க நூல்களிலிருந்தும்,பெரும்பாலும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்கள் விளக்கவுரையுடன் கூறப்பட்டுள்ளது அருமை.பொருத்தமான இடங்களில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள புத்தகங்கள்,நாளிதழ்கள்,சிற்றிதழ்கள் கணக்கிலடங்காதன.
"புத்தாண்டில் புதையல்களை கண்டுபிடிப்போம்" எனும் தலைப்பினில், தொழில் அதிபர் திரு.சங்கர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்து இடம் பெறுகிறது."ஒரு இரும்புக் கட்டி விலை ரூ.250 தான். அதையே குதிரை லாடங்களாக மாற்றி நாம் விற்பனை செய்தால் அதன் மதிப்பு ரூ.1000 ஆகும்.அதையே (அந்தக் இரும்புக்கட்டியையே மாற்றி) ஊசிகளாகச் செய்தோமானால் அதன் மதிப்பு ரூ.10,000 ஆகும். அந்தப்படி இல்லாமல் அதே கட்டிகளை நீங்கள் கடிகாரத்தின் ஸ்பிரிங்குகளாக்கினால் கிடைக்கும் வருமானம் ரூ.ஒரு லட்சம்.எனவே உங்களின் மதிப்பு என்பது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் தோற்றத்தில் என்பதில் இல்லை.மாறாக, உங்களின் அந்தச் சிந்தனைகளிலும்,சாதனைகளிலும் தான் உள்ளது." வித்தியாசமான சிந்தனைகளே வெற்றிக்கு வழி என ஆசிரியர் காட்டும் விதம் மிக அருமையாக உள்ளது.
"நடைப்பயிற்சியின் பல்வேறு லாபங்கள்" எனும் தலைப்பினில் நடைப்பயிற்சி மற்ற எந்தப் பயிற்சியையும்விட முதிய வயதில் கூட மிகவும் பாதுகாப்பானது.ஆபத்துக்களான கீழே விழுதல்,எலும்பு முறிவு அல்லது சுளுக்கு போன்ற எலும்பு வளைதல் முதலியவை வராத அளவுக்கு உற்ற பாதுகாவலனாகத் திகழ்கிறது.
குறைந்த பட்சம் நாள்தோறும் 30 மணித்துளிகள்.வாரத்தில் ஏழு நாட்கள் நடக்க முடியாத அளவுக்கு பணிச்சுமையால் பாதிக்கக் கூடியவர்கள் 5 நாட்கள் சென்றால் கூட நல்லது என்று கூறும் ஆசிரியர், குறிப்பிட்ட நேரத்தில் விடியற்காலையில் எழுந்து நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், நம்முடைய உடல் ஒரு கடிகாரமாகி, அதுவே அலாரமாகவும் ஆகிவிடுகிறது.உடலைப் போல நல்ல கடிகாரத்தை நாம் பார்க்கவே முடியாது என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
ஒன்று வாகனங்களில் பயணம்; இரண்டு தொலைக்காட்சி முன்பு பல மணி நேரம் அமர்ந்திருப்பது இவற்றின் காரணமாக உடலில் கொழுப்பு கூடுதலாகிறது.எடையும் கூடுகிறது.25 வயது இளைஞர்கள் கூட சத்தான உடலைவிட ஊளைச்சதையுள்ள ஊதிய உடலையே பெற்று இளம் வயதில் சர்க்கரை வியாதி,இரத்தக் கொதிப்பு இவைகளுடன் போராட வேண்டிய கெட்ட வாய்ப்பு நடைப்பயிற்சியால் நிச்சயம் மாறும் என்கிறார் ஆசிரியர்.
"வாழ்க்கை என்ற பரிசோதனைக்கூடத்தில்" எனும் தலைப்பினில் ஆசிரியர் கூறும் வாழ்வியல் மொழிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
"உடனே கிள்ளிப் போட வேண்டியவைகளை தள்ளிப் போடுவதால் உருப்படியான பயனேதும் விளையாது" என்றும்,
மலை குலைந் தாலும், மனங்கலங்காத மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளல் என்பது வேறு,தீராத மனக் குழப்பத்தில் அதை ஊற வைத்து அப்படியே பிடித்து வைத்த புளி போல் இருப்பதால் என்ன பயன்? எனக் கேட்கும் ஆசிரியர்,
குடும்பம் என்றாலும் பணியாற்றும் அமைப்பு ஆனாலும், நட்பு வட்டமானாலும், எதிரிகளைச் சமாளிக்க எடுக்கும் முயற்சியாகளானாலும் தவறுகள் வந்துவிடுமே என்று முடிவெடுக்க ஒருபோதும் தயங்காதீர்கள்.ஒருவேளை, தவறு ஏற்படுமாயின் தன்முனைப்பு (எகோ) காட்டாமல் தவறைத் திருத்தி முன்னேற்றப் பாதையில் நடந்து செல்லுங்கள் என்ற ஆசிரியரின் வரிகள் ஒட்டு மொத்த சமூகத்தின் உழைப்பு விரயமாகமல், நம்மை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒளிவிளக்காய் அமைந்திருக்கிறது.
"மனித வாழ்வின் முழுமை எது?" எனும் கட்டுரையில்," ஒருவன் தனக்கென வாழாப் பிறர்க்கென உரியவன் ஆகும் போது அவன் தொண்டறத்தின் உச்சிக்குச் செல்கிறான்.இமயத்தின் உச்சிக்குச் சென்றவர்கள் கூட, சாதனையாளர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்தாம் என்றாலும் அவர்கள் அங்கேயே தங்கிவிட முடியாமல் கீழே இறங்கிவர வேண்டியவர்களே ! ஆனால், தொண்டறத்தின் உச்சிக்குச் சென்றவர்கள் என்றும் கீழே இறங்கி வராமல், அங்கேயே வாழ்பவர்கள்,மறையாதவர்கள்,மறக்க முடியாதவர்கள்,காலத்தை வென்றவர்கள். மனித வாழ்வின் முழுமை இது தான்" எனக் கூறியிருக்கும் ஆசிரியரின் கருத்துக்கள், சாதனைகளானாலும் மற்றவர்களின் நலனுக்காக இருக்கவேண்டும், நமது தனிப்பட்ட பெருமைக்காக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்வதாக இருப்பது வரவேற்கத்தக்கது.
உழைப்பினாலும், அயர்ச்சியானலும் களைத்துப் போய் இருக்கும் நம் உள்ளங்கள் புத்தாக்கம் பெறவே புத்தகம்! என்றும்,
புதுமையானதாக நம் அகத்தை ஆக்குவதினால் தான் அது "புத்தகம்" என்றும் புத்தகத்தினைக் "காரணப்பெயராக" கூறும் நூலாசிரியரின் எழுத்துக்களில் அழகு தென்படுகிறது.
"இப்படியும் மனிதர்கள்" எனும் தலைப்பிலான கட்டுரையில், "பெண்கள் என்றால், அவ்ர்கள் ஆண்களுக்கு விளையாட அழகுப் பொம்மைகளா?அலங்கார விற்பனைப் பொருள்களா? சிவப்பாக இல்லாதது அவர்தம் குற்றமா ? அதையே சாக்காக்கிக் கொண்டு பணம் பறிக்கும் திட்டமா ? உலகப் பேரழகியாகச் சொல்லப்படும் கிளியோபாட்ரா என்ற பெண்மணி கூட நிறம் கறுப்புதான் என்பது இந்தக் கொடுமையாளர்களுக்குத் தெரியாது போலும் ! காசு கொடுத்தால் கறுப்பு சகிக்கப்படுமா ? அட ஜென்மங்களே ! " என்று ஒரு தந்தைக்கு உரிய கோபத்தோடும், சிவப்பாக இல்லாதது அவர் குற்றமா ? எனும் அறிவியல்பூர்வமான சிந்தனையோடும் நூலாசிரியர் தொடுக்கும் வினாக்கள் நம்மைச் சிந்திக்கவைக்கின்றன.
"உணவுப் பழக்கங்கள் மூலம் கொலாஸ்ட்ராலைக் குறைக்க " டாக்டர்.சு.நரேந்திரன் அவர்கள் நூலில் இருந்து ஆசிரியர் மேற்கோள் காட்டிடும் வரிகள் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியவை ஆகும்."தினமும் பூண்டு சாப்பிடுவது(பம்பாய் மருத்துவக் கல்லூரி ஆய்வின்படி) 50பேர் தினமும் 3 பூண்டுப் பற்கள் பச்சையாக 2 மாதங்கள் உண்ண,  கொலாஸ்ட்ராலின் அளவு 15 விழுக்காடு; குறைந்துள்ளது.பூண்டு பற்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைத் தினமும் அருந்த ஒரு மாதத்தில் 7 விழுக்காடு  கொலாஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலாஸ்ட்ரால் 23% அதிகரித்துள்ளது.நல்ல கொலாஸ்ட்ராலை அதிகரிக்க  தினமும் அரை பச்சை வெங்காயம் அல்லது அதன் சாறு சாப்பிட்டால் 30 % அதிகரிக்கும் என்பது ஆய்வின் முடிவாகும்.இன்னும் விவரங்களைப் பெற "இதயத்தைக் காப்போம்" எனும் திரு.சு.நரேந்திரனின் நூலை வாங்கிப் படியுங்கள்" என்று வேண்டுகோள் விடுக்கிறார் நூலாசிரியர்.இது ஒரு எடுத்துக்காட்டுதான். இந்த நூல் முழுவதும் நூலாசிரியர் பற்பல நூல்களுக்கான மதிப்புரை போலவே பல இடங்களில் எழுதி நம்மை புத்தகங்களைப் படிக்க மீண்டும் மீண்டும் தூண்டுவது மிகச் சிறப்பாகும்.
பக்கம் 89ல்,"தொண்டறத்தினை ஆற்றாதவனும்,கோபத்தால் ஆட்டிவைக்கப்படுவனும் செத்த பிணமாகிவிடுகிறார்கள்"என்று
நூலாசிரியர் செம்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்.
மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் நூலாசிரியருக்கு எழுதியனுப்பிய "இதயமுள்ள இரைப்பை" எனும் கடிதமே கட்டுரை வடிவில் நூலாசிரியர் மூலம் நமக்கு அறிமுகமாகிறது.
 வண்ணக்கதிரில் வெளிவந்த குறுந்தகவல்  செய்திகளாக,"வீட்டுக்கூரை ; உயர்ந்த லட்சியங்களை ஏற்றிடுக,மின்விசிறி : நீ சூடானாலும்,மற்றவர்களை குளுமையாக வைத்திரு,கடிகாரம் : ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது, காலாண்டர் : எப்போதும் புதிதாய் இரு,கதவு : புதிய சிந்தனைகளுக்கு வழிவிடு போன்றவைகளைக் குறிப்பிட்டு,இளைஞர்கள் அனுப்பி மகிழும் எஸ்.எம்.எஸ்கள் இப்படி இருந்தால் நல்லது தானே "என்று கேட்கிறார் நூலாசிரியர்.இளைய சமுதாயத்தினர் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தியாக இருக்கிறது.
"யானைகளைத் தேடாதீர்கள் ; நாய்களைத் தேடுங்கள்" எனும் கட்டுரையில், அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல நட்பு அமையக் கூடாது.உண்மையான நட்பு என்பது ஒருவர் நல்ல நிலையில் இருந்தாலும் சரி,இல்லாதிருக்கும் போதும் சரி , நிழல் போலத் தொடருவதே.அவர்களே உயிர் நண்பர்களாவார்கள் என்று கூறும் நூலாசியர்,"நட்பாராய்தல்" எனும் தலைப்பில் நாலாடியாரில் 22அத்தியாயத்திலி உள்ள பாடலைக் கூறி,யானை பல தரம் அறிந்திருந்தும், தனக்கு உணவு கொடுத்துக் காக்கிற பாகனையே கொல்லுகின்றது.ஆனால்,தன்னையுடையவன் பிரயோகித்த  ஆயுதமானது,தன் உடலில் பொருந்தியிருக்கும் போதும் நாய் தன் வாலை ஆட்டும் என்று கூறும் நூலாசிரியர்,"இது நட்புக்கு மட்டுமல்ல.குடும்ப்ங்களுக்கும், இயக்கங்களுக்கும் கூடப் பொருந்தும்" என்று கூறுவது அருமையிலும் அருமையாக உள்ளது.இது போன்று பல்வேறு வாழ்வியல் வழிமுறைகளை அவருக்கே உரித்தான ஆற்றொழுக்கு நடையில் ஆசிரியர் இந்நூல் முழுவதும் விவரித்துள்ளார்.வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள். நூல் : வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -7,விலை ;ரூ.80. பக்கங்கள் 212.                                            


2 comments:

  1. வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
    முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!