Monday, October 24, 2011

தீ . . . வாளி!----அறிஞர் அண்ணா

தமிழரின் தன்மானத்தைக் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர். மடத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - காரணத்தோடு. முரட்டுப் பிடிவாதக்காரரும், மூடமதியிலே மூழ்குவதிலே, சேற்றிலே அமிழ்ந்து ஆனத்திக்கும் எருமைபோலக் களிப்போரும், எட்டிலே உள்ள எதற்கும், எம்மால் புதுப்பொருள் கூறமுடியும், புலமையின் காலணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோரும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்று கூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விருமபவில்லை. புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து, விண்கருக்கும்வரை உழுதாலும பயனில்லை. புத்தியின் உச்சியை அடைந்துவிட்டதாகக் கருதும் பேர்வழிகளும் புறம்போக்குக்கும் அதிக வித்தியாசமில்லை. புரட்சி வேகம் நாட்டிலே பெருக்கெடுத்து ஓடும்போதுதான், புறம்போக்குகளும் வயலாகி, வளம்பெறும் ஆனால் புரட்சி வேசம் உண்டாக தீவிரவாதிகள் முதலிலே, ஆரித்தீயும் ஆரிய வாளியும் கலந்ததெனவரும இப்பண்டிகையை பகீஷ்கரிக்கவேண்டும். ஆரியர் கொண்டாடினாலாவது பொருள் உண்டு. தோற்கடிக்கப்பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்டத் திராவிடர் அதனைக் கொண்டாடுவது, இனஇழிவுக்கு அடையாளமென்போம். கள்ளனிடம் சிக்கிக்கற்பழிக்கப்பட்ட கன்னி, கண்ணீருடன் இருக்கும்போது கள்ளீ! உன் பொருட்டு நான் எடுத்துக்கொண்ட பிரயாசை எவ்வளவு? அலுப்பு எவ்வளவு? இந்தச் சந்தோஷத்தை உனக்கு அளித்ததற்காக ஓர் அருமையான, பாட்டு பாடிக்கொண்டே என் கால்களைச் சற்று வருடிக்கொண்டிரு, நான் தூங்குகிறேன் என்று கள்ளன் கட்டளையிட, கன்னி, அவன் காலைப் பிடித்துக்கொண்டு, கானம் செய்வது போன்றது, தீபாவளியைத் தமிழன் கொண்டாடுவது! ஓநாய்க்கு உபசாரம் செய்ய ஆடு அமர்த்தப்படுவதுபோல, பக்காத் திருடனின் பாதக்குறடுகளை, சொத்தைப் பறிகொடுத்தோன் சுமப்பதுபோல, உதைக்கும் கழுதையின் காலுக்கு உதைப்பட்டவன், தங்கத்தால் இலாடம் கட்டுவதுபோல, கொட்டும் தேளை எடுத்துக் கண்களிலே செருகிக்கொள்வதுபோல, மனைவியைக் கற்பழித்தவனுக்கு மலரபிஷேகம் செய்வதுபோல, எந்த ஆரியம் மூடத்தனத்தை மூட்டித் தமிழகத்தைத் தீய்த்ததோ, மடைத்தனத்தை வளர்த்து தமிழரின் மானத்தை மாய்த்ததோ, சனாதனத்தைப் புகுத்தித் தமிழரின் செல்வத்தைச் சுரண்டிற்றோ, அந்த ஆரியத்துக்குத் தமிழர் தூபதீப நைவேத்யமிடுவது, அவர்களின் ஆணவத்துககு அறிகுறியான நாட்களை, விழாக் கொண்டாடுவதும் ஈனத்தனம் என்போம்.
தீயும் வாளியும், தமிழரைக் கெடுத்ததுபோதும், இனியேனும் தீபாவளி போன்ற தீயரின் திருவிழாக்களைக் கொண்டாடாது, திருந்துவரா, வைதீகர்கள் என்று கேட்கிறோம். எத்தனை தமிழர்கள் தீபாவளியை நாங்கள் கொண்டாடவில்லை என்று கூறுகின்றனரோ என்பதைப் பொறுத்துத்தான், தமிழரின் மறுமலர்ச்சி இருக்கிறது. இந்த நமது உணர்ச்சி, இன்று, சில ஆயிரவருக்கு மட்டுமே உண்டு என்ற போதிலும், அந்தக் தொகை பெருகிவருவது நமக்குப் பெருமகிழ்வூட்டுகிறது. இன்று நாம், தமிழரை நோக்கி, புதுவைத் தோழர் சிவப்பிரகாசம் அவர்கள் கேட்பதுபோல,
தீந்தமிழான செந்
தேன் மொழிநாடே
தீமை வைதீகம்
ஏனோ நீ ஏற்றாய்?
என்று கேட்கும் நிலையில் மட்டுமே இருக்கிறோம். என் செய்வது!
(திராவிட நாடு - 24.10.1943)

Thursday, October 13, 2011

ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன?

அண்ணா தி.மு.க.வுக்குச் சொல்லுங்கள்!

ஆயுத பூஜையைக் கலைஞர் ஏற்கவில்லை; ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேசுகிறார் என்று திமிரடியான வார்த்தைகளைப் பயன் படுத்தும் தினமணியே! தினமணியே!

கலைஞர், பெரியார், அண்ணா கொள்கை களைத்தான் சொல்லு கிறார். நியாயமாக பெரியார் அண்ணா கொள்கைகளைப் பின்பற் றாமல் அதற்கு எதிராக பார்ப்பனீயத்துக்கு வக் காலத்து வாங்கும் வகை யில் ஆயுத பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரைத் தான் விமர்சித்திருக்க வேண்டும், தினமணி! ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன? இதோ! எண்ணிப்பார் கோபியாமல்! எலக்ட்ரிக் இரயில்வே,

மோட்டார் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இவை களுக்காக மருந்து ஆப்ரே ஷன், ஆயுதங்கள், தூரதிருஷ் டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப்மெஷின் அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத் துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்,

இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனி தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் ஊழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற் றைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடு பட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம்.

ஆயுதபூசை, சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்! அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர்; நவராத்திரி கொண்டாடி னவர்களல்லர்! நூற்றுக்கு நுறுபேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

கர்ப்பூரம் கூட நீ செய்த தில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாத வன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இது வரை, என்ன, புதிய , அதி சயப் பொருளைக் கண்டு பிடித்தோம்? உலகுக் குத் தந்தோம் என்று யோசித் துப் பாரப்பா! கோபப் படாதே! உண்மை அப்படித் தான் நெஞ்சைக் கொஞ்சம் உறுத்தும். மிர ளாமல் யோசி. உன்னையும் அறி யாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல் களை எல்லாம் கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கி லேயன் வருவதற்கு இடையே இருந்த காலத் திலே அச்சு இயந்திர மாவது கண்டுபிடித்திருக் கக்கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டு பிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங் கத்தை அச்சடித்துப் படித்து அகமகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே! அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாடவைத்து மகிழ்கிறாயே! எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோ கப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரி சையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அசோசி யேடட் அல்லது இராயட்ர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில் லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை! சிபி, சினிமா பார்த்த தில்லை! தருமராசன், தந் திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளையெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கி றோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள் களைத் தந்த அறிவாளர் களை மறந்துவிடுகிறோம், அவர்கள்

சரசுவதி பூசை; ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கி றோம். இது முறைதானா?

பரம்பரைப் பரம்பரை யாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை; ஆயுத பூசை நமக்குப் பலன் தரவில் லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும்படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதாரப் புருடர்கள் காலத்திலே கூட இல் லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக் கும். அதையும் தாண் டினால் விவேகம் பிறக் கும். யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக் குள்ளாவது! - (திராவிட நாடு- 26.10.1947)

இதுதான் அண் ணாவின் கொள்கை! அந்த அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் கலைஞரைச் சாடுவதும், அந்த அண் ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத் தைக் கொடியிலும் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரைச் சாடாமல் விடுவதும் எதற்காக?

மனுவாதி ஒரு குலத் துக்கொரு நீதி என்பார் களே - அது இது தானோ!

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!