Sunday, October 27, 2013

அந்தப் பதினெட்டு நாட்கள்- பே.பா.குபேரன் -சிறுகதை

அந்தப் பதினெட்டு நாட்கள்- பே.பா.குபேரன்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் இந்திரனுக்கு ஒரு யோசனை. அடுத்தது மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டும். மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் _ இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி திரைக்கதையை உருவாக்க வேண்டுமே... இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு கண்ணயர்ந்தார் இந்திரன். அவரது மனத்திரையில் வியாசர் விருந்து காட்சிகளாக உருவெடுக்க ஆரம்பித்தது. அப்போது _
நாள்தோறும் செய்துவரும் விநாயகர் பூசனையை முடித்தபோது கண்ணெதிரே ஒரு வெளிச்சம். இந்திரனுக்குக் கண்கள் கூசின. சாட்சாத் விநாயகர் வந்து நின்றார்.

வணக்கம் கடவுளே! என் பாக்கியமே பாக்கியம்! என் வழிபாட்டுக்குப் பலன் கிடைத்துவிட்டது. வாழ்த்துங்கள் சுவாமி _ என்னை வாழ்த்துங்கள்!...
வாழ்த்துகிறேன் _ ஆனால் ஒரு நிபந்தனை...
சொல்லுங்கள் சுவாமி!...
நீ தயாரிக்கும் மகாபாரதக் கதையை நான்தான் எழுதினேன்; தெரியுமா...
தெரியும் சுவாமி! எழுதுகோல் இல்லாத காலத்தில் உங்களுடைய தந்தத்தை ஒடித்து எழுதினீர்களாமே_
படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுகின்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிடு. படத்தின் பெயருக்கு முன் விநாயகர் அளிக்கும் என்று குறிப்பிட வேண்டும். இதுதான் என் கண்டிஷன்!
உங்களுக்கும் சினிமா ஆசை வந்துவிட்டதா சுவாமி? உங்கள் விருப்பப்படியே திரைக்கதை வசனம் எழுதிவிடுங்கள்!...
சரி சரி! உன் முயற்சிக்கு என்னுடைய ஆசிர்வாதம்! உன் படம் வைரவிழா கொண்டாடும்!... சந்தேகமே இல்லை...
முழுமுதற் கடவுள் விநாயகரே தரிசனமாகி சினிமா சான்ஸ் கேட்டுவிட்டார். மறுக்க முடியவில்லை இந்திரனால். ஏடுகளில் செய்திகளும் விளம்பரங்களும் வெளிவரத் தொடங்கின. இந்திரன் மூவிஸ் தயாரிக்க இருக்கும் மகாபாரதக் கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேவை...
பிள்ளையாருக்கு வாய்ப்புக் கொடுத்தது சம்பந்தமாக பைனான்ஸியர் குபேந்திரனுக்கு மகிழ்ச்சி. பகவானின் ஆசி, அத்துடன் பிள்ளையாரின் பக்தர்கள் குவிந்து விடுவார்கள் _ வைரவிழா கொண்டாடலாம் _ மூன்றுமாத காலத்திற்கு நுழைவுச்சீட்டு முன்பதிவு ஆகிவிடும்! நிச்சயம் சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் போட்டு வைக்கலாம்....
இந்திரன் மூவிஸ் வாசலில் தேவர்கள் கூட்டம். நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு நீண்ட வரிசை... இந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் அலுவலகத்தில் நுழைந்தார் ஒரு முதியவர். நரைத்த தாடி, மீசை, ஒரு கையில் தடி _ இன்னொரு கையில் கமண்டலம்; இவர்தான் வியாசர். கோபம் கொந்தளித்தது அவர் முகத்தில்.
பெரியவரே! உமக்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்க முடியாது _ தயவுசெய்து போய் வாருங்கள்!
நான் உங்களிடம் வாய்ப்புக் கேட்டு வரவில்லை! நான்தான் வியாசர்! மகாபாரதம் என்னுடைய கதை! இந்திரனும் குபேந்திரனும் திகைத்தனர்.
அப்படியா_
இமயமலைச் சாரலில் தங்கியிருந்த சமயத்தில், நான் கதையைச் சொன்னேன். அதைத்தான் விநாயகர் எழுதினார். இனிமேல் விளம்பரத்தில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால்_
பெரியவரே! கோபப்படாதீர்கள்! நாங்கள் விநாயகரைக் கலந்துகொண்டு முடிவெடுக்கிறோம்...  அவசரப்பட்டு வழக்குத் தொடர்ந்து விடாதீர்கள் _ போய் வாருங்கள்.
பெருமூச்சு விட்டபடி புறப்பட்டார் வியாசர். வியாசர் சொல்வதும் நியாயம்தானே_ இந்திரன் நினைத்துக் கொண்டார்.
ஏடும் எழுத்தாணியுமாக விநாயகர் வந்து நின்றார். வாருங்கள் விநாயகரே! கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஒரு பெரியவர் _ வியாசராம்! இங்கே வந்து சத்தம் போட்டார் என்ன சேதி?
மகாபாரதம் _ அவர் சொல்லிய கதையாம்! எங்களுக்கு ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். இது உங்கள் கதையா அல்லது வியாசரின் கதையா?... _ பெரிய கதை! வியாசர்தான் கதை சொன்னார். அவர் கதை சொல்லிய பிரகாரம் இப்போது நான் கதை எழுதவில்லை... பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்துதான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். அவர் சொல்லிய கதையைப் படமாக்கினால் திவால் ஆகிவிடுவீர்கள். படத்திற்கு பாக்கியராஜ் பாணியில் அந்த பனினெட்டு நாட்கள் என்று பெயர் வைத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகு வியாசர் பார்க்கட்டும் _ அவர் சொன்ன மூலக்கதைக்கும் நான் எழுதிய திரைக்கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது... விநாயகர் சிரித்தார்.
மகாபாரதக் கதைக்கு ராஜாஜி வியாசர் விருந்து என்றுதானே பெயர் வைத்தார். ஆனபடியால் _
பெயர் போடும்போது... கீழ்வரிசையில் ரொம்பவும் சின்ன எழுத்துகளில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிடுங்கள்; அதுபோதும்! நான் ரொம்பவும் சிரமப்பட்டு திரைக்கதை அமைத்திருக்கிறேன். கேளுங்கள்! பதினெட்டு நாட்கள் யுத்தம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் இரவில் வீரர்கள் இன்பக் கனவு காண்பார்கள்... எல்லாம் தேன்நிலவுக் காட்சிகள். இத்துடன் அரண்மனையில் பெண்கள் குளிக்கும் காட்சி _ அஸ்தினாபுரத்தில் அழகுப் போட்டி! தாமரைப் பொய்கையில் நங்கையர் நீச்சல் போட்டி! இத்துடன் துச்சாதனன் திரவுபதியின் துகிலுரியும் காட்சி... தேவர்கள் ஆனந்தப்பரவசம் அடைவார்கள் _ ஜொள்ளு விடுவார்கள்!...
சூப்பர் சுவாமி! யுத்தக் கதையை முத்தக்கதை ஆக்கிவிட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை சுவாமி! நன்றி... நன்றி... நடிகர்கள் தேர்வு நடைபெற்றபோது, கருட வாகனத்தில் திருமால் வந்து இறங்கினார். எல்லோரும் சிரம்தாழ்த்தி வணங்கினார்கள். சொகுசு நாற்காலியில் உட்கார்ந்தார் பகவான். இந்திரன் உபசரித்தார்.
பகவானே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நாங்களே வைகுண்டலோகம் வந்திருப்போமே! பாற்கடல் பள்ளியைவிட்டு இந்தப் படக்கம்பெனிக்கு ஏன் வந்தீர்கள் சுவாமி? உங்கள் தரிசனம் _ நாங்கள் தன்யர்கள் ஆனோம்...
பாரதக் கதை நடந்த காலத்தில் நான்தான் கண்ணபிரானாக அவதாரம் செய்தேன். ஸ்ரீகண்ணபிரான் வேஷத்திற்கு என்னையே போட்டுவிடுங்கள்... ரொம்பவும் பொருத்தமாக இருக்கும்!...
கண்ணனாக நீங்கள் நடிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை... ஆனால், _ என்.டி.ராமாராவ் பாணியில்தான் நீங்கள் நடிக்க வேண்டும். உங்கள் இஷ்டப்படி எல்லாம் நடிக்கக்கூடாது! என்.டி.ஆர். நடித்த படங்களின் வீடியோ போட்டுக் பார்த்து அவரைப் போலவே நடித்துவிடுங்கள்!...
நான்தான் கண்ணன். உங்களுக்கும் தெரியும். நான் என்.டி.ஆரைக் காப்பி அடிக்க வேண்டுமா...
ஆமாம் சுவாமி! அப்போதுதான் படம் ஓடும். விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவார்கள். நடிப்புக்குச் சம்பளமாக, வைகுண்டம் ஏரியாவுக்கு நீங்கள் விநியோகஸ்தர்!... இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணனாக நடிக்க திருமால் ஒப்புக்கொண்டார். குபேந்திரா, நான் திருப்பதியில் என் கல்யாணத்திற்காக வாங்கிய கடனைச் சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்...
மகாபாரத காலத்தில் செத்துப்போன தேவர்கள் இப்போது சொர்க்கத்தில் அந்தந்தக் கதாபாத்திரங்களாக நடிக்க வந்துவிட்டார்கள்.
ஒரு வழியாக படப்பிடிப்பு ஆரம்பமானது. நாரதர், இசை அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். விநாயகரின் எழுத்து, இந்திரனின் இயக்கம்... அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்படும் நாள் நெருங்கியது....
அந்தப் பதினெட்டு நாட்கள் திரைப்படத்தின் மூலமாக பகவத்கீதையின் ரகசியத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார் விநாயகர். உண்மையில் கீதா ரகசியம் என்பது என்ன?...
போர்க்களத்தில் இரு தரப்பினரும் அணிவகுத்து நிற்கிறார்கள். தேரோட்டியாகிய கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான். உற்றார் உறவினர்களைப் போரிட்டுச் சாகடித்துவிட்டு சக்கரவர்த்தியாக வேண்டுமா! வேண்டாம்... இப்படி முடிவு செய்த அர்ச்சுனனுக்கு மந்திர உபதேசம் செய்கிறார். ஒரே வார்த்தை... பதவியே பரமசுகம்! ஆமாம்... பதவியே சுவர்க்கம்! பதவியே வாழ்க்கை!... பதவி நாற்காலி பார்ப்பானுக்கு மட்டும்... மற்ற இனத்தவர்கள் அவர்களுக்குப் பல்லக்குச் சுமக்க வேண்டும். பிரம்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணருக்கு மட்டும் _ உத்தியோகம் புருஷலட்சணம்! ஏனையவர்கள் கர்மபலன், பழைய பிறவி, விதி என்று மூளைச்சலவை செய்யப்பட்டு பகுத்தறிவை இழந்துகொண்டு இருக்க வேண்டும்... கட்டிய மனைவியைக் காப்பாற்ற வக்கில்லாத இராமனையும், பிறன் மனையைப் பெண்டாள நினைத்த கிருஷ்ணனையும் காலமெல்லாம் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்... வருணாசிரமதர்மம் என்னும் நச்சுமரத்தின் வேர்தான் பகவத் கீதை!...
கண்ணனின் உபதேசம் கேட்டபிறகு, புதிய உற்சாகத்துடன் போரிட்டான் அர்ச்சுனன்.. நாடு சுடுகாடானது; பாண்டவர்களுக்கு வெற்றி! செத்தவர்கள் எல்லாம் வைகுண்டலோகத்தில் வாழ்கிறார்கள்... சுபம்... படம் முடிவடைகிறது.
இதோ, படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. பிரிவியு தியேட்டரில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மற்றும் முக்கிய தேவர்களுக்காக அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. வாசலில் பெரிய அளவில் விநாயகர் கட்அவுட் _ எல்லோருக்கும் இலவச கொழுக்கட்டை, சுண்டல்!...
மயில் வாகனத்தில் முருகன், காளைமீது சிவன், அன்னப்பட்சியில் பிரம்மா, சிம்ம வாகனத்தில் பார்வதி, கருடன் மீது திருமால் அனைவரும் வந்துவிட்டார்கள். இந்திரனும், குபேந்திரனும் வந்தவர்களை வரவேற்று வணங்கி தியேட்டருக்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது_ இருவருக்கும் அதிர்ச்சி. காக்கை வாகனத்தில் ஒருவர் வந்து இறங்கினார். கால் ஒன்று நொண்டி _ கருத்த உருவம் _ அவர்தான் சனிபகவான். தேவேந்திரா, போச்சு, எல்லாம் போச்சு. இவரை யார் கூப்பிட்டார்கள்? இவர் பார்வை பட்டால் எல்லாம் சாம்பலாகிவிடுமே... சனிபகவானையும் காகத்தையும் பார்த்து தேவர்கள் கிண்டலாகச் சிரித்தனர். இந்திரன் சமாதானப்படுத்தினார். விவரம் தெரியாத தேவர்கள் _ அவர்கள் சிரிப்பதைப் பெரிசு பண்ணிக் கொள்ளாதீர்கள் சுவாமி!
இந்திரன், குபேந்திரன் இருவரும் சனிபகவானின் திருப்பாதங்களில் விழுந்தனர். ஆளுக்கொரு காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
பூலோகத்தில் நான் யாரையும் விட்டுவைப்பதில்லை. எல்லாரையும் பிடித்துக் கொள்வேன். நீங்கள் ஏன் என்னைப் பிடித்துக் கொள்கிறீர்கள்?...
ப்ளீஸ் சுவாமி ப்ளீஸ்! தயவுசெய்து நீங்கள் படம் பார்க்க வேண்டாம்! திரும்பிச் சென்று விடுங்கள். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும்! படம் நூறுநாள் ஓடியபிறகு வீடியோ கேசட் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் சாவகாசமாக படம் பார்க்கலாம்...
அரிச்சந்திரன், நளமகாராசா கதைகளை நினைத்துப் பார்த்து இருவரும் சின்னக் குழந்தைகள்போல் கேவிக்கேவி அழ ஆரம்பித்தனர். பகவானே! வரக்கூடிய லாபத்தில் ஒரு பகுதி உங்களுக்குக் காணிக்கை வைக்கிறோம். தயவுசெய்து மனம் இரங்குங்கள்!
சனிபகவான் சொன்னார், எல்லாரையும் வா வா என்று அழைத்துவிட்டு என்னை மட்டும் போ போ என்று துரத்துகிறீர்கள். இது நியாயமா? சரி சரி... நான் போகிறேன்; என் காலை விடுங்கள்...
இந்திரன், குபேந்திரன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் சனிபகவான். காகம் அவர் அருகில் வந்து நின்றது. ஏறி அமர்ந்ததும் வானவெளியில் பறந்தது... கா, கா... ஒரே சத்தம்.
கா... கா... சத்தம் கேட்டு கண்விழித்துக் கொண்டார் தயாரிப்பாளர் இந்திரன். மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்... துணிமணிகளைச் சலவைசெய்து அழுக்கை நீக்கி சம்பாதிக்கிறார்கள் _ மக்களின் மூளைகளைச் சலவைசெய்து அழுக்கைச் சேர்த்து சம்பாதிக்கவும் வேண்டுமா, வேண்டாமே... இந்திரனின் மூளைக்கு மாமேதை லெனின் சொன்ன வாசகம் நினைவிற்கு வந்தது...
மதம்... மக்களுக்கு அபினி. ஏழை மக்களுக்குக் கடிவாளம். இந்தக் கடிவாளத்தை ஏழைகளுக்குப் பூட்டிவிட்டதால் அவர்கள் பணக்காரர்களுக்குச் சாதகமான பாதையில் ஒழுங்காகச் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

Saturday, October 19, 2013

தீபாவளிப்பண்டிகை— தந்தைபெரியார்

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள்.
துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலான தாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக் கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங் களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ “காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது” என்றால் உடனே “கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய “காளைமாடு எப்படி கன்றுப் போடும்” என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங் களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண் ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறு வதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார் களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு” என்பாரும் “புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு “நாங்கள் தான் பிரதிநிதிகள்” என்பாரும் மற்றும் “திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு” மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற “படித்த” கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங் களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

****

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமாயிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
தீபாவளியின் கதைச் சுருக்கம்:

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டு மென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.

முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? “எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு”க்கும் பூமி “தேவி”க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி “தேவி” என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! “பொறுமையில் பூமிதேவிபோல்” என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த “அம்மையாரை” உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட் டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
——————— தந்தைபெரியார் — “குடிஅரசு” 01.11.1936

பாதுகாக்கப்பட வேண்டிய பகுத்தறிவுச் சிற்றூர் நன்றி;வண்ணக்கதிர்



Saturday, October 12, 2013

எண்ணிப்பார் . . . . கோபியாமல்! அறிஞர் அண்ணா

எண்ணிப்பார் . . . . கோபியாமல்!அறிஞர் அண்ணா
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக், கண்டுபிடிக்கும் கருவி
டார்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்குள் போகக் கருவீ
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருகக மனிதனின் உழைப்பைக் குறைக்கம் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்.
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!!
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இந்தியாவுக்கு வழிகண்டுபிடித்த வாஸ்கோடிகாமா இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம்,
ஆயுத பூசை
செய்தவர்களல்ல! நவராத்திரி கொண்டாடினவர்களல்ல!
நூற்றுக்கு நூறு என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே
சரஸ்வதி பூசை
இல்லை!
ஓலைக்குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கற்பூரம் கூட, நீ செய்ததில்லை.
கடவுட் படங்களுக்கு அலங்காரத்துககுப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய்,
சரஸ்வதி பூசை
ஆயத பூசை!!
ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்சிறாயே!!
ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய அதிசயப் பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்கத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்.
உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ய நூற்களை எல்லாம்கூட, ஓலைச்சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு யந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!
எல்லம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுததிக்கொண்டு, பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயேஇ சரியா? யோசித்துப பார்!
சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது - என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, சாரதர் சர்விஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது ராய்ட்டர் சர்விஸ் - தந்தி முறை - அவன் தந்தது!
தசரதன் வீட்டிலே டெலிபோன் இருநததில்லையே!
ராகவன், ரேடியோ கேட்டதில்லை.
சிபி, சினிமா பார்த்ததில்லை!
தருமராஜன், தநிந்திக்கம்பம் பார்த்ததில்லை!
இவைகளெல்லாம், மிகமிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது - அனுபவிக்கிறோம்.
அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருளைத் தந்த அறிவாளர்களை மறந்துவிடுகிறோம். அவர்கள்
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்துவிடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும, பார்த்தும், ரசிக்கிறோம். இது முறைதானா?
பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்துவிட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும், பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.
யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!
சினிமாவிலே, முன்பு ஓர் வேடிக்கை பார்த்தேன், கவனத்திற்கு வருகிறது, சொல்கிறேன்.
ஒரு இரும்புப் பெட்டி! அதிலே, என்ன வைத்திருக்கிறான் என்று எண்ணுகிறாய்? வைரம், வைடூரியமா, தங்கம், வெள்ளியா? இல்லை! கத்திரி, வாழை, கீரைத் தண்டு, இப்படிப்பட்ட சாமான்களை!
ஒரு லோபி! அவன் இரும்புப் பெட்டியிலே, வைத்திருக்கிறான், இந்தச் சரக்குகளை. மனைவி, சமயலுககாக வந்து கேட்கும்போது, இருமபுப் பெட்டியை ஜாக்கிரதையாகத் திறந்து கத்தரி ஒன்றும் வாழையில் கால்பாகமும், தருகிறான்! பிறகு பெட்டியைப் பூட்டி விடுகிறான்.
காய்கறியின் விலை என்ன, அதை வைத்துப் பூட்டி வைத்திருக்கிறானே இரும்புப் பெட்டி, அதன் விலை எவ்வளவு!
அவன் யோசிக்கிறானா அதை.
அதுபோலத்தான், மேனாட்டு, அறிஞர்கள் கொடுத்த இரும்புப்பெட்டி போன்ற விஞ்ஞான சாதனத்துககுள்ளே, நாம், நமது பழைய கருததுக்கள், முறைகள், பூசைகள் ஆகிய சில்லறைகளை வைத்துக்கொண்டு காலந்தள்ளுகிறோம்.
எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, சினிமாவிலே, இந்தக் காட்டிசியைக் கண்ட உடனே கொட்டகையிலே இருந்தவர்கள், அட! பைத்தியக்காரா! என்று கேலி செய்தனர்.
நமது போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையிலே எவ்வளவு பேர், கேலி செய்தார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்?
நாம் கட்டிக் கழித்த துணியை, ஒட்டுப்போட்டு, ஓரம் வைத்துப் போட்டுக் கொண்டு ஒரு ஆள், நம்மிடமே வந்துநின்று, புதுசா ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன் - அருமையான துணிகள் இருககு நம்ம கடைக்கே வாங்க - என்று நம்மையே அழைத்தால் நமக்கு எப்படி இருக்கும் . . . .?
(திராவிடநாடு)

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!