Friday, August 30, 2019

பைந்தமிழ் மொட்டுகளுக்குத் தாலாட்டு

ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...

(1)ஆரா வமுதே! அருந்தமிழர் காப்பியமே!!
தேரா தெதையுந் தெளியாத் தென்னகமே!!
பொன்வான் கதிரே! புவியில் பிறந்தோரெல்லாம்
உன்றன் உறவென்றே ஓதவந்த பேரருளே!!(2)
நூறாயி ரமாண்டு நுடக்கிவைத்த மதஞ்சாதி,
கூராய்ந்துக் குப்பையெனக்
கொளுத்தவந்த பகுத்தறிவே!!(3)
வேராங் கிளைகளையே விருந்தோம்பித் தாங்குதற்கே
சீராய்ப் பிறந்துவந்த செல்லமே கண்ணுறங்கு!!.... செல்லமே கண்ணுறங்கு!!
செங்காந்தள் பூச்சரமே!! செந்தமிழே !!!
நீயுறங்கு!!....செந்தமிழே !!!
நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...
(5)
கானக் குயில்மொழியே! கட்டிவைத்த மல்லிகையே!!
மானம் அழகென்னும் மாத்தமிழர் பண்பாடே(6)
கூனில் முழுநிலவே! குதித்தாடும் மயிலழகே!!
வேனில் முடித்துவைக்க வீடுவந்த தென்காற்றே!!(7)
ஆனிப்பொன் தொட்டிலே! அழகேநீ கண்ணுறங்கு!!
அன்னச் சிறகாலே! அடுக்கிவைத்த மெத்தையிலே!!
சின்னக் கண்மூடி சிணுங்காமல் நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...

(8)
அய்யன் சொன்னகுறள் அழகாக எடுத்தியம்பிப்
பொய்யர்  புரட்டுகளைப் புறங்காணச் செய்வாயோ(9)
உய்யும் வழிதேடி உலழு முலகோர்க்கு
பொய்யா மொழிசொல்லி பொருளு முரைப்பாயே(10)
உண்ணல் சமனாக்கி உழைப்பும் பொதுவாக்கி
உலகம் ஒன்றாக்க உறுதி கொள்வாயோ(11)
நம்மில் பிளவாக்கும் நரியார் செய்கையெண்ணி
விம்மி யரற்றாமல் வேங்கையே! நீயுறங்கு!!
வேங்கையே! நீயுறங்கு!!
வேளை வரும்   கண்ணுறங்கு!
வேளைவரும்...... கண்ணுறங்கு !!

கலைவாணர்


கலைவாணர்

நினைவு நாள்


கிந்தனா ரென்றுபேர் சாற்றி - நீ
கேடாம்ப ழங்கதை மாற்றி - ஒரு
கிளிபோலவும் மொழிபேசிய
திரையோவியம் மறைந்தேகிடக்
கிளர்ந்தாய்! - புகழ் - அளந்தாய்!!

வந்தப டத்தினி லெல்லாம் - நீ
வந்துக தைத்தன வெல்லாம்
மனையாளவள் அறிவாகிய
துணையேகவு விதைதூவிய
வழியே! - அறிவின் - ஒளியே!!


வாடிய உள்ளங்கள் பார்த்து - நீ
வாரிவ ழங்கினாய் ஆர்த்து - உன்
மனமாகிய கடலேயொரு
அலையாகிய பொருளேதரு
மன்றோ - அருள் - குன்றோ!!


 தேடிய செல்வங்கள் தீர்த்து - நீ
சென்றாயோ மாண்பினைச் சேர்த்து - அத்
திரைவானதில் நிலவாகியும்
மறையாதொரு புகழாகியும்
சென்றாய் - எம்மை - வென்றாய்

Wednesday, August 7, 2019

வீட்டிற்கு வரப்போகும் புதுவரவிற்கு வரவேற்பு


எடுப்பு:
பொன்னே புதுவானே
பொன்னின் மணியென
பூப்பாய் இந்நாளே..

உந்தன் முகங் காணத்தான் தவிக்கின்றோம்..

உன்மழலை கேட்கத்தான் துடிக்கின்றோம்

தேரில் வாராய் துன்பந் தீரவாராய்

தொடுப்பு 1:
அன்னைத் தமிழின் அழகென வருக...
தந்தை குணத்தில் தளிரென வருக...

எங்கள் இனங் காப்பாய் தேனின்
இனிய தழிழாளே...

ஊரே கூடி உனைப் பார்க்கவே...
உறவும் பாடி உனை வாழ்த்தவே..
(பொன்னே..புதுவானே)

தொடுப்பு 2;
நாளை யெண்ணி நாங்களு மிருப்போம்

நங்கை முகங் கண்டு நகைப்பினில் குதிப்போம்...

நாட்டையு மறவாதே அம்மாநீ
நன்றியு மறவாதே

வாநீ யிங்கு வளருங் கதிர்
வந்தால் தானே புலரும் புவி...
(பொன்னே..புதுவானே)

சுப முருகானந்தம்.
உறுப்பினர் எண் வழங்கப்படவில்லை அம்மா
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!