Thursday, September 26, 2019

தம்பி. செ.சுப்பிரமணியன் முதலாமாண்டு நினைவுநாள்

#ஆசிரியன்
பொன்னுடல் நெஞ்சில் பெரியார்
புகன்றவை போற்றி போற்றித்

தென்றலை மிஞ்சும் மென்மை
தேனிதழ் தன்னில் தேக்கித்

தன்னல மில்லா வாழ்வில்
தன்னையே கரைத்த தம்பி

சென்றது மெங்கே யென்று
தேடுவோம் தினமும் காலை

தந்தைதாய் மறுத்த போதும்
தயவுடன் கெஞ்சிக் கெஞ்சிக்

கந்தையா யிருந்தோர் வாழ்வில்
கல்வியைப் புகட்டு தற்கு

முந்தியை விரித்துத் தானம்
முடிந்தவ ரிடத்தில் பெற்று

சிந்திய வேர்வை யிந்தச்
சீர்மிகு நிலத்தைக் காக்கும்

வந்தரு ளென்றே யுன்னை
வாயினா லழைக்க மாட்டேன்

தந்தது போதும் தம்பி
தாயக வுரிமைப் போரில்

முந்திநீ  நின்றாய் நாளும்
முடிந்தவை யாவுஞ் செய்தாய்

சிந்தையில் நினைத்த தெல்லாம்
செயலினில் செய்வோ மய்யா!!
விடுதலை வேண்டி விலையென் றுயிரைக்
கொடுவெனக் கொற்றவன் கூறக் கொடுத்தாய்
வடுவென நெஞ்சில் வரைந்தவுன் கோலம்
விடுபடு மோவெமை விட்டு.

செப்'26 திலீபன் நினைவு நாள்.

Friday, September 20, 2019

அவர்தாம்_பெரியார்



#பெரியார்141.

#அவர்தாம்_பெரியார்

கேள்வி கேட்பவன் நாவில் இருப்பார்
கேட்டுத் தெளிபவன் நெஞ்சில் இருப்பார்
வேள்வி யாலனைத்தும்  விளையு மென்பானின்
விலாவினை முறித்து வேலெனக் கிளர்வார்.
                                                (கேள்வி)
நாள்பலன் பார்த்து நடுங்கிச் சாவோர்
நல்வழி யுணர்த்தும் நண்பனாய் நிற்பார்
தோள்வலி மறந்து தொண்டறங் காக்கும்
தூயவர் வாழ்வில் சுடரென ஒளிர்வார்
                                                 (கேள்வி)
மான அறிவின் அழகில் சிரிப்பார்
மனிதர் ஒழுக்க நெறியில் இருப்பார்
காலந் தோறும் பேதங் களையும்
களத்தில் தானே கருத்தாய் நிற்பார்
உலகை ஒன்றாய் ஆக்கத் துடித்து
உரிமை கோரி ஓங்கி ஒலிக்கும்
கலகக் குரலின் கனலாய் இருப்பார்
கறுக்கல் விலக்கும் சிவப்பாய் மிளிர்வார்
                                                       (கேள்வி)

Sunday, September 15, 2019

#பேரறிஞர்_அண்ணா_பிறந்தநாள்

வழுவிலா குறள்நெறி வாழ்வினைக் கற்றவன்
முழுவதும் இத்தரை முத்திரை பதித்தவன்
கொலுவினில் இருப்பினும் குடிசையில் வாழ்பவர்
விழிகளின் சிரிப்பினை விளைக்கவே விழைந்தவன்
ஆரிய மாயைகள் அனைத்தையும் விளக்கியே
போரினைத் தொடுத்தவன் பொசுக்கிட அழைத்தவன்
இந்தியைத் திணித்துமே எம்மொழி அழித்திட
வந்தவம் மந்திகள் வாலினை அறுத்தவன்
மன்னவன் சொன்னசொல் போற்றியே
இன்தமிழ் நாட்டினை ஏற்றுவோம் பாரிலே!!

Thursday, September 5, 2019

ஆசிரியர்தினத்தில்..

#ஆசிரியர்தினத்தில்.....

எல்லோரும் கல்விபெற்று ஏற்றமுற வேண்டுமென
கல்லாரின் கல்லடிக்கும் கற்றவரின் சொல்லடிக்கும்
நில்லாது நாட்டின் நிலைமாற்றிச் சென்றவர்தம்
நல்நினைவைப் போற்றுவோ மின்று.
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!