Friday, March 27, 2020

கொரானா - தாண்டுவோம் இந்தப் பேரிடர் நாளே!

போடென்றான் வீட்டுக்குள் பூட்டு - நாம்
போட்டாலே நிற்குமா வாயூறும் பாட்டு
கேடென்று சொல்லவே  கேட்டு - உறவுங்
கிட்டவ ராமல்தான் வைத்தோமே வேட்டு!!
                                      (போடென்றான்)
யாருமே யெண்ணினோ மில்லை! - இந்த
ஞாலமி துபோலக் கண்டதே யில்லை!!
போருக்குங் கொட்டுவான் கோடி! - இந்தப்
பொல்லாத நோய்வெல்லக் கண்டானா தேடி!!
                                         (போடென்றான்)

திண்டாடி நின்றோமே வாடி - பசித்
தீர்த்திட யார்தந்தார் நம்மையே நாடி
அன்றாடங் காய்ச்சிகள் வாட்டம் - அதில்
ஆள்வோருக் கெப்போது மில்லையே நாட்டம்!!
                                             (போடென்றான்)

வாயிலே செய்கின்றார் ஜாலம் - அவர்
மாறுவ தென்றென ஏங்குவோம் நாளும்
நோயினை வோட்டவென் செய்வார் - இல்லை
நொந்தபின் வந்திங்கோ ஆறுதல் சொல்வார்
                                        (போடென்றான்)
                 

ஆயினும் நம்பிக்கை கொண்டு! - நாம்
அத்தனை பேருமே ஒன்றாக நின்று!!
தாயினைச் சேயினைப் போலே! - சேர்ந்து
தாண்டுவோ மிந்தப் பேரிடர் நாளே!!
                                         (போடென்றான்)

Sunday, March 1, 2020

அப்பா....!!

#அப்பா

காட்டிலு மேட்டிலு நானே - கண்ணில்
கண்டதை மெய்யென நம்பிவைத் தேனே

கூட்டினில் முட்டையென் றென்னை - வைத்துக்
கூட்டினா யின்னுயிர் வாழ்வது தன்னை

ஊட்டினா யின்பத்தேன் நாவில் -  வெற்றி
ஊன்றினாய் வாழ்வினில் ஒவ்வொரு நாளில்

கேட்காமல்  தந்தாய்நீ யாவும் - உனக்
கேதுநான் தந்தேனோ இத்தனை நாளும்

வாட்டத்தை நான்கண்ட தில்லை - நான்
வாடநீ கண்டுமே நின்றது மில்லை

பாட்டொன்றில் சொல்லவோ வந்தேன் - உயிர்ப்
பாலாதால் உன்னைக்கு ளிப்பாட்ட வந்தேன்

ஆட்கொள்ள வேண்டும்நீ அப்பா -  உன்
அன்பொன்றே நான்கேட்டேன் அஃதென்ன தப்பா?
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!