Monday, July 18, 2011

மாணவ மணிகளே, கொஞ்சம் கேளுங்கள்!- தமிழர் தலைவர் கி.வீரமணி

மாணவ மணிகளே, கொஞ்சம் கேளுங்கள்!   

வெளிநாடுகளில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற கல்வியாளர்களான அறிஞர்கள் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களுக்கு பயன்படும்படி பத்து அறிவுரைகளை இரத்தினச் சுருக்க மாகக் கூறியிருக்கிறார்கள்!
அந்த 10 கட்டளைகளை நமது மாணவ மணிகள் பின்பற்றினால் அவர்களது வெற்றி உறுதி. வெற்றி என்று நாம் குறிப்பிடும்போது, வெறும் தேர்வில் வெற்றி என்பதை மட்டும் எண்ணிக் குறிப்பிடவில்லை. அது முக்கியம்தான் என்ற போதிலும் கூட, அதைவிட முக்கியமாக அவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெற்று வாகை சூடுவார்கள் என்பது உறுதி.
1. விடாமுயற்சி மிகவும் தேவை. ஒரு முறை முயன்று செயல்களில் ஈடுபடும் போது உடனே வெற்றி கிட்டவில்லை என்ற உடனே பலர் சலிப்படைந்து, சங்கடப்பட்டு, நொந்து நூலாகி இனிமேல் நமக்குப் படிப்பே வராது போலிருக்கிறது. எனவே நாம் ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற அவசரப்பட்ட ஆத்திர முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை விட மாபெரும் தவறு வேறு கிடையாது!
வெற்றி வராமல் தோல்வி கிடைத் தால் மனமுடைந்து போகவேண்டிய அவசியமே இல்லை. மீண்டும் மீண்டும் -களைப்பு, சோர்வு இன்றி துணிச்ச லுடன் அம் முயற்சியில் ஈடுபட்டுத் தொடர்ந்தால் மறுமுறை நிச்சயம் வெற்றி கிட்டும்.
இது ஏதோ தேர்வுக்கு மட்டும் பொருந்தும் உண்மை அல்ல; வாழ்க்கை யிலும் எத்தனையோ முறை தோல்வி கண்டு மீண்டும் முயன்று வெற்றி பெற்றவர்களின் கதைகள் - ராபர்ட் புரூசிலிருந்து, விஞ்ஞானி எடிசனிலி ருந்து எத்தனையோ எடுத்துக் காட் டுகள் உண்டே வரலாற்றில்.
2. அறைகூவல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். அறைகூவல்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் வரவேற்று, எதிர் கொள்ளுங்கள்; காரணம் அவை அனைத் தும் அனுபவங்களாகும். நன்மை வாழ்வில் கிட்டுகின்ற அவைகளை அனுபவிக்காவிட் டால், அதனை முயற்சிக்காமல் இருந்து விட்டால், அந்த அறை கூவல்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்துகொண்டால், அது போன்ற வாய்ப்பு மூலம் உங்களை நீங்கள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியாத மிகப் பெரிய இழப்பாக அதுவே அமைந்து, உங்கள் வலிமையைக் குறைத்து விடக்கூடும்.
3. சில தோல்விகளைக் கண்டு கலங்குவதற்குப் பதிலாக, அவைகளை வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிய வழி களைக் காணத் தூண்டும் தூண்டு கோல்களாகக் கருதி மேலும் உழைக்க, முயற்சிக்க உறுதி கொள்ளுங்கள்.
4. எதையும் முழுமையாகச் செய்து முடித்தோம் எனபதை விட அதை எப்படி உயர்தர நேர்த்தியாக (Excellent) செய்தோம் என்று நினைத்து, அந்த உழைப்பின் கனிகளைச் சுவைக்கும் அருமையான வழிமுறைகளை அறிந்து கொண்டு சாதித்தோம் என்று பெருமைப்படுங்கள்.
5. தெரியாதவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்கு அச்சப்படாதீர்கள்; மாறாக, ஆர்வம் காட்டுங்கள்; அவைகளை ருசிக்கும் அனுபவங்களாக ஆக்கி மகிழுங்கள்.
6. கல்விக் கூடங்களுக்குள் - அவை கல்லூரியாக, பல்கலைக் கழகங்களாக இருப்பினும் அவைகளுக்குள் - நுழையும் போது, அதிக கிரேடுகள் வாங்குதில் மட்டும் குறியாய் இராமல், அறிவுத் தேடலுக்கு நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு இது என்று உங்கள் அறிவுப் பசியை, ஆர்வ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் துவங்குங்கள்.
உங்கள் மனம் அப்போதுதான் அடைக்கப்பட்ட அறைகளுக்குள்ளே முடங்கிவிடாமல், (கிரேடுகள்- அதிக மதிப்பெண்கள்) அறிவுக் கருவூலம் என்ற திறந்த விளையாட்டு மைதானத்தின் தூய மூச்சுக் காற்றை சுவாசித்து, தெளிந்ததோர் அனுபவத்தை நீங்கள் பெற்று வாழ்வில் உயர்வதற்கு வழி கிடைக்கும்!
7. பல்வேறு அனுபவங்களை மாற்றிக் கொள்ளும் திட்டங்களில் (exchange programmes) பங்கு கொள்ளுங்கள்: பல்வேறு செயற்பாடுகளிலும், படிப்பு, வெறும் தேர்வு - இவைகளுக்குமேலான பல்வேறு துறைகளானாலும் துணிந்து களம் இறங்கி, வெற்றிக் கனிகளைப் பறித்து, அப்பல்கலைக் கழகத்தின் அணிமணிகளாய் அழகுறக் காட்சி அளியுங்கள்.
8. உங்களுக்குப் புரியாதவைகளை உங்கள் சக மாணவ நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத் தெளிவு பெறத் தயங்காதீர்கள். விடுதி வாழ்க்கை மாணவ வாழ்வின் வசந்தம் என்பதால் அதை ஒரு கூட்டுப் பொறுப்புக்கான பயிற்சிப் பாசறை என்று கருதி எப்போதும் உற்சாகத் துடன், எதையும் செய்து கொண்டே இருக்கப் பழகுங்கள்.
9. நீங்கள் கடின உழைப்புக்கார ராகவும், புதுமை நோக்காளர்களாக வும், பொறுமை காட்டக் கூடியவர் களாகவும், வழவழா கொழ கொழாவாக இருக்காமல் அழுத்தந்திருத்தமானவர் களாகவும் இருங்கள். நீங்கள் கற்கும்போது, தோன்றும் புதிய அறை கூவல்களால் உங்கள் வரைப்படத்தின் கோடுகள் நேராக செல்லாமல், வளைந்தும், மாறியும், சென்றாலும், அவற்றை அனுபவங்களாக ஏற்று, அதனையும் சாதனைகளாக மாற்று வதில்தான் எனது திறமை அடங்கி இருக்கிறது என்று காட்டும் பருவம் எனது வாழ்க்கை என்று பிரகடனப் படுத்துங்கள்.
10. உங்கள் இலக்கு மிகவும் உயர்ந்தே எப்போதும் இருப்பதாக அமையவேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற குறளுக்கேற்ப, வானமும் என் வசப்படும், எனது சாதனைக்கு என்றும் எல்லைக்கோடு கிடையாது என்று கருதி, உங்கள் கால்களை இந்த பூமியில் உறுதியாய் ஊன்றி நடவுங்கள்; முயற்சிப்பதற்கு என்றும் முந்துங்கள் - தயங்காதீர்கள்!
உங்கள் அறிவுத் தேடல் தொடர் பயணமாகட்டும்; கற்பது வாழ்நாள் தொடர் பணியாகட்டும்! வெற்றி உங்கள் சொத்தாகட்டும்!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!