Tuesday, November 8, 2011

தீபாவளி கொண்டாடும் தீக்கதிர்

தீபாவளி கொண்டாடும் தீக்கதிர்

தீவாவளிக்குச் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்டு) அதிகார பூர்வகட்சி ஏடான தீக்கதிர்!

மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் இராமா யணம் பாட ஆரம்பித்தது போல எதை எதையோ சமாதானமாகச் சொல்லுவதற்குக் கடுமையான முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதிக்கவாதிகள், நகராசுரனை அழித்தார்கள் என்று ஒப்புக் கொண்டு எழுதிவிட்டு, அந்த மை உலருவதற்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன என்று வக்காலத்து வாங்கி எழுதுகிறது. கடுமையான குழப்பத்திற் கிடையேயும், குற்ற உணர்வோடும் எழுதப்பட்டு இருப்பது வரிக்கு வரி தெரிகிறது.

காடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங்களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது என்று தெளிவாக எழுதும் தீக்கதிர் - நரகர்களை அழிக்கும் வேறு சக்தி களோடு சேர்ந்து கொண்டு விழாக் கொண்டாடலாம் என்கிறதா?

மக்களின் கொண்டாட்டத் தேவை களை அங்கீகரித்து அவர்களோடு பங் கேற்று, இயற்கையின் உண்மைகளையும், சமுதாய நிலைமைகளின் அடிப்படை களையும் புரிய வைக்கும் பெருமுயற்சி தேவைப்படுகிறது. மகத்தான வரலாற்று இயக்கமாகப் பரிணமிக்க வேண்டிய அந்த முயற்சியில்; சிறு பங்களிப்பே தீக்கதிர் தீபாவளி சிறப்பு மலர் என்று கொண்டாட் டம் ஒரு பண்பாட்டுத் தேவை என்று தலையங் கமாகத் தீட்டப்பட்டுள்ளது.

இந்த வரிகளில் ஏதாவது தெளிவும், பொருளும் இருக்கிறதா? புரிகிறதா?

கொண்டாட்டங்கள் முக்கியம்; காரணங்கள் முக்கியமில்லை என்பதுதான் தீக்கதிரின் கருத்தாக இருக்கிறதோ!

மூடத்தனத்தின் அடிப்படையில் நடைபெறுவது கொண்டாட்டமாக இருந்தாலும் அதில் அய்க்கிய மாகிவிட வேண்டியதுதான் என்கிறது தீக்கதிர்.

இந்த அளவு கோல் இது போன்ற பண்டிகைகளில் தானா? வர்க்கப் பார்வை, வருணப் பார்வை இவை எல்லாம் கூட, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று வந்துவிட்டால் தேவைப்படாது என்பதுதான் டயலிட்டிக் மெட்டீரியலிசமா?கூட்டத்தில் கோவிந்தா போடுவதுதான் முற்போக்குச் சிந்தனையா?

தீபாவளிக் கொண்டாட்டம் என்பதற்குச் சொல்லப் படும் காரணங்கள் மகாமகத்திற்கும், நிர்வாணச் சாமியார்களுக்கும், கும்பமேளாவிற்கும் பொருந் தாதா? நவராத்திரிக்குப் பொருந்தாதா?

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாளை, கோட்சே கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு விழா கொண்டா டலாமா?

இதில் கூடுதலாகப் பொருளாதார காரணங்கள் வேறு!

விழாக்கள் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப் பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவு கின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தகச் சுழற்சிக்கு வழி வகுத்து பொருளா தார தேக்கத்தை ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன என்று பொருளாதார முலாம் வேறு பூசுவதை நினைத்தால் ஒரு பக்கம் வேதனையும், இன்னொரு பக்கம் விலா நோகச் சிரிப்பும்தான் முட்டிக்கொண்டு வருகின்றன.

மூடப் பண்டிகைக்காக நம் தொழிலாளர் தோழர்கள் கடன் வாங்கி செலவு செய்வதைத் தடுப்பதற்குக் கருத் துக்களைச் சொல்ல வேண்டியவர்கள் தீபாவளிக்காகச் செய்யப்படும் செலவுகள் பொருளாதார தேக்கத்தை உடைக்கப்பயன்படுகின்றன என்று சொல்லுவது மூலதனத்தில் எத்தனையாவது பகுதி என்று தெரியவில்லை.

தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் போனஸ், புஷ்வாணமாகப் பொசுங்கிப் போய்விடவேண்டும் என்று நினைக்கலாமா?

கம்யூனிஸ்டாக இருப்பவன் (அவன் மார்க்ஸிய வாதியாக இருக்கும் பட்சத்தில்) மூடப் பழக்க வழக்கங்கள் - மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் வளர்ச்சி அடையாத மக்கள் மனதில், அறிவுப்பூர்வ மான விமர்சனம் செய்து மதத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கப்பாடுபடவேண்டும். இல்லை யெனில் மார்க்ஸியவாதி என்ற பெயரில் மார்க்ஸி யத்தைக் கொச்சைப்படுத்துபவனாகத்தான் ஒரு கம்யூனிஸ்டு இருக்க முடியும் என்கிறார் மாவீரர் லெனின். (புரட்சிகரப் பொருள் முதல்வாதத்தின் முக்கியத் துவம் எனும் கட்டுரை)

மார்க்ஸிய தோழர்களே! உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள் !

மின்சாரம்

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!