ஒவ்வொரு மனிதனும் சுயமாக சிந்திக்கவும், சிந்தனைகளைச் செயல்படுத்தவும்
ஆற்றல் படைத்தவன். எனினும், பெரும்பான்மை மக்கள் தங்களது சிந்தனைத் திறனைப்
பல முக்கியமான விஷயங்களில் பயன்படுத்துவதில்லை. தங்களால் ஆய்வுக்கு
உட்படுத்தாத கடவுள், மதம் போன்ற விஷயங்கள் தங்களது வாழ்வை வெகுவாகப்
பாதிப்பதை உணராமலிருக்கிறார்கள். அதன் காரணமாக, மக்கள் மனங்களில்
மூடநம்பிக்கைகள் ஆட்சி செய்கின்றன. அறிவிற்குப் பொருந்தாத பல சடங்குகள்,
சம்பிரதாயங்கள் மனித சமுதாயத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. மதிப்புமிக்க
மனித சக்தியும், இயற்கைச் செல்வங்களும் வீணடிக்கப்படுகின்றன.
அர்த்தமற்ற இலக்குகளுக்கான மக்கள் வாழ்வு பாழாகின்றது. ஆகவே, இது மனித
சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை
உணர்ந்து, மக்களுடைய சிந்தனைத் திறனை முடக்கும் காரணிகளைக் கண்டறிவோம்.
பொதுவாக மக்கள் காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைக்
கடைப்பிடித்து பிரச்சனைகளின்றி வாழவே விரும்புகிறார்கள். தங்களுக்குப்
பழக்கமான பழைய பாதைகளே ஆபத்தற்றவை என்று நினைக்கிறார்கள். அவற்றையே
பின்பற்றுகிறார்கள். எவற்றிலும் மாற்றங்கள் செய்யப் பயப்படுகிறார்கள்.
இம்மனநிலை சுயசிந்தனையை முடக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது.
சுயசிந்தனையை முடக்கும் மற்றொரு சக்தியாக சம்பிரதாயங்கள் இருக்கின்றன.
எவ்வாறெனில், தனி நபர்கள் பல்வேறு நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும்
குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும், சுற்றுப்புற மக்களிடமிருந்தும்
கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பல விழுமியங்களுக்கும்,
பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாவலர்களாக மாறிவிடுகிறார்கள்.
அச்சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் மனிதர்களை மனதளவில் அடிமைகளாக்கி
விடுகின்றன. ஆய்வு மனப்பான்மையை மழுங்கடித்து விடுகின்றன.
நவீன
போக்குவரத்து வசதிகளும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் பல்வேறு
கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றன.
ஊடகங்களின், இணையத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இத்துடன் இலட்சக்கணக்கான
மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். மேலும், தற்சமயம்
அதிகமான மக்கள் தொகையினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். மாறுபட்ட
கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களுடன் பழகி வாழ்கிறார்கள். இவை மக்கள்
மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட
நல்ல மனமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உலகில் ஏற்படவில்லை. பழமையைக்
கட்டிக் காக்கும் மனநிலைதான் பரவலாகி மேலோங்கி நிற்கிறது.
முன்னோர்களிடமிருந்து சுவீகரித்த பல்வேறு நம்பிக்கைகளுக்கும், பழக்க
வழக்கங்களுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்.
இப்பழமை காக்கும் மனநிலை
பரவலாக நிலவக் காரணங்கள் எவை? இதுபற்றி ஆராய்ந்தால், சமூகப் பிணைப்பு ஒரு
காரணமாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு கூட்டத்தின் அங்கத்தி
னராக அடையாளப்படுத்திக் கொள் கிறான். அதன்மூலம் சமூகப் பாதுகாப்பை
உணர்கிறான். சக சமூக அங்கத்தினர் களுடன் நட்புடன் உறவு கொண்டிருக்க
விரும்புகிறான். அந்த உணர்வு மனிதனை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து
விடுகிறது. சக மனிதர்கள் விரும்பாத காரியத்தைச் செய்யும் தைரியத்தை இழந்து
விடுகிறான். சக மனிதர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற
உணர்வு மேலோங்கி மந்தை உணர்வுக்கு அடிமையாகி விடுகிறான்.
மந்தை
மனப்பான்மை மனிதர்களின் மூளைக்கு விலங்கு போட்டு மனிதனது தனித்துவம்
வளர்ச்சியுறாமல் செய்து விடுகிறது. தாங்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள் தவறானவை என்று உணர்ந்தும் கூட அவைகளை வெளி யிடும் துணிவை
இழக்கிறார்கள். எவை சரியானவை, நியாயமானவை என்பதைத் துணிந்து
வெளியிடுவதற்கான தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.
ஒவ்வொரு
மனிதனும் வாழ்க்கையில் மெய்காண்பவனாக இருத்தல் வேண்டும். மெய் காண
முற்படாமல், வழி வழியாக வரும் விழுமியங்களையும், பழக்க வழக்கங்களையும்
அப்படியே பின்பற்றுவது நாகரிகத்தின் நற்பண்பு அன்று. அவை அடிமைப்
பண்பாகும். எதையும் ஆய்வு செய்யாமல் பின்பற்றுதல் நல் ஒழுக்கம் அன்று.
எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்து, அதன் முடிவிற்கேற்ப
விழுமியங்களையும், பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்வதே உண்மையான
ஒழுக்கமாகும். சிந்திக்க மறுப்பதும், சுயசிந்தனையின் மூலமாகச் சரியென்று
உணர்ந்ததை வெளியிடத் தயங்கு வதும் கோழைத்தன மாகும். ஆய்வு முடிவுகளின்படி
செயல்படத் தயங்கு வதும், செயல்படா மலிருப்பதும் நேர்மை யின்மையாகும்.
மனிதனின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் முக்கிய சக்தியாக இருப்பது கடவுள்
பற்றிய கருத்து. வெவ்வேறு சமுதாயங்கள் கடவுளுக்கு வெவ்வேறு குணாதிச யங்களை,
பண்பு களைக் கற்பிக்கின்றன. அதுபோல, சமுதாயத் திற்கு சமுதாயம் வழிபாட்டுச்
சடங்குகள், முறைகள் மாறுபடுகின்றன. ஆனால், அனைவரும் கடவுள் என்பவர்
தற்புகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் விரும்புவதாகக் காட்டுகிறார்கள்.
அத்துடன் கடவுள் மனிதனின் தன்னல மறுத்தலையும், பலியிடுதலையும்,
சடங்குகளையும் விரும்பி ஏற்று அவர்களுக்கு நற்பயன்களை அளிப்பதாகச்
சொல்கிறார்கள். இம்மாதிரிக் கற்பனைக் கதைகள் மக்கள் மனதில் குழப்பம்
விளைவிக்கின்றன. எதையும் சந்தேகிக்கத் தூண்டுகின்றன. கடவுள் பற்றிய
கருத்தையே மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஆனால், மதங்களும் புரோகிதர்களும்
அர்ச்சகர்களும் மக்களை கடவுள் என்ற கருத்து பற்றி சிந்திக்க விடுவதில்லை.
கடவுள் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்த்து மனிதர்களுக்கு நல்வாழ்வு
இவ்வுலகில் அளிப்பார் என்றும், மோட்சத்தில் இடமளிப்பார் என்றும் பிரச்சாரம்
செய்கிறார்கள். செய்த பாவங்களுக்கு எளிய பரிகாரங்களைச் சொல்கிறார்கள்.
மேலும் கடவுளையும், மதத்தையும் சந்தேகித்தால் நரகம் கிடைத்துவிடும் என்று
பயமுறுத்துகிறார்கள். இப்பிரச்சாரங்கள் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடித்து
விடுகின்றன. உண்மையான மதத்தின் இலக்கு மனிதனை ஊக்கப்படுத்தி
செயல்படவைப்பதுதான் மதத்தின் நோக்கமாக இருக்கவேண்டும். மனித சமுதாயத்தின்
முன்னேற்றம் இயற்கையை அறிவுப் பூர்வமாக ஆராய்ந்து அதைக்
கட்டுப்படுத்தியதால்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதனை சரித்திரம்
விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கைத் தரம் மனிதர்களது அறிவுப் பூர்வமான
ஆய்வுகளால், உழைப்பால் உயர்ந்திருக்கிறது. பிரார்த்தனைகள் சடங்குகள், பலி
யாகங்கள் செய்ததால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மனித
நாகரிகத்தின் வளர்ச்சியில் தெய்வீகத்தின் பங்களிப்பு எதுவுமில்லை. உண்மை
இவ்வாறிருக்க, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கடவுளின்
செயல்பாடுகள் என்று தவறாக விமர்சனம் செய்வது மனிதன் விதியை நம்பும்படி
செய்து விடுகிறது. மனிதனிடம் முயற்சியின்மையைப் புகுத்தி விடுகிறது.
அறிவியல் தாகத்தைத் தகர்த்து விடுகிறது. சுயசிந்தனையை முடக்கி விடுகிறது.
சுய சிந்தனையை முடக்கிவிடும் இன்னொரு காரணி வாழ்க்கை முறைகளை மாற்றி
அமைக்கத் தயங்கும் பய உணர்வாகும். தத்துவஞானிகள் மெய்ம்மை காண்பது கடினமான
செயலல்ல; மெய்ம்மையைக் கண்ட பின்னர் அதைக் கடைப்பிடிக்காமல்
ஓடாமலிருப்பதுதான் கடினமான செயல் என்கிறார்கள்.
மெய் என்பது அறியாமை
என்ற இருளில் ஏற்றப்படும் ஒளி விளக்காகும். மெய் காண்பது ஆய்வு, பரிசோதனை,
சான்று, காரணம் என்பவற்றின் மூலமாக உணரப்படுகிறது. மெய் காணுதல் எவ்வாறு
நடைபெறுகிறது என்பதை அறிய பிரார்த்தனை என்ற பொருளையே மெய் காணும் ஆய்வுக்கு
எடுத்துக் கொள்வோம். அது சம்பந்தமாக தர்க்க ரீதியாகவும், காரணத்தின்
அடிப்படையிலும் பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்குப் பதில்கள் பெற வேண்டும்.
பெற்ற பதில்கள் மூலம் அறிவு பூர்வமான முடிவு எடுப்பதே மெய் காண்பதாகும்.
பிரார்த்தனை பற்றி மெய் காண முற்படும்போது இரண்டு அடிப்படைக் கேள்விகள்
எழுகின்றன. மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி பிரார்த்தனைகளை ஏற்று,
அதற்குப் பிரதிபலனாக ஏதாவது செய்கிறதா என்பது முதல் கேள்வி. தெய்வீக சக்தி
விடையளிக்கிறதென்றால், அதற்குச் சான்று உள்ளதா என்பது இரண்டாவது
கேள்வியாகும். சரித்திரச் சான்றுகளின்படி கடவுள் பிரார்த்தனைகளுக்கு
எந்தவித விடையளிக்கவுமில்லை, பலனையும் அளிக்கவில்லை. இது சம்பந்தமாக
அமெரிக்க நாட்டின் பகுத்தறிவுவாதி இங்கர்சால் (1833_1899) கூறும்போது
தெய்வீக சக்தி பசித்தவனுக்கு உணவளிக்கவில்லை; ஏழைகளுக்கு உடை
கொடுக்கவில்லை, எந்த அடிமையையும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கவில்லை,
அடிமைக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும் அளிக்கவில்லை என்று கூறுகிறார்.
மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மனித முயற்சியாலும்,
செயல்பாடுகள்மூலமும்தான் ஏற்பட்டது. இச்சான்றுகள் தெய்வீக சக்தி
பிரார்த்தனைகளுக்கு பலன் அளிப்பதில்லை என்பதனை உறுதி செய்கிறது.
சமுதாயத்தில் விடுதலையும், சுதந்திரமும் நிலவும்போதுதான் மெய்காணும்
செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. மக்கள் அறிவியல் ஆர்வத்தோடும், மெய்
காணும் தேடல் உணர்வோடும் செயல்படும்போதுதான் மெய்ம்மை உணர்தல் சிறப்பாக
நடைபெறுகின்றன. இவ்வாறு கருத்துச் சுதந்திரமும், மெய் காணும் தேடல்
உணர்வும் முக்கிய பங்களிப்பை வகிக்கும்போது, இவைகள் மனித சமுதாயத்தில்
சிறப்பான நிலையில் நிலவவில்லை.
இன்றைய நிலையில், மக்கள்
சுதந்திரமாகவும் இல்லை. சுயசிந்தனையாளர்களாகவும் இல்லை. பெரும்பான்மை
மக்கள் மனதில் மத நம்பிக்கைகளும், தப்பெண்ணங்களும், வெறுப்புணர்ச்சிகளும்
நிரம்பியிருக்கின்றன. சுதந்திரமாக இருக்கிறோம் என்று நம்பிக்
கொண்டிருப்பவர்கள்தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றுஅறிஞர் கோதே
விமர்சனம் செய்கிறார். உலகில் வாழும் பெரும்பான்மை மக்கள் மதம், இனம்,
சாதி, தேசீயம் என்பவற்றின் பெயரால் பல்வேறு தப்பெண்ணங்களையும், வெறுப்புணர்
வையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனங்கள் சுதந்திரமாக இல்லை. அவர்கள்
மூளை கட்டுண்டு கிடக்கிறது. இந்நிலையைப் பார்த்துத்தான் மக்கள்
சுதந்திரமாகப் பிறக்கின்றார்கள். ஆனால் எங்கும் சங்கிலிகளால் கட்டுண்டு
கிடக்கிறார்கள் என்று பிரான்சு நாட்டு அறிஞர் ரூசோ (1712_1770) விமர்சனம்
செய்தார். இது இக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.
நம்முடைய
பகுத்தறியும் திறனை எல்லாக் காரியங்களுக்கும் உபயோகப்படுத்த வேண்டும்.
சிந்தனைகள்தான் இயற்கையைப் புரிந்து கொள்ளவும், கட்டுப்படுத்தி சமுதாய
நலனுக்குப் பயன்படுத்தவும் உதவுகின்றன. மேலும், மனித சக்திகளும் இயற்கைக்
செல்வங்களும் பயனற்ற காரியங்களில் வீணாவதைத் தடுக்க உதவுகின்றன. மெய்
காண்பதின் முக்கியத்துவத்தை விமர்சனம் செய்யும் அமெரிக்கப் பகுத்தறிவுவாதி
இங்கர்சால் (1833_1899) தவறுகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில்
ஒளிர்கிற மெய்ம்மையைக் கண்டுபிடிப்பது மிகவும் உன்னதமான செயலாகும். அதைவிட
சிறந்தது எதுவுமில்லை என்கிறார்.
மெய்ம்மையைக் கண்டவுடன், அதைத்
துணிவுடன் செயல்படுத்த வேண்டும். தனிநபரின் பொறுப்பு சுயசிந்தனையாளராக
இருப்பதுதான். அதன் அர்த்தம் எல்லாத் துறைகளிலும் சிந்தனையை
உபயோகப்படுத்துவதாகும். அதனால்தான், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம்
நாட்டின் தத்துவ ஞானி போத்தீயஸ் ஒவ்வொரு தனி மனிதனும், சுய சிந்தனையும்
பிரிக்க முடியாத பொருள் என்று கூறுகிறார். சுயசிந்தனையின் முக்கியத்துவத்தை
இங்கர்சால் மிகவும் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது அவர்
கூறுகிறார், மனிதன் சிந்திக்க வேண்டும்; எல்லா புலனுணர்வுகளையும்
உபயோகப்படுத்த வேண்டும். எதையும் பரிசோதிக்க வேண்டும். எதையும் ஆய்வு செய்ய
வேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் கீழான மனிதனாவான். சிந்திக்காதவன்
அவனுக்கே விரோதியாவான். சிந்திக்க பயப்படுபவன் மூடநம்பிக்கையின் அடிமை
என்கிறார். இதே கருத்தைத்தான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் சொன்னார்கள்.
மனிதர்களது ஊசலாடும் மனதைக் கண்டு கவுதம புத்தர் கீழ்க்கண்டவாறு புத்திமதி
கூறுகிறார். மனிதர்கள் தங்களுடைய மனங்களை அங்கிங்கும் அலையாதபடி
நெறிப்படுத்த வேண்டும். நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனம் என்பது உறவினரைவிட,
தந்தையையும் தாயையும் விடச் சிறந்த துணையாக இருக்கும். ஏனெனில், அது தூய
சிந்தனைகளை சிந்திக்கும். எவருக்கும் தீமை பயக்காது என்கிறார். ஆகவே,
மக்கள் மனதைப் பண்படுத்துவதே சிறந்த தொண்டாகும். கடவுளைத் திருப்திப்படுத்த
நாம் செய்ய வேண்டியவை எதுவுமில்லை என்ற கருத்தைப் பரப்பி, அறிவியல் ஆய்வு
மனப் பான்மையை வளர்த்தெடுப்பதே சுயசிந்தனை வளர்ந்தோங்க நாம் செய்ய வேண்டிய
காரியமாகும்.
- ந.ஆனந்தம்
No comments:
Post a Comment