Monday, August 5, 2013

"இளமையில் காதல்"

"இளமையில் காதல்" 
 

இன்னமும் 
உன்னை நான் 
இப்படி அழைக்கலாமா ..... 

அடீ ....... 

"இளமையில் கல்" என்பதை 
நீயும் நானும் 
"இளமையில் காதல்" 
என்றல்லவா தவறி வாசித்துவிட்டோம் ..! 

பாட சாலைகளுக்குள் 
அலைய வேண்டிய நம் விழிப்புறாக்களை 
நாம் 
திரையரங்குகளிலல்லவா 
மேய விட்டோம்....!! 

பேருந்து நிறுத்தங்களில் 
நாம் எப்போதும் 
பேருந்துகளுக்காக மட்டுமே 
காத்திருந்தது இல்லையே ...? 

கல்லூரி நூலகங்களில் 
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 
புத்தகங்களின் ஊடே 
எத்தனை தடவைகள் 
நம் கைகளை இணைத்துக்கொண்டு 
பிரிக்க முடியாமல் தவித்திருக்கிறோம் ...! 

நீயும் நானும் 
கடிதங்கள் எழுதியது போக 
மீதியிருந்த பக்கங்களில் மட்டும் தானே 
பாடங்களை எழுதினோம் ..? 
'விழி'மூலகங்கள் 
'பருவக்' குடுவையுள் 
'கால' இரசாயண மாற்றத்தால் 
'காதல்' வாயுவை பிரசவித்ததாக 
நாம் கவிதை எழுதிக் கொள்ளத்தானே 
நம் பாடங்கள் 
நமக்குப் பயன்பட்டன .....!! 

காலை எழுந்தவுடன் SMS....-பின்பு 
கனிவு தரும் நல்ல பேச்சு 
மாலை முழுதும் பூங்காவில் -என 
வழக்கப்படுத்திக் கொண்டல்லவா 
நாம் நாட்களை விரட்டியடித்தோம் ...? 

இத்தனைக்கும் பின் .... 

நம் பெற்றோரின் 
மறுப்பு மகுடிச் சத்தம் கேட்டவுடன் 
நாம் ஏனப்படி 
பெட்டிப் பாம்புகளாய் அடங்கிவிட்டோம்...? 

'மண்ணோடு மண்ணாக போனாலும் 
என்னுயிர் 
உன்னோடு மட்டுமே உலவுமென' 
நம் சபத வாக்கியங்கள் 
கூறுவதால் தானோ 
நம் 
உடல்களை 
வேறு இருவருக்கு 
பந்தப்படுத்திக் கொண்டுவிட்டோம் ....? 
நாம் .. 
நம் குழந்தைகளுக்கு கூட 
அப்போதே 
பெயர் தேர்வு 
செய்து வைத்திருந்தோமே ... 
ஆனாலும் இன்று ... 
உன் குழந்தையும் 
என் குழந்தையும் 

அதோ கண்ணா மூச்சி விளையாடிகொண்டிருக்கின்றன....! 

நம் தோல்விக்குக் காரணம் 
'நம் பெற்றோரும் , சாதியும் , 
சமூக அந்தஸ்தும்' 
என்று மட்டுமா நீ 
தீர்ப்பெழுதப் போகிறாய்...? 

நாம் 
பெற்றோர்களின் 
கால்களினாலேயே 
நடக்க எண்ணினோம் .... 
அவர்களின் 
தோள்களின் சுமையை 
இறக்குவதற்கு பதிலாக 
மனங்களில் மீண்டும் 
பிரச்னை மூட்டைகளை ஏற்றினோம் ... 

ஆம் .... 
சொந்தக்காலில் 
நிற்ப்பதற்கு முன்னே 
நாம் "சொந்தம்" தேடிக் கொள்ள 
புறப்பட்டிராவிட்டால் 
தோல்வி 
நம்மோடு 
சொந்தம் கொண்டாடிட வந்திருக்காதன்றோ...?


No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!