Saturday, December 29, 2018

தமிழ்நிலத்தில் தாய்மொழிக் கல்வி?

தாய்மொழி கற்கத் தகுமொரு பள்ளி தமிழ்நிலத்தில்
போயலைந் தேபுகப் பெற்றவ ரெண்ணும் பொழுதினிலே
நோயுள தோவென நோக்கி யவரையே நோகடிக்கப்
பாயும் ஒருசொல் பகர்பவர் உண்மையில் பைத்தியமே!
(கட்டளைக் கலித்துறை)

தமிழ்வழிப் பள்ளியைத் தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்! Published : 28 12 2018... தமிழ் இந்து நாளிதழில் தோழர் நலங்கிள்ளிஅவர்கள்.

Friday, December 28, 2018

படத்தைப் பார்த்து ... கலைஞர்..ஓய்வகத்தில் நான்

வார்த்தைகள் வந்து வுன்றன்
வாயினில் தங்கக் கெஞ்சும்
கோர்த்தநல் லெழுத்து வுன்கை
குலவிட வந்து கொஞ்சும்
ஆர்த்துநீ யாண்ட நாளில்
ஆருயிர்த் தமிழும் வெல்லும்
பார்த்துவுன் படத்தை ஈங்கென்
பாழ்மனம் கதறு மய்யா!

#டிசம்பர்_23_2018கலைஞர்_ஓய்வக

மகனுக்கு அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து



இரும்பினை ஈர்க்குமக் காந்தம்
இனிமையைச் சேர்க்குமுன் நேசம்
கரும்பினை வெல்லுமுன் சொல்லும்
கலகல வென்றதே துள்ளும்
அரும்பிய மீசையும் காட்டும்
அகவையோ இருபதும் மூன்றும்
வருவதை எதிரவே தாக்கி
வாகைநீ சூடுக வென்றே!
கலங்கிய குட்டையின் நீரில்
கதிரவன் தெரிவது மில்லை
அழகிய வாழ்க்கையின் பாதை
ஆசையில் விளைவது மில்லை
அளவிலா அருளினால் பெய்யும்
அன்பினால் அகிலமும் தாங்கி
விளங்குக புகழெனும் குன்றின்
விளக்கெனத் தொண்டினால் வென்றே !!

தமிழ்வழிப் பள்ளியைத் தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்! - தோழர் நலங்கிள்ளி

தமிழ்வழிப் பள்ளியைத் தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்!

(இன்றைய இந்துதமிழ் திசையில் வெளியான என் கட்டுரை)

பெரியார் பிறந்த ஊரின் நினைவாக என் மகளுக்கு வைத்த காரணப் பெயர் ஈரோடை. அவளைத் தமிழ்வழிப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதே திட்டம். அருகமைப் பள்ளிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். நான் வசித்துவந்த ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிக்குச் சென்றேன்.

தலைமை ஆசிரியர் பேசத் தொடங்கினார்.

‘‘வாங்க சார்.’’

‘‘உங்கள் பள்ளியில் என் மகளைச் சேர்க்க வேண்டும்.’’

‘‘கவலையே படாதீங்க சார், இங்க இங்கிலீஷ் மீடியம் இருக்கு.’’

‘‘இல்லை, அவளை நான் தமிழ்வழியில சேர்க்கணும்.’’

‘‘ஏன் சார், தமிழ்ல படிச்சு என்ன பிரயோஜனம். இங்கிலீஷ் மீடியம் படிச்சா நல்லா இங்கிலீஷ் பேசலாம். வெளிநாடு போகலாம்.’’

‘‘ஆசிரியர், ஒண்ணு புரிஞ்சுக்குங்க. என் மகள் ஆங்கிலம் மட்டுமல்ல, உலகின் எந்த மொழியிலயும் வல்லமை பெறணும்னுதான் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கிறேன். ஆங்கிலவழிக் கல்வியில் படிச்சா ஆங்கிலம் வராது.’’

‘‘சார், நீங்க சொல்றது எனக்குப் புரியல.’’

‘‘ஆசிரியர், உலகத்துல நீங்க சொல்ற மாதிரி எந்த நாட்டிலேயும் இங்கிலீஷ் சொல்லித் தர்றதில்ல. நானே ஓர் ஆங்கில ஆசிரியன் என்ற வகையில் சொல்றேன், இங்கிலீஷ் மீடியம் படிக்கறதுக்கும் இங்கிலீஷ் கத்துக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை. இப்படி சாதாரணப் பாமர மக்கள் சொன்னா பரவாயில்ல. நீங்களே இப்படிச் சொன்னா எப்படி ஆசிரியர்?’’

‘‘எல்லாம் சரி சார், இங்க இங்கிலீஷ் மீடியம் மட்டும்தான் சார் இருக்கு’’.

அருகமைப் பள்ளிக் கொள்கையை வேண்டுமானால் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், தமிழ்வழிக் கல்விக் கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என நானும் என் மனைவி செல்வியும் முடிவெடுத்தோம்.

பின்னர் பல பள்ளிகள் தேடி, இறுதியில் பரங்கிமலை அடிவாரத்தில் ஹெலன் பள்ளிக்கூடம் எங்களுக்குப் பிடித்திருந்தது. தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தோம். இவரும் அதே இங்கிலீஷ் மீடியம் வசனங்களைப் பேசத் தொடங்கினார். ‘‘இல்லை, நான் உங்கள் பள்ளிக்கு வந்த காரணமே தமிழ்வழிக் கல்விக்காகத்தான்’’ என்றேன்.

‘‘சரி சார், நான் சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்’’ என்றார். அங்கு நான்காம் வகுப்பு வரை படித்தாள் ஈரோடை.

பின்னர், ஈக்காட்டுத்தாங்கலிலிருந்து கோடம்பாக்கம் நகர்ந்தேன். இங்கு ஒரு தமிழ்வழிப் பள்ளி வேண்டுமே? நானே வண்டியை எடுத்துக்கொண்டு தேடலைத் தொடங்கினேன். வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்தேன். அவர் என் மகளைப் பார்த்து, “வாட்ஸ் யுவர் நேம்” என்றார்.

“ஏன் ஆசிரியர், இவள்ட இங்கிலீஷ்ல பேசறீங்க? தமிழ்லயே பேர் என்னன்னு கேட்கலாமே?” என்றேன்.

“சார், இது இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் சார், அதான் இங்கிலீஷ்ல பேசினேன்” என்றார்.

“இல்லை ஆசிரியர், இவள் தமிழ்வழியில படிக்கணும்’’ என்றேன்.

“சார், நல்லதாப் போச்சு, இங்க தமிழ் மீடியமே கிடையாது. தமிழ் மீடியம்லாம் போயி நாலஞ்சு வருஷமாச்சு சார்.”

கடைசியில் கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் ஓர் அரசுப் பள்ளியைக் கண்டேன். அங்கும் அதே ஆங்கிலப் புராணம். அவர்களுடைய நச்சரிப்பையும் மீறித் தமிழ்வழியில் ஐந்தாம் வகுப்பு சேர்த்தேன். பள்ளிக் கழிப்பறையில் வழிந்தோடிக்கொண்டிருக்கும் மலத்திலும் சிறுநீரிலும் கால் பதித்துதான் அவள் சிறுநீர் கழித்தாக வேண்டும். அவள் அருவருப்படைவாள். இருந்தாலும் கூறுவேன், ‘‘உன்னுடன் படிப்போர் பெரும்பாலும் ஏழைகள். சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் கீழே இருப்பவர்கள். நீயும் இங்குதான் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் வாழ்க்கைத் துன்பங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியும்.’’ இதை அவள் புரிந்துகொண்டாள்.

அடுத்து, ஏழாவது வகுப்புக்கு அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் ஈரோடையைச் சேர்த்தேன். ஊடக வெளிச்சம் பெற்ற பள்ளி இது. இங்கும் தமிழுக்குப் பெரும் ஆபத்து சூழ்ந்திருப்பதைப் பார்த்தேன். ஆம், ஏழாம் வகுப்பில் மொத்தம் 11 பிரிவுகளில் ஒரே ஒரு பிரிவு மட்டும்தான் தமிழ்வழி. மற்றவை எல்லாம் ஆங்கிலவழி. இப்போது அவள் ஒன்பதாவது படிக்கிறாள்.

‘‘அப்பா, தமிழ்வழியில படிக்கற பொண்ணுங்க குறைஞ்சிக்கிட்டே வராங்கப்பா, இப்படியே போனா, இந்தப் பள்ளிக்கூடம் முழுக்க இங்கிலீஷ் மீடியம் ஆயிடுமாம்பா’’ என்கிறாள் ஈரோடை.

சென்னை நகரம் தமிழை அழித்தொழிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற உண்மை என் நெஞ்சை ஒவ்வொரு நாளும் துளைத்தெடுக்கிறது. இப்போது என் இளைய மகள் பறையைத் தமிழ்வழியில் சேர்க்க வேண்டுமே? தியாகராய நகர் பகுதியில் கர்னாடக சமாஜ், வித்யோதயா என ஏற்கெனவே தமிழ்வழியில் இயங்கிவந்த பள்ளிகளும் இப்போது ஆங்கிலவழிப் பள்ளிகளான செய்தி அறிந்தேன்.

பின்னர், கோடம்பாக்கத்திலேயே உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்தேன். “இது ஃபர்ஸ்ட் க்ளாஸ் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் சார்” என எடுத்த எடுப்பிலேயே கூறினார் தலைமையாசிரியர்.

“அப்ப தமிழ்?” என்றேன்.

“என்ன உலகத்துல சார் இருக்கீங்க, எங்க ஸ்கூல் இங்கிலீஷுக்கு மாறி செவன் இயர்ஸ் ஆச்சு சார். இப்ப எட்டாங் கிளாஸ்தான் கடைசி தமிழ் செட். அது முடிஞ்சுச்சுன்னா, இது முழு இங்கிலீஷ் மீடியம்” என்றார்.

சற்றே பேச்சை மாற்றி, ‘‘உங்களிடம் வரும் பெற்றோர் என்ன கேட்பார்கள்?’’ என்றேன்.

‘‘முதலில் இங்க இங்கிலீஷ் மீடியம் இருக்கா?’’ எனக் கேட்பார்கள். அடுத்து, ‘‘என்ன ஃபீஸ்?’’ என்பார்கள்.

“இங்க இங்கிலீஷ்தான். அதுவும் யூனிஃபார்ம், நோட்டு, புத்தகம், ஜியாமெட்ரி பாக்ஸ், கலர் பென்சில், அட்லஸ் எல்லாம் ஃப்ரீ. ஃபீஸ் ஒரு பைசா கட்ட வேண்டியதில்லை எனக் கடகடவெனச் சொல்லி, பேரன்ட்ஸ் முகத்தைப் பார்த்தால், சிலர் முகத்துல சந்தோஷம் தெரியும். ஆனால் மேக்சிமம் பேரன்ட்ஸ் ஒடனே ஓடிப்போயிடுவாங்க சார், நீங்க நம்புவீங்களா?” என்றார்.

எனக்குப் புரியவில்லை.. ‘‘ஏன்?’’ என்றேன்.

‘‘அதான் சார், ஃபீஸ் கொடுத்துப் படிச்சாதான் இவங்க போயி பக்கத்து வீடுகள்ல பீத்திக்க முடியுமாம், இல்லைன்னா... ‘என்னடீ, ஓசியா படிக்கற ஸ்கூல்ல சேத்துட்டியா?’ன்னு பக்கத்து வீட்டுக்காரங்க கேலி பண்ணுவாங்களாம். எப்படி இருக்கு கதை?’’

பின்னர், வடபழனியில் உள்ள எம்ஜிஆர் தொடக்கப் பள்ளிக்குச் சென்றேன். “இருக்கிறது தமிழ்வழிக் கல்வி” என்ற தலைமையாசிரியர் பதில் என் காதில் தேனாய்ப் பாய்ந்தது.

‘‘இங்கு ஆங்கிலவழியே இல்லாம நடத்துறீங்களே, பாராட்டு’’ என்றேன்.

‘‘அந்த சோகத்த ஏன் சார் கேக்கறீங்க, நாங்க இங்கிலீஷ் மீடியத்துக்கு அரசுகிட்ட அனுமதி கேட்டிருக்கோம். ஆனா, இன்னும் கிடைத்தபாடில்லை. அதனால பாருங்க, அஞ்சு கிளாஸும் சேர்த்து வெறும் 85 பிள்ளைங்கதான் படிக்கிறாங்க. இப்படியே போனா ஸ்கூல இழுத்து மூட வேண்டியதுதான்’’ என்றார் தலைமையாசிரியர் சோகத்துடன்.

அரசு, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் என்று மட்டும் இந்தக் கதைக்கான குற்றத்தைச் சுருக்கிவிட முடியாது. ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்களால், ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு ஆங்கிலவழியில் பாடங்கள் எடுப்பதையே எல்லோரும் விரும்புகிறார்கள். “தமிழே! கல்வியை விட்டு ஓடு!” என்கிறார்கள் தமிழ்ப் பெற்றோர்கள். ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்ற பாரதி வரியைப் பலரும் கேட்டிருப்போம். ஆனால், அவர் அதைத் தொடர்ந்து எழுதிய வரி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘என்று அந்தப் பேதை உரைத்தான்’ என்று முடிக்கிறார் பாரதியார். “தமிழ் அழியும் எனக் கூறுபவன் பேதை” என்றார் பாரதியார். ஆனால், பாரதி நினைத்துப்பார்த்திருப்பாரா? பாரதியின் அந்தப் பேதைகளே தமிழ்நாட்டில் அரியணை ஏறி தமிழை அழிப்பார்கள் என்று. ஐநா வரையறைப்படி, ஒரு தேசத்தின் மொழியை அழிப்பது இனப்படுகொலை. நாம் என்ன செய்யப்போகிறோம்?

Tuesday, December 25, 2018

செல்வ.சேகர் பிறந்த நாள் வாழ்த்து

பலப்பல பேதங்கள் மறைந்துபின் ஓருலகாய்

துலங்கி நிலைபெற வோர்கொள்கை  தேர்ந்து

வலம்வரும் தாய்மனத்தான் வாழிய!

(இன்னிசை சிந்தியல் வெண்பா)




Sunday, December 23, 2018

டிசம்பர் 24' தந்தை பெரியார் நினைவு நாளில் சபதமேற்போம்!

தந்தை பெரியார் நினைவு நாளில்

வாழ்ந்தபோது வானிடியாய் மறைந்தபின்னே எரிமலையாய்
மண்ணில் நின்று
சூழ்ந்தபகை  அழித்தொழிக்க நெருப்பாறாய் நீண்டெழுந்தே
சுடுவா யின்றும்!
தாழ்ந்தநிலை யாக்கியெமைத் தலைகுனியச் செய்தஜாதி
தவிர்த்துக் காவல்
வேலியென்றே தமிழினத்தைக் காத்துநின்றே எம்மனதை வென்றாய் அய்யா!!
‌அறுத்தெறிந்தே 'கர்பப்பை'  அழித்திடுக ஆண்மையென
 அய்யா நீதான்
 கருத்தளித்தே அகிலத்தைக்                           கலங்கடிக்கும் பூகம்பக்
 கருவாய் நின்றாய்!
உருக்கிவைத்த சிலையெனவே  ஊர்நடுவில் நின்றாலும்
உன்னைக் கண்டு
தருக்கிடுவோர் வாலாட்டம் தமிழ்நிலத்தில் நுழையாது
வெல்வோம் அய்யா..!!        
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

Saturday, December 22, 2018

குறையென்ன கண்டீர்?

*குறையென்ன கண்டீர்*

வானின் பனியிங்கு வந்திறங்கும் காலை/
வதைகு ளிராலே உறைந்திடுமவ் வேளை/
ஏன்தான் பிறந்தோ மெனவென்று நாளை/
இழித்தே பெருக்கி டுவாரவரே
ஊரைக்/
காணின் னவரைக் கசிந்திடுமே கல்லும்/
கலங்காமல் 'குப்பை'வா
வென்றழைக்கு மூரே /
பேணி மனைச்சுத்தம் காத்திடுவோர் தம்மை/
பெருமையுடன் கூப்பிடத்தா
 னென்னகுறை
 கண்டீர்!//

(வெண்டளையான் இயன்ற எண்சீர் ஆசிரிய விருத்தம்.)

Sunday, December 2, 2018

வாழ்கநீ நூறாண்டு...!* மதுரை சுப.முருகானந்தம்

*வாழ்கநீ நூறாண்டு...!*

மதுரை சுப.முருகானந்தம்


பள்ளியை விட்டு வந்த
பால்முகம் மேடை ஏறிச்
சொல்லிலே இனிமை கூட்டிச்
சுவையினில் பொருளைச் சேர்த்து
வில்லினை விட்ட அம்பாய்
வீணர்தம் நெஞ்சைத் தைத்த 
நல்வினை நடக்கக் கண்டு 
ஞாலமும் வியந்த தம்மா!

கல்வியில் முதல்வ னாகிக்
களத்திலும் முதல்வ னாகிப்
பள்ளியில் நாள்க ளெல்லாம் 
பலபல ஊர்கள் சென்று
சொல்லிடை 'அருள்கூர்ந் தென்று'
தெள்ளிய குரலால் கூவி
அள்ளிய  நூல்கள் காட்டித்
துல்லித முரைப்பாய்  நீயே

கோரிய பணமும் கொட்டும் 
குன்றென வளமும் கிட்டும் 
ஊரறி வழக்கு ரைஞர் 
உறுவது நீங்கி எம்பால் 
பேரருள் கொண்டு நீதான் 
பெறுமதி விலக்கி வந்து 
பாரறி வாள ரய்யா 
பணிதனை ஆற்று வாயே!!

பனியினைக் கதிரும் வெல்லும் 
பகையினை உன்றன் சொல்லும் 
பிணியிடை நலிந்த போதும் 
பேசிட அஞ்ச லில்லை
கனியென உலகு சூழும் 
கருத்தினை வகையாய் நாளும்
 மணியெனத் தருவாய் அய்யா 
மதிநலம் பெறுவோம் ஈங்கே!!

குடையென இனத்தைக் காத்துக்
குவலயம் சுற்றும் ஏந்தல்
படையென உமக்குப் பின்னால் 
பயின்றது தமிழர் சேனை 
நடையினில் வேகம் கொண்டு 
நடத்துக அறிவுத் தொண்டு 
இடையினில் பத்தோ டைந்து
 இருக்கவே நீநூ
றாண்டு!!
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!