Friday, December 28, 2018

மகனுக்கு அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்து



இரும்பினை ஈர்க்குமக் காந்தம்
இனிமையைச் சேர்க்குமுன் நேசம்
கரும்பினை வெல்லுமுன் சொல்லும்
கலகல வென்றதே துள்ளும்
அரும்பிய மீசையும் காட்டும்
அகவையோ இருபதும் மூன்றும்
வருவதை எதிரவே தாக்கி
வாகைநீ சூடுக வென்றே!
கலங்கிய குட்டையின் நீரில்
கதிரவன் தெரிவது மில்லை
அழகிய வாழ்க்கையின் பாதை
ஆசையில் விளைவது மில்லை
அளவிலா அருளினால் பெய்யும்
அன்பினால் அகிலமும் தாங்கி
விளங்குக புகழெனும் குன்றின்
விளக்கெனத் தொண்டினால் வென்றே !!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!