Monday, January 28, 2019

தழைக்கவே பொதுவுடமை

தழைக்கவே பொதுவுடமை:


உழைப்பைப் பகிர்ந்தே உழைத்துக் கிடைத்த
விளைபொருளை யாவர்க்கும் வீதப்  படியீந்தும்
ஏழை பணக்கார  ரென்றநிலை மாற்றித்
தழைக்கப் பொதுவுடமை தான்.
- சுப முருகானந்தம்.

(இன்னிசை வெண்பா)









Saturday, January 26, 2019

அறிவும் மானமும் அருள்வாய் தமிழே



இறந்தவொரு மொழியிலன்றோ இணையேற்பு நடத்துகின்றார்
சிறந்ததொரு படிப்பென்றால் திகழ்வதுமாங் கிலந்தானாம்
பிறந்தவொரு மழலைக்குப் பெயர்வைக்கும் பொழுதினிலும்
மறந்துமுனை நினைக்காத மடமையிலே யுழலுகிறார்

ஆதலினால்

அறிவால் பூக்கும் அகத்தின் மானம்
செறிவாய் தேக்குந் திறனைச்
சொரிவா யின்றே தொல்தமிழ்த் தாயே!
(தரவு கொச்சகக் கலிப்பா)

Friday, January 25, 2019

திராவிடர் என்றே சொல்


நந்தமிழர் வரலாற்றின் நடுவினிலே புகுந்தேதான்
முந்துபழ மடச்சாதி முறைமைகள் வகுத்தவனே
அந்தமுதற் கடவுளவன் அடிதொழவே அவதரித்து
மந்திரங்கள் பயின்றுள்ளோம் மறக்காதே எமைத்தொழுக
எனவுரைத்தார்
ஆரியர் நீக்கிய அருமைத் தமிழரை
கூறி யழைக்க வொருசொல்
வீரிய திராவிட மன்றேல் வேறெதோ?
(தரவு கொச்சகக் கலிப்பா)







Friday, January 11, 2019

மோடியின் 10%

கொடுத்தால் ஒதுக்கீடு குற்றமெனச் சொல்லித்
தடுக்க ரதப்போர் நடத்தினாரே அன்று
தடுக்கவே போர்நடத்திச் சென்ற வரின்று
மிடுக்காய் ஒதுக்கீடு வேண்டுவ தேனோ?
அடுக்காய் பலதோல்வி ஆனதி னாலே!

Saturday, January 5, 2019

வந்ததிந்தப் புத்தாண்டு!

வாளென்று வந்துநம் வாழ்வைச் சுருக்கியே
நாளென்று மாறி நகர்ந்திடும் ஆண்டதில்
சூளென்று நெஞ்சத்தில் தூயன தாங்கிநீ
வேலென வுன்னிலக்கை வேகமாய் யேகுவாய்
கீழென்று பார்த்துக் கிளையை விலக்காமல்
பாழென்ற சொல்லால் பகைமை வளர்க்காமல்
ஆலென்றே வும்மினத்தை யண்டி நலந்தந்து
வாழென்று வாழ்த்திட வந்ததிந்தப் புத்தாண்டே!

Thursday, January 3, 2019

சிவந்தது கிழக்கு...

வாயில் குதப்பிய வெற்றிலைக் காவியைத்
தோயும் இருட் சாலையில் துப்பியே
தேயும் அவளைத் திருப்பி யனுப்பியே
சேயோன் எழுந்தான்  கிழக்கும் சிவந்ததே!
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!