Tuesday, February 26, 2019

தாயே எனை வாழ்த்துவாயே!

(வஞ்சித் தாழிசை)
இன்மொழி நன்மனம்
என்றும் ஈந்து
என்நலம் காத்தாய்
இன்முகத் தாயே!

நல்லவை காட்டி
அல்லவை நீக்கும்
வல்லமை தந்து
வாழ்த்துவாய் தாயே!

உண்மையைப் பேச
நன்மையைச் செய்ய
உன்வழி யேற்பேன்
என்றுமே தாயே!!
- முருகானந்தம் சுப.

Saturday, February 16, 2019

தன்னலம் மறுப்பாய் மனமே!

(வஞ்சிப்பா)

தன்னலந்தனை யெண்ணியேதினம்
 இந்நிலந்தனில் யிருப்பாரவர்
 எந்நலமதைப் பெறுவாரென
இன்னமுமறி கிலேனென்பதால்

நானும்

பெற்றதுங் கற்றதும் பேச்சினால் சொல்லியும்
உற்றதிற் சிற்சில ஊரினில்
அற்றவர்க் கீந்தே அகமகிழ்ந் தேனே!

- முருகானந்தம் சுப

Thursday, February 7, 2019

#ஆளவந்தார்
ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000

வீடெல்லாங் கொட்டும்  பணமிங்கே வென்று
வீரமாகச் சொன்னா ரேசெய் தாரா?
காடொல்லாங் காய கசிந்துழவன் வாடி
கடைத்தெருவி லன்று நின்றா னய்யோ!
ஓடோடி  யாரு முருகவில்லை யென்றே
ஒடிந்துமனந் திரும்பி னானே யன்று!
நாடெல்லாஞ் சுற்றி யவர்வந்தே யின்று
நடிக்கின்றார் மேடை யேறி நன்றே!!.

பொசுங்கியது மனுதர்மம்

பொசுங்கியது மனுதர்மம்


 (கட்டளைக் கலிப்பா)

ஒன்றே மானிடர் யாவரு மென்றுரை
ஓங்கு சீர்மர புத்தமி ழர்மனம்
குன்றிச் சீர்கெட வோர்குலத் துக்கொரு
கோணல் நீதிசொல் லும்மனு வின்குரல்
மண்ணில் பேரிடி போலுமே வந்ததை
மண்ணின் பிண்டமாய்ப் பார்த்திருத் தல்தகா
தென்றே போர்க்குரல் எங்குமே சூழ்ந்ததால்
இன்று தீயிடை யம்மனு  வெந்ததே!!

Saturday, February 2, 2019

வெள்ளையரும் கொள்ளையரும் (வெண்கலிப்பா)

அனைவருக்கும் அனைத்துமே அட்டியின்றி கிடைக்குமென
நினைத்தேதான் விரட்டினோமே நீலவிழி வெள்ளையரை
புனைபொய்யுரைக் கொள்ளையரைப் புதுத்தலைமை யேற்கவிட்ட
கணையாலே வீழ்ந்தோமே காண்.
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!