கவியரங்கம் 160
தலைப்பு: கல்விக்கழகு
தமிழ் வாழ்த்து:
எண்ணம் முழுதும்நீ என்றும் நிறைந்துநல்
வண்ணம் மனம்புகுந்து வாழும் தமிழே
வணங்கியே நின்றேன் வருக
இணங்கியே எல்லாம் இயைந்து தருகவே!
தலைமைக்கும் அவைக்கும் வணக்கம்:
அவையின் தலைமையீர் அன்பு வணக்கம்
சுவைக்குமத் தேனைத் துகிக்கு மிதரெனச்
செந்தமிழ்ச் சோறுண்ணத் தந்தீர் நிலாமுற்றம்
தந்தேன் வணக்கம் மகிழ்ந்து.
துணைத்தலைப்பு: கற்றபடி நிற்க.
அறுசீர் ஆசிரிய விருத்தம்.
(விளம், மா,தேமா வாய்ப்பாடு)
சுற்றிய சுற்றும் மாடும்
சொல்லிய சொல்லுங் கிள்ளை
கற்றதை அன்றே விட்டு கலங்கியே தவிக்கும் பிள்ளை
நற்றமிழ் நெறிகள் சொல்லும் நலனதைக் கொண்டே யாரும் இன்றைநாள் வாழ்வ துண்டோ
எண்ணியே பார்ப்போம் இன்றே!
கற்றதைச் செயலில் காட்டி
கனிவினைச் சொல்லில் தேக்கி
மற்றவர் நலத்தைப் பேணும் மாண்பினை நெஞ்சில் கொண்டு
பெற்றதைப் பிறர்க்கு நல்கி பெருமையும் சேர்த்து நன்றே சுற்றமும் சூழ வாழும்
தூயவர் எவரும் உண்டோ?
படித்ததை மதிப்பெண் வாங்கும்
பாதையாய் மனதில் எண்ணி துடித்துமே வேலை தேடி
தொண்டையின் மேலே நின்று இடிப்பதைத் தேர்வில் சொல்லி இடத்தினைப் பெறுவார் கோடி நடிக்கவும் செய்வார் நல்ல ஞானமும் பெற்றார் போலே!
சொல்லிய கருத்தைப் பார்நீ
சொன்னவர் யாரென் றாலும்
துல்லிய கோலில் இட்டே
தூயதை ஏற்றுக் கொள்க!
சொல்லினில் எட்டிக் காயைத்
தூரநீ எறிவாய் கண்ணே!
வெல்லமாய் கனிந்த வார்த்தை
விதையினால் வளர்ப்பாய் நட்பே!!
அறத்தினை மனதில் ஏற்றி
அருளினால் ஞாலம் போற்றி
பிறந்தவர் யார்க்கும் யாரும்
பேதமில் லென்னும் கொள்கைத்
திறத்தினால் உழைத்து நல்ல
சிறப்பினைப் பெற்று வாழ்வாய்
செந்தமிழ் கற்று நின்றே!
முடிவுரை:
வள்ளுவன் சொன்ன பாடம்
வந்துநான் சொல்ல வந்தேன்
வாழ்வினில் ஏற்று வாழ்ந்தால்
வரும்படி யாக நல்ல
தாழ்விலா வாழ்வும் கிட்டும்
தமிழினை உலகம் மெச்சும்
ஊழென ஒன்றும் இல்லை
உறுதிநீ கொண்டே வெல்க!!
நன்றி நவிலல்:
கற்றபடி நிற்க
கவிவடிக்க எனக்கு
நல்வாய்ப்பு தந்தீர்
நன்றி பல கோடி..
வணக்கம்.
சுப.முருகானந்தம் 2465 நிலா முற்றம் எனும் முகநூல் குழுமத்தில் வார இறுதியில் நடக்கும் கவியரங்கத்திற்கு எழுதியது.