தொலைக்காட்சி என்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஊடகம்தான். ஆனால் பொழுது முழுவதையும் அதற்கே செலவிடும் நிலை நம் நாட்டு மக்களில் குறிப்பாக இளைஞர்கள், தாய்மார்கள் மத்தியில் மிகப்பெரும் தீமையை உருவாக்கி உடல் நலம், உள்ள நலம், நேரம் - இவற்றையெல்லாம் பாழாக்கும் நிலை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வருகிறது!
அறிவியல் கண்ட கண்டுபிடிப்பான தொலைக்காட்சியில் அறிவியலுக்குக் கேடு செய்து, மூடநம்பிக்கைகளை, மூளையில் ஆணியடிக்கும் பல்வகை மதவெறிகளைப் பரப்புவதும் மலிந்துவிட்டது.
மதவாதிகள் இதுபோன்ற பல தொலைக்காட்சிகளை தங்களது சொந்த உடைமைகளாக சுமார் 100 - god TV - கடவுள் டி.வி.யிலிருந்து அனைத்து மதவாதிகளும், அடிப்படை மத வெறியர்களும்கூட (Religious Fundamentalists) இப்படி ஒரு வழியில் மக்களின் மூளைக்கு சாயம் ஏற்றி, விலங்கு போடவும் செய்கின்றனர்!
டிஸ்கவரி ஒளிவழி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல், அனிமல் (மிருகம்) பற்றி இப்படி இயற்கையையொட்டிய டி.வி.களைப் பார்ப்பவர் - நம் நாட்டில் மிகவும் குறைவு. பகுத்தறிவாளர்கள் இல்லத்துப் பிள்ளைகள் - குழந்தைகளைக்கூட இவற்றைப் பார்க்கத் தூண்டுவது கிடையாது நமது பெற்றோர்கள்.
தேர்வு நேரத்தில் உலகத் தங்கக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்ற கொள்ளைக் கூட்டு சூதாட்ட பேரம் உள்பட பல ஆயிரக்கணக்கில் ஏழைகள், நடுத்தர மக்களின் பணம் உறிஞ்சப்பட்டு, மாணவர்களின் படிப்பிலும் மண்ணைப் போடும் கொடுமையைக் கண்டிக்க எவரும் முன்வருவதில்லை.
காரணம் ஆட்சியாளர்களிலும் பலருக்கு இந்தப் போதை உண்டு. சில கனவான்கள் பன்னூறு - ஆயிரம் - லட்சம் கோடிகளுக்கு அதிபர்களாக உள்ளவர்கள் இந்த கிரிக்கெட் மோகத்தைத் தூண்டி, அதனை தமது பணப்பெட்டிக்குள் கொண்டு செலுத்தி, திடீர் என்ற கொள்ளை லாபக் குபேரர்களாகி நிற்கின்றனர்!
அறிவுக்கோ, உடலுழைப்புக்கோ, உதவும் விளையாட்டு கூட அல்ல; இதனைக் காண தொலைக்காட்சி ஊடகங்களில் ஏலம் - அதில் ஊழல் - அதன்பின் விசாரணை - இப்படி பலப்பல அரங்கேறுகின்றன ஒவ்வொரு நாளிலும்!
என்றாலும் தொலைக்காட்சி என்ற இந்த தொல்லைக்காட்சி முன் அமர்ந்து பார்த்து காலத்தைக் கழிப்பது ஒருபுறமிருந்தாலும், பல குடும்பங்களில் வீண் தகராறு - வாய்ச்சண்டையாகத் துவங்கி, முற்றிய நிலையில் அண்ணன் - தம்பி, அப்பா - மகன் கொலையில் முடியும் உயிர்க் கொல்லியாகவும் ஆகிவிடுகிறதே!
தொலைக்காட்சியில் அடிக்கடி சேனல்களை மாற்றிட பல குடும்பத்தவரிடம் வாக்கு வாதங்கள்!
ஒருவர், இதை நான் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும்போது, வாய்த் தகராறில் துவங்கி, அடிதடி கொலை வரையில் சென்று முடிகிறது.
இரண்டு நாள்களுக்கு முன் வடசென்னையில் இப்படி ஒரு கொலை - தந்தைக்கும் மகனுக்கும்; தொலைக்காட்சியில் ஒலியை (Volume - அய்) சற்று அதிகரிக்கச் சொல்ல, அவர் மறுக்க, அதில் துவங்கி கத்தியால் குத்தி, உயிரைப் பலிகொண்டுவிட்ட சம்பவம் எவ்வளவு வெட்கமானது! வேதனைக்குரியது!
தொலைக்காட்சி - கொலைக்காட்சியை உருவாக்குவதைவிட மிக மோசமான ஒரு நிகழ்வை கற்பனையால்கூட எண்ணிப் பார்க்க முடியுமா?
நான் பலமுறை எழுதியுள்ளேன்; மீண்டும் சொல்லுகிறேன். உணவுக்கு உப்பு தேவைதான்; ஆனால் உப்பே உணவாகிவிட்டால், உடல் நலம் என்னவாகும்?
பொழுதுபோக்கு (recreation) என்பது ஓய்வு நேரத்தைச் செலவழிக்கும் இளைப்பாறும் வழி; ஆனால் அதுவே 24 மணிநேரமும் என்றால் அது பொழுதுபோக்காகுமா? பொழுதையே போக்குமா? இளைப்பாறுதல்தான் ஆகுமா? யோசியுங்கள் நண்பர்களே!
No comments:
Post a Comment