Saturday, July 21, 2012

தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்


தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்
http://www.unmaionline.com/new/images/magazine/2012/july/16-31/ujnmai%20%2820%29.jpg

அறிவியல் முடிவில்லாதது. மெழுகுவர்த்தி எரிய நெருப்பு தேவை என்றது. முடிவில் ஆக்சிஜன்தான் தேவை என்றானது. அய்சக் நியூட்டனின் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாலும் போய்ப் புதிய உண்மைகளைக் கூறினார் அயீன்ஸ்டின். ஆனால் மதம் அப்படியல்ல; ஆன்மிகம் என்று அர்த்தமே இல்லாமல் சிலர் கூறுகிறார்களே, அதுவும் அப்படியல்ல! எவனோ ஆய்வறிவு கொஞ்சமும் இல்லாமல் உளறிக் கொட்டியதையெல்லாம் எழுதிவைத்துக் கொண்டு இதுதான் முடிவு. இதுதான் வேதாந்தம், இதுதான் சித்தாந்தம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களே, அவையும் அப்படியல்ல! மாறிக்கொண்டே இருப்பதுதான் இயற்கை என்று அறிவியல் கூறினால் _ அல்ல, அல்ல மாறாததுதான் சநாதனம் என்று சண்டித்தனம் செய்வது மதம்.
கலிலியோ காலந்தொட்டு உதை வாங்கியும் மதத்திற்குப் புத்தி வரவில்லை. இதோ, இன்றைய நிலையில் இவர்களின் முட்டாள்தனமான கருத்துக்கு, நம்பிக்கைக்கு மரண அடி விழுந்திருக்கிறது, ஹிக்ஸ் போசான் எனும் கண்டுபிடிப்பின் வாயிலாக! கடவுள் உண்டாகட்டும் எனக் கூறியதும் எல்லாம் உண்டாகின என்று மூன்று மதங்கள் முனகிக் கொண்டிருப்பது முட்டாளின் முனகல் என்று மதத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்திருக்கிறது அறிவியல்.
உலகம் இப்படித்தான்
இவ்வுலகம் 12 அடிப்படைக் கூறுகளாலும் 4 அடிப்படை விசைகளாலும் உருவானது என்று ஏற்கெனவே கண்டுபிடித்து எண்பித்திருக்கிறது அறிவியல், 1964இல் பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் ஒருவர், 13ஆவதாக ஒரு துகள் இருக்கிறது என அறிவித்தார். அவர் பீட்டர் ஹிக்ஸ் எனும் 83 வயது நிறைந்த இயற்பியல் அறிஞர். இவர் கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத நாத்திகர்.
நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர் வியோன் லெடர்மேன் என்பவர் உருவாக்கிக் கொடுத்த சொல்தான் கடவுள் துகள் என்று ஏடுகளில் எழுதப்படும் சொல். உண்மையில் ஹிக்ஸ் வைத்த பெயர் பாழாய்ப் போன துகள் (GODDAMN PARTICLE) என்பதே! பத்திரிகை ஆசிரியர் அதனை வெளியிட அச்சங்கொண்டு GOD PARTICLE என்று எழுதி வெளியிட்டார். அதனையே அனைவரும் கையாள்கிறார்கள்.
உண்மையில் கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் சம்பந்தமில்லை எனும் உண்மையை வெளிப்படுத்த உதவும் கண்டுபிடிப்புக்கு கடவுள் பெயரை வைத்து அழைக்கும் பித்துக்குளித்தனத்தை எப்படி விவரிப்பது?
துல்லியமான கண்டுபிடிப்பு
கடவுளை ஒழிக்கும் துகள் ஒன்று இருப்பதை இயற்பியல் அறிஞர்கள் அறிவர். மதவாதிகளைப் போல நான் சொல்கிறேன்; நம்புங்கள் என்று அறிவியலாளர்கள் சொல்லமாட்டார்கள் அல்லவா? அதனால் அத்துகள் இருப்பதை நிரூபிக்க ஆய்வுகள் செய்து, கண்டறிந்து, துளிக்கூடப் பிசிறு இல்லாமல் கண்டறிந்து, அதனை வெளியிட்டுள்ளனர். 5 சிக்மா (5 SIGMA) என்று குறிப்பிடப்படும் அளவு துல்லியமாகத் தெரிந்த பின்னர்தான் வெளியிட்டுள்ளனர். 10 லட்சத்தில் ஒரு பங்குதான் சந்தேகம் இருக்கக்கூடும் என்கிற அளவுக்குத் துல்லியமாகத் தெரிந்த பின்னர்தான் (இதைத்தான் 5 சிக்மா என்பார்கள்) வெளியிட்டுள்ளனர்.
இப்படி ஒரு துகள் இருக்கும் என்பதை வெளியிட்டவர் பீட்டர் ஹிக்ஸ் என்பவர். 1964இல் ஒரு கட்டுரையில் இக்கருத்தை எழுதியிருந்தார். PHYSICS LETTERS எனும் ஏடு இக்கட்டுரையை வெளியிட மறுத்தது. என்றாலும் அமெரிக்காவின் PHYSICAL REVIEW LETTERS எனும் ஏடு வெளியிட்டது. அறிவியல் உலகம் அதுபற்றி விவாதித்து, ஆய்ந்து பார்த்தது. கண்டுபிடிப்புகளின் திரள், அவற்றை ஆய்வு செய்தபோது வெளிப்பட்ட மெய்யான நிலைப்பாடுகள், அவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்ட உண்மைதான் அறிவியல்! (SCIENCE IS NOTHING BUT COLLECTION OF OBSERVATIONS, FACTS AND TRUTHS) எனவே ஆய்வுகள் நடத்திப் பார்க்க முடிவு செய்தனர் அறிவியலறிஞர்கள்.
இணைப்புச் சக்தி எது?
உலகத்தைக் கடவுள் படைத்தார் என்று சொல்லிவிட்டுத் தூங்கிவிட்டது மதம். ஆனால் 13 ஆயிரத்து 750 கோடி ஆண்டுகளுக்கு முன் பேரண்டத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பின் (BIG BANG) காரணமாக பேரண்டம் உருவானதாக அறிவியல் கூறுகிறது. அணுக்களின் சேர்க்கைதான் உலகமும் மற்ற பொருள்களும். அணு என்ற சொல்லையே, டெமாக்ரடிஸ் எனும் கிரேக்கர் 2500 ஆண்டுகளுக்கு முன் கூறினார். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தி என்றெல்லாம் கூட நம்ம ஊர் ஆள்கள் பாடியிருக்கிறார்கள். அந்த அணு என்பது மூன்று பொருள்களின் கலவை என்றது அறிவியல். எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற மூன்றின் சேர்க்கை அணு என்றது அறிவியல். சேர்க்கை என்றால் சேர்த்தது எது? அதுதான் ஆய்வுக்குரிய பொருள்!
மிகப் பெரிய இடிப்பான் (COLLIDER) ஒன்றை நிலத்தின் அடியில் 100 மீட்டர் ஆழத்தில் அமைத்தனர். 27 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்தனர். பிரான்சு மற்றும் சுவிட்ஜர்லாந்து நாடுகளின் எல்லையில் வெட்டப்பட்ட சுரங்கத்தில் அமைத்துச் சோதனைகளை நடத்தினர். சுரங்கத்தை அமைக்கவே பத்து ஆண்டுகள் ஆயின. 1998இல் தொடங்கி 2008இல் முடித்தனர். நூறு நாடுகளிலிருந்து 10 ஆயிரம் அறிவியலாளரின் உழைப்பு. இதில் பொருத்தப்பட்ட மோதல் எந்திரம் (COLLIDER) மட்டுமே 30 ஆயிரம் லட்சம் யூரோ செலவு பிடித்துள்ளது. ALICE, CMS, ATLAS மற்றும் LHDB எனும் நான்கு வகை ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெருவெடிப்பின்போது நிகழ்ந்தவையாகக் கருதப்படும் வகைகள் இவை. இந்த ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் நடந்த CMS, ATLAS சோதனைகளின் முடிவில் ஹிக்ஸ் போசான் இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவரியில் சொல்லப்படக்கூடிய ஆராய்ச்சி அல்ல. 10-.9.2008இல் தொடங்கிய ஆய்வு மின்சாரக் கசிவினால் பாதிப்படைந்து நிறுத்தப்பட நேரிட்டது. சீர்செய்து 13 மாதங்கள் உழைத்து 20.11.2009இல் மீண்டும் ஆய்வு தொடங்கப்பட்டது. 2012 ஜூலை 4இல் முடிவு தெரிந்தது. மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து துல்லியமாகக் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர்.
பெண் அறிவியலாளர்
http://www.unmaionline.com/new/images/magazine/2012/july/16-31/ujnmai%20%2821%29.jpgஅட்லஸ் (ATLAS) சோதனையைச் செய்தவர் ஃபேபியோலா கியான்னாட்டி எனும் இத்தாலியப் பெண்மணி. 37 நாடுகளில் 169 நிறுவனங்களின் உழைப்பால் இச்சோதனை நடத்தினார் ஃபேபியோலா. அதுபோலவே மற்றொரு சோதனையான CMS சோதனையை நடத்தியவர் ஜோ இன்கான்டெலா எனும் அமெரிக்க இயற்பியல் அறிஞர்.
அய்ன்ஸ்டீனுடன் இணைந்து பணிபுரிந்து பல இயற்பியல் கண்டுபிடிப்புகளை 1920களில் அறிவித்த சத்யேந்திரநாத் போஸ் எனும் வங்காள இயற்பியல் அறிஞரின் பெயரால்தான் துகள் எனப்படும் போசான் (BOSON) கூறப்படுகிறது. அப்படி ஒரு 13ஆவது துகள் இருக்கிறது எனக் கூறிய ஹிக்ஸ் பெயரை இணைத்து ஹிக்ஸ் போசான் எனப்படுகிறது. அதனை மறைத்து கடவுள் துகள் என்று எழுதுவது மிகவும் கண்டிக்கத் தக்க விசமத்தனம் ஆகும். ஏறத்தாழ எல்லா இயற்பியலாளர்களுமே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தாம்! ஆனால், ஏடு நடத்துபவர்கள் வயிற்றை வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழும் பிறவிகள் என்பதால் கடவுளை இழுத்துப் போட்டு எழுதுகின்றனர்.
கடவுள் அழிந்தது
ஆறு நாள்களில் உலகமும் உயிர்களும் மரங்களும் செடிகளும் பூக்களும் படைக்கப்பட்டு விட்டன என்கின்றன மேலை நாட்டு மதங்கள். எல்லாவற்றையும் பிரம்மம் படைத்தது என்று மிகச் சுலபமாகக் கூறுகிறது இந்துமதம். இந்த மதத்திற்கு வியாக்யானம் கூறவந்த மதகுருக்கள், எல்லாம் மாயை என்று தள்ளிவிட்டனர். மாயனார் எனும் குயவன் செய்த மண்பாண்டம் என்றே கூறிவிட்டனர். இவர்களது மடமைப்பாசி பிடித்த மூளை எதையும் யோசிக்கவில்லை; செயல்படவும் இல்லை. கடவுளை ஒரு பக்கம் நம்பினாலும் எதையும் துருவிப் பார்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுவிட்ட மேலை நாட்டினர் சும்மா இருக்கவில்லை. ஆய்வுகள் செய்தனர். பாமரர்கள் அறியாதவற்றைப் பற்றி ஆய்ந்து, அறிந்து, முடிவுகளை அறிவித்தனர்.
அடிப்படையான 12 துகள்களும் 4 விசைகளும் சேர்ந்து உலகம் உருவானது எனக் கண்டுபிடித்துள்ளனர். என்றாலும் எங்கோ இடித்தது. ஆய்வு முழுமையடையவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த நிலையில் ஹிக்ஸ், இன்னும் ஒன்று இருக்கிறது என்றார். ஆய்வு தொடர்ந்தது. அறிவியல் முடிவு இல்லாததுதானே! QUARKS எனும் பிரிவில் 6 (UP. DOWN, TOP, BOTTOM, STRANGE, CHARMED)  துகள்களும் LEPTONS எனும் பிரிவில் 6 (எலக்ட்ரான், எலக்ட்ரான் நியுட்ரினோ, மூவான் (MUON), மூவான் நியுட்ரினோ, டாவ் (TAU), டாவ் நியுட்ரினோ) துகள்களும் ஆக 12 ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. தற்போதைய ஹிக்ஸ் போசான் துகள் 13ஆம் எண் பெற்றிருக்கிறது. இவற்றை இணைக்கும் விசைகளாக 4 உள்ளன. இத்துகள்கள் Z, W, போட்டான் (PHOTON), க்ளுவான் (GLUON) என அறிவியலாளர் குறிக்கின்றனர். இந்த 17ம் சேர்ந்து பேரண்டம் உருவானது என்பது அறிவியலின் கருத்து. (இங்கே இக்கட்டுரையின் முதல் வரியை மீண்டும் படிக்கவும்)
விசமங்கள் எத்தனை
இந்த மகத்தான ஆய்வில் முக்கியப் பங்காற்றியுள்ள பெண் இயற்பியலாளர் ஃபேபியாலா கியான்னாட்டி என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற ஆணின் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள், அந்த இலக்கணப்படியே, அந்த அம்மையாரைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்களோ?
கடவுள் என்பது இருக்கிறது என்றோ இல்லை  என்றோ கூறுவதற்காக நாங்கள் முயற்சி செய்யவில்லை. பேரண்டத்தின் அமைப்பு எத்தகையது என்பதைக் கண்டறிவதுதான் எங்கள் ஆய்வின் நோக்கம் என்கிறார் ஜான் எல்லிஸ் என்னும் இயற்பியல் அறிஞர். கடவுள் துகள் என்ற வார்த்தை ஆய்வாளர்களுக்குப் பரவசம் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. அந்தச் சொல் பத்திரிகை நடத்துபவர்கள் வைத்தது. அந்தத் துகள் இருப்பது எங்களுக்குத் தெரியும். அதை நிரூபிக்கத்தான் இந்த ஆய்வு என்கிறார் இந்திய இயற்பியலாளர் தபன் நாயக் என்பவர். ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகளில் முதன்மையானவர்.
6000 விஞ்ஞானிகளுக்கு மேல் இரவும் பகலமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஆய்வுக்கூடத்தின் (CERN)  வெளியே, நடனமாடும் நடராசன் சிலையை வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு சாமிமலை எனும் ஊரில் வடிக்கப்பட்ட பித்தளைச் சிலை. கலை அழகுக்கோ எந்தக் கண்றாவிக்கோ இதனை அங்கே வைத்திருக்கிறார்கள். அழிக்கும் கடவுள் எனப் புளுகப்படும் சிவனின் சிலை, அண்டம் எப்படி அமைந்துள்ளது என்பதை ஆயும் இடத்தில் இருப்பது நகைமுரண்தான்!
http://www.unmaionline.com/new/images/magazine/2012/july/16-31/ujnmai%20%2822%29.jpg
வலையும் விரியும்
வலைத்தளம் எனப்படும் இன்டர்நெட் தற்போதைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகச் செயலாற்ற எப்படி வடிவமைப்பது எனும் ஆய்வும் இங்கு நடத்தப்படுகிறது. அதன் முடிவும் தெரிந்தால் உலக அறிவு எங்கோ போய்விட முடியும் என்ப கொசுறுச் செய்தி.
இவையெல்லாம் எப்படி சாத்தியமாகின்றன? ஞானபூமி எனப் பீற்றிக் கொள்ளும் இந்தியாவில் ஏன் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை? ஞானம் முற்றுப் பெற்று விட்டதோ? வேதங்களும் உபநிசத்துகளும் அவற்றிற்கான பாஷ்யங்களும் வேதாந்த சாரங்களும் எதைச் சாதித்திருக்கின்றன? இயற்கைதான்
செர்ன் ஆய்வுக்கூடத்தில் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்ட செய்தியை உலகுக்கு அறிவித்த ஆய்வுக் கூடத்தின் செய்தித் தொடர்பாளர் சொன்னதை இங்கே கவனிக்க வேண்டும். நாங்கள் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டோம்! இயற்கைக்கு நன்றி (THANK NATURE)” என்றுதான் கூறினார். கடவுளுக்கு நன்றி எனக் கூறவில்லை. THANK GOD என்றுதான் கூறுவது பழக்கம். ஆனால் அவர் கூறவில்லை. காரணம், அவர் அறிவார் _ கடவுள் ஒன்றையும் கழற்றவில்லை என்று!
ஆனால் இங்கே? விண்வெளியில் யூரி காகரின் பறந்த நிகழ்ச்சியைப் பத்திரிகையில் படித்த இந்திய விஞ்ஞானி ஒருவர் இதெல்லாம் சுத்த தப்புங்க! விண்வெளி கடவுளின் சாம்ராஜ்யம். அங்கெல்லாம் மனுசாள் போகப்படாது எனக் கூறினார். அவர் சி.வெங்கட்டராமன் எனும் அய்யங்கார். சர் பட்டம் பெற்றவர். நோபல் பரிசும் பெற்றவர். ஆம், சர்.சி.வி.ராமன்தான்! ஆயிரம்தான் அறிவியலாளராக இருந்தாலும், இந்துமதப் புத்தி அவரைவிட்டுப் போகவில்லை! ஆனால் அங்கே அப்படி இல்லை!
அழகிய சிலையைக் கண்டால், கலைவண்ணம் காண்பதற்கு மாறாக, கடவுள் வண்ணம் காணும் புத்தி! சிற்பியைப் பாராட்டாமல், சிலையைக் கும்பிடும் புத்தி! அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகிலேயே அதிகம் பேர் அனுபவித்துக் கொண்டு வாழும் இந்திய நாட்டில் (மக்கள் திரள் 120 கோடிக்கு மேல்) அறிவியலை அறியாதது மட்டுமல்ல, அலட்சியப்படுத்தும் புத்தியும் இருப்பதை என்ன சொல்ல? அரசமைப்புச் சட்டமே வலியுறுத்தியும் கூட, அறிவியல் மனப்பான்மை வளரவில்லையே! இந்த ஏக்கம் தீருவது எப்போ? இந்தியா மாறுவது எப்போ?
- சு.அறிவுக்கரசு


No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!