வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்
வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்
வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்
-----------------
எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம்.
இதுல ஏதாவது நாலு குறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம். இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.
“நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.
ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் ஒரு பெண் போய் நடிக்க வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மா” என்று கூறி திருப்பி அனுப்பினார். பெண்கள் கேட்க விரும்பாத ஒரு அவமான வார்த்தை “ நீ அழகா இல்லை” என்பது தான். அந்தப் பெண்ணோ அந்த அவமானத்தை போர்த்துக் கொண்டு சோர்ந்து போய் படுத்து விடவில்லை. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார்.
ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் மர்லின் மன்றோ. இன்னிக்கு கூட நம்ம சினிமா பாடலாரிசியர்கள் “நீ மர்லின் மன்றோ குளோனிங்கா” என அவரை விடாமல் துரத்திக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே !
அவமானங்களை ஏய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.
பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும் ? அடைக்கப்பட்ட ஒரு கதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானு கோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ?
பள்ளிக்கூடத்தில் தோற்றுப் போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள்.
அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்தத் தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டு முறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் இவர் மட்டும் தான். ஆறாம் வகுப்பில் தோல்வி பெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இது தான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.
தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
“சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள்.
“சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்கு” என பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான் “சிக்கன் சூப் ஃபார் த சோல்” !. நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.
140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.
“ஏய் உன் மூஞ்சி சதுரமா இருக்கு. நீயெல்லாம் நடிகனாவியா ? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை” என்று விரட்டப்பட்டவர் தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜான் டிரவோல்டா. இன்று அவருக்கு இந்தியாவிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள். “என் மூஞ்சி எப்படி வேணா இருக்கலாம். ஆனா நான் நடிகனாவேன், ஏன்னா எனக்குத் திறமை இருக்கு” என்பது தான் அவருடைய பதிலாய் இருந்தது. முயற்சி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம். நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை. பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும்போது அதை வரவேற்று உள்ளே உட்காரவைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.
புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.
“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.
“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.
நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.
அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.
வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்
வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்
No comments:
Post a Comment