Monday, December 10, 2012

தனவந்த னாவதற்கு வழியைப் பாரு சமுதாயத் தொண்டெல்லாம் பிறகு பார்ப்போம்.


ஏழ்மையிலே நீயிருந்தால் சேற்றில் புரளும்
எருமையும் மதிக்காது; வாழ்க்கைத் தேர்வில்
கீழ்ந்தவனென் றால்உற்ற உறவும் உன்னை
விழிதேங்கும் பீழையென்றே உதறித் தள்ளும்
பாழ்பட்டுப் போகும்உன் பிறப்பு ; வீணாய்
பதராகிப் போகும்உன் எதிர்கா லம்தான்
சீழ்பிடித்த புண்ணாக உன்னை இந்த
சிறுபான்மைத் தமிழ்ச்சமூகம் ஒதுக்கி வைக்கும்.

குணக்குன்றாய் திகழ்கின்றாய் இருந்தும் உன்னை
குதிரைமுட்டை என்கின்றார் ; மனத்தால் கெட்டு
பணக்குன்றாய் உயர்ந்தோரைக் காலைத் தொட்டு
பணிவாகக் கும்பிட்டு ஒடுங்கி நிற்பார்
பணமிங்கு பாதாளம் மட்டு மல்ல
பரலோகம் வரைபாயும் அதனால் தம்பி
தனவந்த னாவதற்கு வழியைப் பாரு
சமுதாயத் தொண்டெல்லாம் பிறகு பார்ப்போம்.

போதுமென்ற மனமிருந்தால் அதனைக் கொண்டு
பொன்செய்யும் மருந்தொன்றைச் செய்ய லாமாம்
ஓதுகின்றார் நம்மினத்தார் இதனைப் போன்ற
உதவாத புண்ணாக்கு வேத மெல்லாம்
காதுகளை மலடாக்கி வறியோ ராக்கும்
காசுக்கு உதவாத இதனைப் போன்ற
தீதுசெய்யும் புண்மொழியை பொன்மொழி யென்றே
சித்தரித்து தன்முனைப்பைக் கெடுத்து விட்டார்.

கஞ்சப்பய லென்றுசொல்லி காய்வான் உன்னை
கருத்துடனே சிக்கனமாய் காசைச் சேர்த்தால்
பஞ்சப்பர தேசியென்பான் அவனே உன்னை
பஞ்சத்தில் நீவரண்டு போனால்; இந்த
நெஞ்சத்தில் விடம்கொண்ட நீசர் தம்மின்
நியாயத்தை நீகேட்க வேண்டாம்; கொண்ட
சஞ்சலங்கள் சங்கடங்கள் தீர வேண்டின்
சகலசௌபாக் கியங்கள்தரும் பணத்தைத் தேடு.

பசையென்று உவமையாகச் சொல்லும் அந்த
பணமென்ற பேறதனைப் பெற்றால் தம்பி
பதவியுடன் பட்டங்கள் பரிவா ரங்கள்
பாராட்டு பொன்னாடை எல்லாம் நீயே
சதமென்று புகழ்பாடி சரணம் பாடும்
தரணியில்;நீ நினைப்பதெல்லாம் நலமே கூடும்
உதவிகோரி தெய்வங்கள் உன்னை நாடும்
உபயம்திருப் பணியென்றே ஊரே தேடும்.

எளியவனென் றால்உன்னை எலியும் எதிர்க்கும்
ஏனென்று கேட்டாலே எட்டி உதைக்கும்
வலியவனென் றால்சீறும் புலியும் மதிக்கும்
வாவென்றால் மண்டியிட்டு வணங்கித் துதிக்கும்
நலிவுபொருளா தாரத்தை ஆட்சி செய்தால்
நல்வாழ்வு மட்டுமல்ல சமுதா யத்தில்
மலிவாகிப் போகும்உன் தன்மா னந்தான்
மதிப்பிழந்து போகும்உன் வாழ்வு தம்பி
    -- பகுத்தறிவுக் கவிஞர்  மாயவன் 

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!