Friday, December 23, 2011

என்று மாறுமோ இந்த நிலை? தந்தை பெரியாரின் கேள்விக்கு தமிழினமே உன் பதில் என்ன????



1.தமிழர் நிலை தாழ்ந்திருக்கிறது.
2.சமுதாயத்தில் கீழான சாதி.
3.கல்வியில் 100க்கு 80 தற்குறி.
4.செல்வத்தில் 100க்கு 75 கூலி சீவனம்.
5.தொழிலில் 100க்கு 75 சரீரப் பாடுபட்டு உழைக்கும் தொழில்(ஈனத் தொழில்) என்பது.
6.சர்க்கார் உத்தியோகத்தில் ஏவலாளி, பியூன், ஜவான், கிளார்க் வேலை (வகுப்புரிமையினால் தற்போது சிறிது அதிகம்)
7.ஒற்றுமையில் 108 சாதியும், கட்டுப்பாட்டில் அவனவன் சுய நலமும், ஒருவனை ஒருவன் ஏய்ப்பதுவம்,ஒழிக்கச் சமயம் பார்ப்பதும்.
8.சமயத்தில் (மதத்தில்) எதிரிகளுக்கு அடிமையாய் இருந்து உழைத்துப்  போடுவது.
9.அரசியலில் வஞ்சக அயோக்கியருக்கு வால் பிடித்துக் கை தூக்குவது.
10.அதோடு, தமிழ்னாடு பூராவிலும் தமிழனால் மதிக்கக் கூடிய ஒரு தமிழன் கூடக் கிடையாது. அது போல,ஒரு தமிழனால் குறை கூறப்படாத மற்றொரு தமிழனும் கிடையாது.
11.தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது.
12.நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும் தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும் காரணம் என்ன என்பது கேள்வி.


Thursday, December 15, 2011

இப்போது புரிகிறதா இவ்விரு வார்த்தைகளும்....

[  (11.12.11) மதுரையில் நடைபெற்ற, முனைவர் வா.நேரு அவர்கள் எழுதிய "பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்" நூல் அறிமுக விழாவில், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர். மானமிகு.தகடூர்.தமிழ்ச்செல்வி அவர்கள் ஆற்றிய
உரையிலிருந்து ]

"sympathi" மற்றும் "empathy" ஆகிய சொற்கள், திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களால்  தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. "sympathi" என்றால், மற்றவரின் நிலையை அறிந்து, அவர் படும் துன்பத்தை எண்ணி வருத்தப்படுவது,மனமிரங்குவது ஆகும்.  "empathy" என்றால், மற்றவராகவே மாறி, அவரது துன்பங்களை உணர்ந்து, அவைகளை நீக்கிட வலிந்துதவுவது,போராடுவது என்பதாகும்.
தந்தை பெரியார்,
பிறந்ததோ செல்வக் குடும்பத்தில், ஆனால் துன்பப்படும் ஏழையாகவே மாறி, அவர்தம் அவலநிலை போக்கிட அரும்பாடுபட்டார்.
சாதியிலும் மேல் சாதியில் தான் பிறந்தவர் என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளம்படும் துயரை,அறியாமையினால், அவர்களே அறிந்திராவிட்டாலும் அதனைத் துடைத்தெறிய போர்க்களம் பூண்டார்.இதையெல்லாம் விட, ஒரு ஆணாகப் பிறந்த பெரியார் தான் பெண்ணடிமை தீர,எந்த பெண்ணும் சிந்தித்திடாத அளவுக்கு, ஒரு பெண்ணாகவே மாறி சிந்தித்து நெருப்புக் கருத்துக்களால் ஆணாதிக்கத்தை அடித்து விரட்டினார். இப்போது புரிகிறதா இவ்விரு வார்த்தைகளும்....

Tuesday, November 8, 2011

தீபாவளி கொண்டாடும் தீக்கதிர்

தீபாவளி கொண்டாடும் தீக்கதிர்

தீவாவளிக்குச் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்டு) அதிகார பூர்வகட்சி ஏடான தீக்கதிர்!

மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் இராமா யணம் பாட ஆரம்பித்தது போல எதை எதையோ சமாதானமாகச் சொல்லுவதற்குக் கடுமையான முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆதிக்கவாதிகள், நகராசுரனை அழித்தார்கள் என்று ஒப்புக் கொண்டு எழுதிவிட்டு, அந்த மை உலருவதற்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன என்று வக்காலத்து வாங்கி எழுதுகிறது. கடுமையான குழப்பத்திற் கிடையேயும், குற்ற உணர்வோடும் எழுதப்பட்டு இருப்பது வரிக்கு வரி தெரிகிறது.

காடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங்களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது என்று தெளிவாக எழுதும் தீக்கதிர் - நரகர்களை அழிக்கும் வேறு சக்தி களோடு சேர்ந்து கொண்டு விழாக் கொண்டாடலாம் என்கிறதா?

மக்களின் கொண்டாட்டத் தேவை களை அங்கீகரித்து அவர்களோடு பங் கேற்று, இயற்கையின் உண்மைகளையும், சமுதாய நிலைமைகளின் அடிப்படை களையும் புரிய வைக்கும் பெருமுயற்சி தேவைப்படுகிறது. மகத்தான வரலாற்று இயக்கமாகப் பரிணமிக்க வேண்டிய அந்த முயற்சியில்; சிறு பங்களிப்பே தீக்கதிர் தீபாவளி சிறப்பு மலர் என்று கொண்டாட் டம் ஒரு பண்பாட்டுத் தேவை என்று தலையங் கமாகத் தீட்டப்பட்டுள்ளது.

இந்த வரிகளில் ஏதாவது தெளிவும், பொருளும் இருக்கிறதா? புரிகிறதா?

கொண்டாட்டங்கள் முக்கியம்; காரணங்கள் முக்கியமில்லை என்பதுதான் தீக்கதிரின் கருத்தாக இருக்கிறதோ!

மூடத்தனத்தின் அடிப்படையில் நடைபெறுவது கொண்டாட்டமாக இருந்தாலும் அதில் அய்க்கிய மாகிவிட வேண்டியதுதான் என்கிறது தீக்கதிர்.

இந்த அளவு கோல் இது போன்ற பண்டிகைகளில் தானா? வர்க்கப் பார்வை, வருணப் பார்வை இவை எல்லாம் கூட, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று வந்துவிட்டால் தேவைப்படாது என்பதுதான் டயலிட்டிக் மெட்டீரியலிசமா?கூட்டத்தில் கோவிந்தா போடுவதுதான் முற்போக்குச் சிந்தனையா?

தீபாவளிக் கொண்டாட்டம் என்பதற்குச் சொல்லப் படும் காரணங்கள் மகாமகத்திற்கும், நிர்வாணச் சாமியார்களுக்கும், கும்பமேளாவிற்கும் பொருந் தாதா? நவராத்திரிக்குப் பொருந்தாதா?

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாளை, கோட்சே கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு விழா கொண்டா டலாமா?

இதில் கூடுதலாகப் பொருளாதார காரணங்கள் வேறு!

விழாக்கள் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப் பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவு கின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தகச் சுழற்சிக்கு வழி வகுத்து பொருளா தார தேக்கத்தை ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன என்று பொருளாதார முலாம் வேறு பூசுவதை நினைத்தால் ஒரு பக்கம் வேதனையும், இன்னொரு பக்கம் விலா நோகச் சிரிப்பும்தான் முட்டிக்கொண்டு வருகின்றன.

மூடப் பண்டிகைக்காக நம் தொழிலாளர் தோழர்கள் கடன் வாங்கி செலவு செய்வதைத் தடுப்பதற்குக் கருத் துக்களைச் சொல்ல வேண்டியவர்கள் தீபாவளிக்காகச் செய்யப்படும் செலவுகள் பொருளாதார தேக்கத்தை உடைக்கப்பயன்படுகின்றன என்று சொல்லுவது மூலதனத்தில் எத்தனையாவது பகுதி என்று தெரியவில்லை.

தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் போனஸ், புஷ்வாணமாகப் பொசுங்கிப் போய்விடவேண்டும் என்று நினைக்கலாமா?

கம்யூனிஸ்டாக இருப்பவன் (அவன் மார்க்ஸிய வாதியாக இருக்கும் பட்சத்தில்) மூடப் பழக்க வழக்கங்கள் - மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் வளர்ச்சி அடையாத மக்கள் மனதில், அறிவுப்பூர்வ மான விமர்சனம் செய்து மதத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கப்பாடுபடவேண்டும். இல்லை யெனில் மார்க்ஸியவாதி என்ற பெயரில் மார்க்ஸி யத்தைக் கொச்சைப்படுத்துபவனாகத்தான் ஒரு கம்யூனிஸ்டு இருக்க முடியும் என்கிறார் மாவீரர் லெனின். (புரட்சிகரப் பொருள் முதல்வாதத்தின் முக்கியத் துவம் எனும் கட்டுரை)

மார்க்ஸிய தோழர்களே! உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள் !

மின்சாரம்

Monday, October 24, 2011

தீ . . . வாளி!----அறிஞர் அண்ணா

தமிழரின் தன்மானத்தைக் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர். மடத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - காரணத்தோடு. முரட்டுப் பிடிவாதக்காரரும், மூடமதியிலே மூழ்குவதிலே, சேற்றிலே அமிழ்ந்து ஆனத்திக்கும் எருமைபோலக் களிப்போரும், எட்டிலே உள்ள எதற்கும், எம்மால் புதுப்பொருள் கூறமுடியும், புலமையின் காலணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோரும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்று கூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விருமபவில்லை. புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து, விண்கருக்கும்வரை உழுதாலும பயனில்லை. புத்தியின் உச்சியை அடைந்துவிட்டதாகக் கருதும் பேர்வழிகளும் புறம்போக்குக்கும் அதிக வித்தியாசமில்லை. புரட்சி வேகம் நாட்டிலே பெருக்கெடுத்து ஓடும்போதுதான், புறம்போக்குகளும் வயலாகி, வளம்பெறும் ஆனால் புரட்சி வேசம் உண்டாக தீவிரவாதிகள் முதலிலே, ஆரித்தீயும் ஆரிய வாளியும் கலந்ததெனவரும இப்பண்டிகையை பகீஷ்கரிக்கவேண்டும். ஆரியர் கொண்டாடினாலாவது பொருள் உண்டு. தோற்கடிக்கப்பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்டத் திராவிடர் அதனைக் கொண்டாடுவது, இனஇழிவுக்கு அடையாளமென்போம். கள்ளனிடம் சிக்கிக்கற்பழிக்கப்பட்ட கன்னி, கண்ணீருடன் இருக்கும்போது கள்ளீ! உன் பொருட்டு நான் எடுத்துக்கொண்ட பிரயாசை எவ்வளவு? அலுப்பு எவ்வளவு? இந்தச் சந்தோஷத்தை உனக்கு அளித்ததற்காக ஓர் அருமையான, பாட்டு பாடிக்கொண்டே என் கால்களைச் சற்று வருடிக்கொண்டிரு, நான் தூங்குகிறேன் என்று கள்ளன் கட்டளையிட, கன்னி, அவன் காலைப் பிடித்துக்கொண்டு, கானம் செய்வது போன்றது, தீபாவளியைத் தமிழன் கொண்டாடுவது! ஓநாய்க்கு உபசாரம் செய்ய ஆடு அமர்த்தப்படுவதுபோல, பக்காத் திருடனின் பாதக்குறடுகளை, சொத்தைப் பறிகொடுத்தோன் சுமப்பதுபோல, உதைக்கும் கழுதையின் காலுக்கு உதைப்பட்டவன், தங்கத்தால் இலாடம் கட்டுவதுபோல, கொட்டும் தேளை எடுத்துக் கண்களிலே செருகிக்கொள்வதுபோல, மனைவியைக் கற்பழித்தவனுக்கு மலரபிஷேகம் செய்வதுபோல, எந்த ஆரியம் மூடத்தனத்தை மூட்டித் தமிழகத்தைத் தீய்த்ததோ, மடைத்தனத்தை வளர்த்து தமிழரின் மானத்தை மாய்த்ததோ, சனாதனத்தைப் புகுத்தித் தமிழரின் செல்வத்தைச் சுரண்டிற்றோ, அந்த ஆரியத்துக்குத் தமிழர் தூபதீப நைவேத்யமிடுவது, அவர்களின் ஆணவத்துககு அறிகுறியான நாட்களை, விழாக் கொண்டாடுவதும் ஈனத்தனம் என்போம்.
தீயும் வாளியும், தமிழரைக் கெடுத்ததுபோதும், இனியேனும் தீபாவளி போன்ற தீயரின் திருவிழாக்களைக் கொண்டாடாது, திருந்துவரா, வைதீகர்கள் என்று கேட்கிறோம். எத்தனை தமிழர்கள் தீபாவளியை நாங்கள் கொண்டாடவில்லை என்று கூறுகின்றனரோ என்பதைப் பொறுத்துத்தான், தமிழரின் மறுமலர்ச்சி இருக்கிறது. இந்த நமது உணர்ச்சி, இன்று, சில ஆயிரவருக்கு மட்டுமே உண்டு என்ற போதிலும், அந்தக் தொகை பெருகிவருவது நமக்குப் பெருமகிழ்வூட்டுகிறது. இன்று நாம், தமிழரை நோக்கி, புதுவைத் தோழர் சிவப்பிரகாசம் அவர்கள் கேட்பதுபோல,
தீந்தமிழான செந்
தேன் மொழிநாடே
தீமை வைதீகம்
ஏனோ நீ ஏற்றாய்?
என்று கேட்கும் நிலையில் மட்டுமே இருக்கிறோம். என் செய்வது!
(திராவிட நாடு - 24.10.1943)

Thursday, October 13, 2011

ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன?

அண்ணா தி.மு.க.வுக்குச் சொல்லுங்கள்!

ஆயுத பூஜையைக் கலைஞர் ஏற்கவில்லை; ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேசுகிறார் என்று திமிரடியான வார்த்தைகளைப் பயன் படுத்தும் தினமணியே! தினமணியே!

கலைஞர், பெரியார், அண்ணா கொள்கை களைத்தான் சொல்லு கிறார். நியாயமாக பெரியார் அண்ணா கொள்கைகளைப் பின்பற் றாமல் அதற்கு எதிராக பார்ப்பனீயத்துக்கு வக் காலத்து வாங்கும் வகை யில் ஆயுத பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரைத் தான் விமர்சித்திருக்க வேண்டும், தினமணி! ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன? இதோ! எண்ணிப்பார் கோபியாமல்! எலக்ட்ரிக் இரயில்வே,

மோட்டார் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இவை களுக்காக மருந்து ஆப்ரே ஷன், ஆயுதங்கள், தூரதிருஷ் டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப்மெஷின் அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத் துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்,

இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனி தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் ஊழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற் றைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடு பட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம்.

ஆயுதபூசை, சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்! அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர்; நவராத்திரி கொண்டாடி னவர்களல்லர்! நூற்றுக்கு நுறுபேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

கர்ப்பூரம் கூட நீ செய்த தில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாத வன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இது வரை, என்ன, புதிய , அதி சயப் பொருளைக் கண்டு பிடித்தோம்? உலகுக் குத் தந்தோம் என்று யோசித் துப் பாரப்பா! கோபப் படாதே! உண்மை அப்படித் தான் நெஞ்சைக் கொஞ்சம் உறுத்தும். மிர ளாமல் யோசி. உன்னையும் அறி யாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல் களை எல்லாம் கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கி லேயன் வருவதற்கு இடையே இருந்த காலத் திலே அச்சு இயந்திர மாவது கண்டுபிடித்திருக் கக்கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டு பிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங் கத்தை அச்சடித்துப் படித்து அகமகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே! அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாடவைத்து மகிழ்கிறாயே! எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோ கப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரி சையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அசோசி யேடட் அல்லது இராயட்ர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில் லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை! சிபி, சினிமா பார்த்த தில்லை! தருமராசன், தந் திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளையெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கி றோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள் களைத் தந்த அறிவாளர் களை மறந்துவிடுகிறோம், அவர்கள்

சரசுவதி பூசை; ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கி றோம். இது முறைதானா?

பரம்பரைப் பரம்பரை யாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை; ஆயுத பூசை நமக்குப் பலன் தரவில் லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும்படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதாரப் புருடர்கள் காலத்திலே கூட இல் லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக் கும். அதையும் தாண் டினால் விவேகம் பிறக் கும். யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக் குள்ளாவது! - (திராவிட நாடு- 26.10.1947)

இதுதான் அண் ணாவின் கொள்கை! அந்த அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் கலைஞரைச் சாடுவதும், அந்த அண் ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத் தைக் கொடியிலும் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரைச் சாடாமல் விடுவதும் எதற்காக?

மனுவாதி ஒரு குலத் துக்கொரு நீதி என்பார் களே - அது இது தானோ!

Sunday, September 25, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (11)

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (11)

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நிலைப்பாடு என்ன?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், பெரியாரை திராவிடர் கழகத்திலிருந்து நீக்கி வைத்து திராவிடர் கழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார் என்று துக்ளக் கட்டுரை கூறுகிறது!

அப்படியெல்லாம் ஏதோ உணர்ச்சி வயப்பட்டுச் சொன்ன வர்கள் எல்லாம், கடைசியில் தந்தை பெரியார் பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்து பெரியார் பக்கமே நின்றனர் என்பது துக்ளக் எழுத்தாளருக்குத் தெரியுமா?

அதே புரட்சிக் கவிஞர் அன்னை மணியம்மையார்பற்றி என்ன எழுதினார்?

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் - தமிழரைக் காப்பேன் ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல.

குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்போம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம்.

யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறி யினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை.

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இயக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்ன தில்லை. எம் அன்னை யாவது முன்னே குவிந் துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி - அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலை யில் வைத்தார் என்பதுமில்லை. - 10.4.1960 குயில் இதழ்

கோவை அய்யாமுத்து, ப. ஜீவானந்தம் அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று ஒரு பட்டியலைக் காட்டி இவர்கள் எல்லாம் பெரியாரைக் குறை கூறினார்கள் என்று துக்ளக்கில் திருவாளர் இலட்சுமி நாராயண அய்யர் எழுதியிருந்தாலும் இவர்கள் அத்தனைப் பேர்களுமே பிற்காலத்தில் தந்தை பெரியார் அவர்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, கருத்துத் தெளிந்து தந்தை பெரியார் அவர்கள்பால் அன்பும் மதிப்பும் கொண்டு, அய்யாவின் ஆதரவையும் பெற்றார்கள் என்கிறபோது, துக்ளக் தூக்கிய துப்பாக்கிக்கு துக்ளக் கூட்டமே இரையானது என்பதுதான் கண்ட பலன்!

Thursday, August 18, 2011

கூத்தங்குடி அழகு இராமானுஜனும் அண்ணா தின்ற அப்பளமும்!

கூத்தங்குடி அழகு இராமானுஜனும் அண்ணா தின்ற அப்பளமும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
கடந்த 13ஆம் தேதி (ஆகஸ்ட் 2011) காலை நான் மறைந்து விட்ட பல பொது நலத் தோழர்கள், பிரமுகர்கள், கழக வீரர்கள் இல்லத்திற்குச் சென்று அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, நானும் வாழ்விணையரும், தோழர் களும் திரும்பினோம்.

திருவாரூரில் எனது நீண்ட நாள் நண்பரான லெனின் கோவிந்தராஜ் அவர்கள் மறைந்து விட்டார். (அவரும் சின்னக்குத்தூசி அவர்களும் மிகவும் நெருங்கிய தோழர்கள் ஆவார்கள்). எனக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதி தனது உள்ளத்தைக் கொட்டுவதற்கு; சீரிய திராவிடர் இயக்க பெரியார் - அண்ணா - கலைஞர் பற்றாளரான லெனின் கோவிந்தராஜ் அவர்கள் தவற மாட்டார்கள். அவரது மறைவு திராவிடர் இயக்கப் பேராதரவாளர்களின் இழப்புப் பட்டியலில் இடம் பெறுவதாகும்.

அவரது வாழ்விணையர், பிள்ளைகள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் கூறும் முகத்தான் அங்கே சென்றபோது, சில நண்பர்கள் பல புத்தகங்களை எனக்கு அளித்தார்கள். திருவாரூர் நண்பர் திரு ஜி. வரதராஜன், (இவர் Waves foundation managing trustee) ஒரு புத்தகம் தந்தார்.

காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள் என்ற தலைப்பில் திரு. கூத்தங்குடி அழகு இராமானுஜன் அவர்களால் எழுதப்பட்ட அற்புதமான நடைச் சித்திரங்களின் தொகுப்பு. சுவையூட்டும் நிகழ்வுகள் - நறுக்குத் தெறித்த நல்ல தமிழ்நடை.
இப்படி ஓர் அற்புதமான எழுத்தாளரின் எழுத்தோவியத்தைப் பயணத்தில் படித்து, களைப்பை தீர்த்துக் கொண்டேன். சென்னை ஆலந்தூர் பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் வெளியிட்ட மிக அருமையான வாழ்விலக்கியம் இது! அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

சோழ வள நாடு சோறுடைத்து என்பதுபோலவே சோழவள நாட்டின் கருத்தாளர் உடைத்து என்பது புது மொழி; காவிரிச் செல்வர்களான அக்கருத்தாழ மிக்க எழுத்தாளர்களில் ஒப்பற்ற ஒருவராக திரு. கூத்தங்குடி அழகு இராமானுஜம் அவர்கள் திகழுகிறார்கள். அவரது அந்த சிறுசிறு எழுத் தோவியங்கள் எங்களை பிரமிக்க வைத்தன!

கைக்கெட்டும் குட்டைச் சுவர்களில் கரித்துண்டுகளால் கிறுக்கிக் கொண்டிருந்தவனின் எழுத்துக்கள் இது எனத் தன்னடக்கத்தோடு கூறும் இந்த கூத்தங்குடி அழகு இராமானு ஜன் அவர்கள் 72 வயதிலும் ஊதுபத்தி கள் தயாரிப்பை கைத் தொழிலாக கொண்டுள்ளவர் என்கிற தகவல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!

அவரது துடிப்பு மிகுந்த எழுத்துக்கள் எம்மைப் பெரிதும் ஈர்த்தன. அவரது நூலை வெளியிட்ட இஸ்லாமிய சகோதரர் குறிப் பாக ஷேக் அப்துல்லாவுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிக் கடன் பட்டுள்ளது.

அதில் அப்படி என்ன உங்களைக் காந்தமாக இழுத்தது என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ சாம்பிளுக்கு ஒரே ஒரு எழுத்தோவியம் (தலைப்புகளே அருமையானவை).

அண்ணா தின்ற அப்பளம் என்ற அருமையான சிறு நிகழ்வின் இலக்கியப் படிப்படிப்பு இதோ:

குன்றைப் போன்ற
தலைவர் குழந்தை போல
விடைபெறும்போது,
அந்த வார, திராவிட
நாடு பத்திரிகையை
அரங்கண்ணலிடம்
கொடுத்துச்
சென்றார்.
சிறுபொழுது சென்றது.
திராவிடநாடு இதழ்
பிரிக்கப்பட்டது. ஒரு உறை
கீழே விழுந்தது.

பேரறிஞர் அண்ணா,திராவிட நாடு என்ற வாரப் பத்திரிகை நடத்தினார். இதழ்கள் தோறும் கடிதம் எழுதுவார். படிக்கும் நம்மில் புதுமைகள் பதிப்பார். அனைவரும் அதையே விரும்பிப் படிப்பர். எங்கள் பள்ளிப் பருவத்தில் அதனைப் படிக்க வாரம் ஒருமுறை வள்ளுவர் படிப்பகம் செல்வோம்.

அப்பத்திரிகையின் துணையாசிரியர் இராம. அரங்கண்ணல், கோமல்காரர், குறுநகை சிந்துவார். இனிக்கப் பேசுவார். நட்பைப் போற்றுவார். ஊர்ப்பற்றில் திளைப்பார். உறவில் குழைவார்.

1958ஆம் ஆண்டு என்று நினைக் கிறேன். கோமல் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். நானும், என் நண்பனும் பார்க்கும் ஆசையில் ஊருக்குப் போனோம். அவன் பெயர் அங்கப்பன், கழகப் பற்று உடையவன். நான், தமிழ்ப் பற்றால் கழக மேடைகளை வலம் வருபவன்.

அரங்கண்ணல் வீட்டில் இல்லை. உடல் நலம் சரியின்மையால் திருவாரூர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். மதியப் பொழுது உணவை எண்ணி கோம லுக்குப் பக்கத்தேயுள்ள திருக்கோபுர வாசலில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றோம்.

பவானி அம்மையார் சிரித்த முகத் துடன் வரவேற்றார். விசுப்பலகையில் அமரச் சொன்னார். அமர்ந்தோம். என்னை மட்டும் உள்ளே அழைத்தார். அங்கப்பன் யாரென வினவினார். அவர்கள் வீட்டுச் சூழலில் வறுமை தெரிந்தது. நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி.

முன்னறிவிப்பின்றிச் சாப்பாட்டு நேரத்தில் விருந்தினரோடு வந்திருப்பது அவர்களுக்கு சுமைதரும் எனப் புரிந்தது. மடமை செய்தவனாய் மனம் வருந்தியது.

உடனே ஒரு பொய்யைச் சொன்னேன். அம்மா, அங்கப்பன் யார் வீட்டிலும் சாப்பிட மாட்டான். உங்கள் ஊர்க் கோவில் பிரசாதம் சாப்பிட ஆசைப்பட்டான். அதனால்தான் அழைத்து வந்திருக் கிறேன், என்றேன்.

இதோ வாங்கி வரச் சொல்கிறேன், என்றார்கள். வேண்டாம். நாங்களே கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வாங் கிக் கொள்கிறோம், என்றேன். இருவரும் புறப்பட்டோம். கோவிலை வலம் வந்தோம். சிவாச்சாரியாரிடம் பட்டைச் சோறும், தேன்குழலும் கேட்டோம். படையல் சோறு வந்தது. அவர் கேட்ட தொகையைக் கொடுத்தோம். சாப்பிட்டோம்.

சிறப்போடு வாழ்ந்த பவானி அம்மை யார் குடும்பம் வறுமையில் சிக்கி, ஆலயப் பணி புரிவதைச் சிவாச்சாரியார் மூலம் தெரிந்து கொண்டேன். மனச்சுவையோடு நடந்தேன். நினைவில் கொள்ளத்தக்க தொரு மகிழ்வான நிகழ்வு அன்று நிகழும் என்பதை அறியாதவனாய் மீண்டும் கோமலுக்கே வந்தேன்.

மருத்துவமனையில் இருந்த அரங் கண்ணல் திரும்பி இருந்தார். என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

பேசிக் கொண்டிருந்தோம். மணி மாலை நான்கு. ஒரு மகிழுந்து வந்து நின்றது. அண்ணாவும், தஞ்சாவூர்த் தி.மு.க. செயலாளரும் இறங்கி வந் தனர். நாங்கள் பிரமித்து எழுந்தோம். வணக்கம் கூறினோம்.

சிரித்தபடியே பதில் வணக்கம் கூறி வந்தமர்ந்த அண்ணா, அரங்கண்ண லின் உடல் நலம் கேட்டார். ஆறுதல் கூறினார். பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டார்கள். வேறு வேறு செய்திகள் பேசினர். மறுவாரம் வந்துவிடுவதாக அரங்கண்ணல் சொன்னார். இயல் பாகத் தஞ்சாவூர் வர நேர்ந்திருக்கிறது.

அங்கிருந்து அரங்கண்ணலைப் பார்க்கும் அவாவில் கோமல் வந்திருக் கிறார். பேசிக் கொண்டிருந்தபோது பதிமூன்று வயதுப் பெண் ஒரு தட்டில் பொரித்த அப்பளங்களும், கூழ் வடகமும் கொண்டு வந்தாள்.

அரங்கண்ணல் திரும்பிப் போகச் சொன்னார். திரும்பிப் பார்த்தார் அண்ணா. பெண் உள்ளே போய் விட்டாள். என்ன அது, கொண்டு வரச் சொல். அண்ணா சொன்னார். மாலையில் நான், பொரித்த அப்பளமும், கூழ் வடகமும் விரும்பிச் சாப்பிடுவேன். அதை எடுத்து வந்து விட்டாள், என்றார் அரங்கண்ணல்.

நீ சாப்பிடுவதை நான் சாப்பிடக் கூடாதா? என்றார் அண்ணா.

உங்களுக்குப் பலகாரம் செய்யச் சொல்லியிருக்கிறேன் என்றார் அரங்கண்ணல்.

வேண்டாம்ப்பா. நேரம் இல்லை, என்றார் அண்ணா.

பொரித்த அப்பளமும், கூழ்வடகமும் வந்தன. அவற்றைத் தின்ற அண்ணா அவற்றின் சுவையை மிகவும் பாராட்டி னார். காஃபி பருகினார். நகரச் செய லாளரும் நாங்களும் அதைத் தின்று மகிழ்ந்தோம். உடன் புறப்பட்டார் அண்ணா.

வரும்போது அப்பளம் தயாரித்து எடுத்து வா, என்றார். குன்றைப் போன்ற தலைவர் குழந்தை போல விடை பெறும்போது, அந்த வார, திராவிட நாடு பத்திரிகையை அரங் கண்ணலிடம் கொடுத்துச் சென்றார்.

சிறுபொழுது சென்றது. திராவிட நாடு இதழ் பிரிக்கப்பட்டது. ஒரு உறை கீழே விழுந்தது. ரூபாய் நோட்டுக் களோடு சிறு காகிதத் துணுக்கும் இருந்தது. அதில், செலவுக்கு வைத் துக் கொள். உடல் நலமானதும் வந்து சேர், என்று எழுதப்பட்டிருந்தது. நெகிழ்ந்துப் போனார் அரங்கண்ணல்.
வாழ்க, கூத்தங்குடி அழகு இராமா னுஜன்! வளர்க அவரது இலக்கியப் பணி!! (வாழ்வியல் சிந்தனைகள் ---தமிழர் தலைவர் கி.வீரமணி )

Monday, July 18, 2011

மாணவ மணிகளே, கொஞ்சம் கேளுங்கள்!- தமிழர் தலைவர் கி.வீரமணி

மாணவ மணிகளே, கொஞ்சம் கேளுங்கள்!   

வெளிநாடுகளில் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் பணியாற்றி அனுபவம் பெற்ற கல்வியாளர்களான அறிஞர்கள் கல்வி கற்கும் மாணவச் செல்வங்களுக்கு பயன்படும்படி பத்து அறிவுரைகளை இரத்தினச் சுருக்க மாகக் கூறியிருக்கிறார்கள்!
அந்த 10 கட்டளைகளை நமது மாணவ மணிகள் பின்பற்றினால் அவர்களது வெற்றி உறுதி. வெற்றி என்று நாம் குறிப்பிடும்போது, வெறும் தேர்வில் வெற்றி என்பதை மட்டும் எண்ணிக் குறிப்பிடவில்லை. அது முக்கியம்தான் என்ற போதிலும் கூட, அதைவிட முக்கியமாக அவர்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெற்று வாகை சூடுவார்கள் என்பது உறுதி.
1. விடாமுயற்சி மிகவும் தேவை. ஒரு முறை முயன்று செயல்களில் ஈடுபடும் போது உடனே வெற்றி கிட்டவில்லை என்ற உடனே பலர் சலிப்படைந்து, சங்கடப்பட்டு, நொந்து நூலாகி இனிமேல் நமக்குப் படிப்பே வராது போலிருக்கிறது. எனவே நாம் ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற அவசரப்பட்ட ஆத்திர முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை விட மாபெரும் தவறு வேறு கிடையாது!
வெற்றி வராமல் தோல்வி கிடைத் தால் மனமுடைந்து போகவேண்டிய அவசியமே இல்லை. மீண்டும் மீண்டும் -களைப்பு, சோர்வு இன்றி துணிச்ச லுடன் அம் முயற்சியில் ஈடுபட்டுத் தொடர்ந்தால் மறுமுறை நிச்சயம் வெற்றி கிட்டும்.
இது ஏதோ தேர்வுக்கு மட்டும் பொருந்தும் உண்மை அல்ல; வாழ்க்கை யிலும் எத்தனையோ முறை தோல்வி கண்டு மீண்டும் முயன்று வெற்றி பெற்றவர்களின் கதைகள் - ராபர்ட் புரூசிலிருந்து, விஞ்ஞானி எடிசனிலி ருந்து எத்தனையோ எடுத்துக் காட் டுகள் உண்டே வரலாற்றில்.
2. அறைகூவல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு ஏற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். அறைகூவல்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் வரவேற்று, எதிர் கொள்ளுங்கள்; காரணம் அவை அனைத் தும் அனுபவங்களாகும். நன்மை வாழ்வில் கிட்டுகின்ற அவைகளை அனுபவிக்காவிட் டால், அதனை முயற்சிக்காமல் இருந்து விட்டால், அந்த அறை கூவல்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்துகொண்டால், அது போன்ற வாய்ப்பு மூலம் உங்களை நீங்கள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியாத மிகப் பெரிய இழப்பாக அதுவே அமைந்து, உங்கள் வலிமையைக் குறைத்து விடக்கூடும்.
3. சில தோல்விகளைக் கண்டு கலங்குவதற்குப் பதிலாக, அவைகளை வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிய வழி களைக் காணத் தூண்டும் தூண்டு கோல்களாகக் கருதி மேலும் உழைக்க, முயற்சிக்க உறுதி கொள்ளுங்கள்.
4. எதையும் முழுமையாகச் செய்து முடித்தோம் எனபதை விட அதை எப்படி உயர்தர நேர்த்தியாக (Excellent) செய்தோம் என்று நினைத்து, அந்த உழைப்பின் கனிகளைச் சுவைக்கும் அருமையான வழிமுறைகளை அறிந்து கொண்டு சாதித்தோம் என்று பெருமைப்படுங்கள்.
5. தெரியாதவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்கு அச்சப்படாதீர்கள்; மாறாக, ஆர்வம் காட்டுங்கள்; அவைகளை ருசிக்கும் அனுபவங்களாக ஆக்கி மகிழுங்கள்.
6. கல்விக் கூடங்களுக்குள் - அவை கல்லூரியாக, பல்கலைக் கழகங்களாக இருப்பினும் அவைகளுக்குள் - நுழையும் போது, அதிக கிரேடுகள் வாங்குதில் மட்டும் குறியாய் இராமல், அறிவுத் தேடலுக்கு நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு இது என்று உங்கள் அறிவுப் பசியை, ஆர்வ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் துவங்குங்கள்.
உங்கள் மனம் அப்போதுதான் அடைக்கப்பட்ட அறைகளுக்குள்ளே முடங்கிவிடாமல், (கிரேடுகள்- அதிக மதிப்பெண்கள்) அறிவுக் கருவூலம் என்ற திறந்த விளையாட்டு மைதானத்தின் தூய மூச்சுக் காற்றை சுவாசித்து, தெளிந்ததோர் அனுபவத்தை நீங்கள் பெற்று வாழ்வில் உயர்வதற்கு வழி கிடைக்கும்!
7. பல்வேறு அனுபவங்களை மாற்றிக் கொள்ளும் திட்டங்களில் (exchange programmes) பங்கு கொள்ளுங்கள்: பல்வேறு செயற்பாடுகளிலும், படிப்பு, வெறும் தேர்வு - இவைகளுக்குமேலான பல்வேறு துறைகளானாலும் துணிந்து களம் இறங்கி, வெற்றிக் கனிகளைப் பறித்து, அப்பல்கலைக் கழகத்தின் அணிமணிகளாய் அழகுறக் காட்சி அளியுங்கள்.
8. உங்களுக்குப் புரியாதவைகளை உங்கள் சக மாணவ நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத் தெளிவு பெறத் தயங்காதீர்கள். விடுதி வாழ்க்கை மாணவ வாழ்வின் வசந்தம் என்பதால் அதை ஒரு கூட்டுப் பொறுப்புக்கான பயிற்சிப் பாசறை என்று கருதி எப்போதும் உற்சாகத் துடன், எதையும் செய்து கொண்டே இருக்கப் பழகுங்கள்.
9. நீங்கள் கடின உழைப்புக்கார ராகவும், புதுமை நோக்காளர்களாக வும், பொறுமை காட்டக் கூடியவர் களாகவும், வழவழா கொழ கொழாவாக இருக்காமல் அழுத்தந்திருத்தமானவர் களாகவும் இருங்கள். நீங்கள் கற்கும்போது, தோன்றும் புதிய அறை கூவல்களால் உங்கள் வரைப்படத்தின் கோடுகள் நேராக செல்லாமல், வளைந்தும், மாறியும், சென்றாலும், அவற்றை அனுபவங்களாக ஏற்று, அதனையும் சாதனைகளாக மாற்று வதில்தான் எனது திறமை அடங்கி இருக்கிறது என்று காட்டும் பருவம் எனது வாழ்க்கை என்று பிரகடனப் படுத்துங்கள்.
10. உங்கள் இலக்கு மிகவும் உயர்ந்தே எப்போதும் இருப்பதாக அமையவேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற குறளுக்கேற்ப, வானமும் என் வசப்படும், எனது சாதனைக்கு என்றும் எல்லைக்கோடு கிடையாது என்று கருதி, உங்கள் கால்களை இந்த பூமியில் உறுதியாய் ஊன்றி நடவுங்கள்; முயற்சிப்பதற்கு என்றும் முந்துங்கள் - தயங்காதீர்கள்!
உங்கள் அறிவுத் தேடல் தொடர் பயணமாகட்டும்; கற்பது வாழ்நாள் தொடர் பணியாகட்டும்! வெற்றி உங்கள் சொத்தாகட்டும்!

Tuesday, July 5, 2011

மதுரை வனொலியில் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -7. நூல் அறிமுகம்





மதுரை வனொலியில் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -7.   நூல் அறிமுகம் கடந்த 02.07.2011 அன்று காலை 7.05 முதல் 7.15 மணிவரை  ஒளிபரப்பப்பட்டது.வழங்கியவர் சுப.முருகானந்தம், மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்.


"எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அதன் மதிப்பு என்பது அதன் பயனை அளவாகக் கொண்டதேயொழிய, அதை ஆக்கியவனையோ,தெய்வீகத்தன்மையையோ, இலக்கண அளவையோ, அவ்விதத் தன்மைகளையோ அளவாகக் கொண்டது ஆகாது." என்ற தந்தை பெரியாரின் கருத்துக்களை அப்படியே பின்பற்றி நடைபோடும் திரு.கி.வீரமணி அவர்களால் 'விடுதலை' நாளிதழில் அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
75 தலைப்புக்களில் பல்வேறு துறைகளைப் பற்றி ஆசிரியரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.உடல் நலம்,மன நலம் என்று இரு கூறுகளாக அவற்றைப் பிரித்துவிடலாம்.உடல்நலம் பற்றிய செய்திகள் தனிமனித வாழ்வின் வெற்றிக்கும், மனநலம் தொடர்பான கருத்துக்கள் பெரும்பாலும் சமுதாய நலனுக்கு அடிப்படையான செய்திகளைக் கொண்டும் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு.
சங்க நூல்களிலிருந்தும்,பெரும்பாலும் திருக்குறளிலிருந்தும் மேற்கோள்கள் விளக்கவுரையுடன் கூறப்பட்டுள்ளது அருமை.பொருத்தமான இடங்களில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள புத்தகங்கள்,நாளிதழ்கள்,சிற்றிதழ்கள் கணக்கிலடங்காதன.
"புத்தாண்டில் புதையல்களை கண்டுபிடிப்போம்" எனும் தலைப்பினில், தொழில் அதிபர் திரு.சங்கர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்து இடம் பெறுகிறது."ஒரு இரும்புக் கட்டி விலை ரூ.250 தான். அதையே குதிரை லாடங்களாக மாற்றி நாம் விற்பனை செய்தால் அதன் மதிப்பு ரூ.1000 ஆகும்.அதையே (அந்தக் இரும்புக்கட்டியையே மாற்றி) ஊசிகளாகச் செய்தோமானால் அதன் மதிப்பு ரூ.10,000 ஆகும். அந்தப்படி இல்லாமல் அதே கட்டிகளை நீங்கள் கடிகாரத்தின் ஸ்பிரிங்குகளாக்கினால் கிடைக்கும் வருமானம் ரூ.ஒரு லட்சம்.எனவே உங்களின் மதிப்பு என்பது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் தோற்றத்தில் என்பதில் இல்லை.மாறாக, உங்களின் அந்தச் சிந்தனைகளிலும்,சாதனைகளிலும் தான் உள்ளது." வித்தியாசமான சிந்தனைகளே வெற்றிக்கு வழி என ஆசிரியர் காட்டும் விதம் மிக அருமையாக உள்ளது.
"நடைப்பயிற்சியின் பல்வேறு லாபங்கள்" எனும் தலைப்பினில் நடைப்பயிற்சி மற்ற எந்தப் பயிற்சியையும்விட முதிய வயதில் கூட மிகவும் பாதுகாப்பானது.ஆபத்துக்களான கீழே விழுதல்,எலும்பு முறிவு அல்லது சுளுக்கு போன்ற எலும்பு வளைதல் முதலியவை வராத அளவுக்கு உற்ற பாதுகாவலனாகத் திகழ்கிறது.
குறைந்த பட்சம் நாள்தோறும் 30 மணித்துளிகள்.வாரத்தில் ஏழு நாட்கள் நடக்க முடியாத அளவுக்கு பணிச்சுமையால் பாதிக்கக் கூடியவர்கள் 5 நாட்கள் சென்றால் கூட நல்லது என்று கூறும் ஆசிரியர், குறிப்பிட்ட நேரத்தில் விடியற்காலையில் எழுந்து நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், நம்முடைய உடல் ஒரு கடிகாரமாகி, அதுவே அலாரமாகவும் ஆகிவிடுகிறது.உடலைப் போல நல்ல கடிகாரத்தை நாம் பார்க்கவே முடியாது என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.
ஒன்று வாகனங்களில் பயணம்; இரண்டு தொலைக்காட்சி முன்பு பல மணி நேரம் அமர்ந்திருப்பது இவற்றின் காரணமாக உடலில் கொழுப்பு கூடுதலாகிறது.எடையும் கூடுகிறது.25 வயது இளைஞர்கள் கூட சத்தான உடலைவிட ஊளைச்சதையுள்ள ஊதிய உடலையே பெற்று இளம் வயதில் சர்க்கரை வியாதி,இரத்தக் கொதிப்பு இவைகளுடன் போராட வேண்டிய கெட்ட வாய்ப்பு நடைப்பயிற்சியால் நிச்சயம் மாறும் என்கிறார் ஆசிரியர்.
"வாழ்க்கை என்ற பரிசோதனைக்கூடத்தில்" எனும் தலைப்பினில் ஆசிரியர் கூறும் வாழ்வியல் மொழிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
"உடனே கிள்ளிப் போட வேண்டியவைகளை தள்ளிப் போடுவதால் உருப்படியான பயனேதும் விளையாது" என்றும்,
மலை குலைந் தாலும், மனங்கலங்காத மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளல் என்பது வேறு,தீராத மனக் குழப்பத்தில் அதை ஊற வைத்து அப்படியே பிடித்து வைத்த புளி போல் இருப்பதால் என்ன பயன்? எனக் கேட்கும் ஆசிரியர்,
குடும்பம் என்றாலும் பணியாற்றும் அமைப்பு ஆனாலும், நட்பு வட்டமானாலும், எதிரிகளைச் சமாளிக்க எடுக்கும் முயற்சியாகளானாலும் தவறுகள் வந்துவிடுமே என்று முடிவெடுக்க ஒருபோதும் தயங்காதீர்கள்.ஒருவேளை, தவறு ஏற்படுமாயின் தன்முனைப்பு (எகோ) காட்டாமல் தவறைத் திருத்தி முன்னேற்றப் பாதையில் நடந்து செல்லுங்கள் என்ற ஆசிரியரின் வரிகள் ஒட்டு மொத்த சமூகத்தின் உழைப்பு விரயமாகமல், நம்மை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒளிவிளக்காய் அமைந்திருக்கிறது.
"மனித வாழ்வின் முழுமை எது?" எனும் கட்டுரையில்," ஒருவன் தனக்கென வாழாப் பிறர்க்கென உரியவன் ஆகும் போது அவன் தொண்டறத்தின் உச்சிக்குச் செல்கிறான்.இமயத்தின் உச்சிக்குச் சென்றவர்கள் கூட, சாதனையாளர்கள் என்ற பெருமைக்குரியவர்கள்தாம் என்றாலும் அவர்கள் அங்கேயே தங்கிவிட முடியாமல் கீழே இறங்கிவர வேண்டியவர்களே ! ஆனால், தொண்டறத்தின் உச்சிக்குச் சென்றவர்கள் என்றும் கீழே இறங்கி வராமல், அங்கேயே வாழ்பவர்கள்,மறையாதவர்கள்,மறக்க முடியாதவர்கள்,காலத்தை வென்றவர்கள். மனித வாழ்வின் முழுமை இது தான்" எனக் கூறியிருக்கும் ஆசிரியரின் கருத்துக்கள், சாதனைகளானாலும் மற்றவர்களின் நலனுக்காக இருக்கவேண்டும், நமது தனிப்பட்ட பெருமைக்காக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்வதாக இருப்பது வரவேற்கத்தக்கது.
உழைப்பினாலும், அயர்ச்சியானலும் களைத்துப் போய் இருக்கும் நம் உள்ளங்கள் புத்தாக்கம் பெறவே புத்தகம்! என்றும்,
புதுமையானதாக நம் அகத்தை ஆக்குவதினால் தான் அது "புத்தகம்" என்றும் புத்தகத்தினைக் "காரணப்பெயராக" கூறும் நூலாசிரியரின் எழுத்துக்களில் அழகு தென்படுகிறது.
"இப்படியும் மனிதர்கள்" எனும் தலைப்பிலான கட்டுரையில், "பெண்கள் என்றால், அவ்ர்கள் ஆண்களுக்கு விளையாட அழகுப் பொம்மைகளா?அலங்கார விற்பனைப் பொருள்களா? சிவப்பாக இல்லாதது அவர்தம் குற்றமா ? அதையே சாக்காக்கிக் கொண்டு பணம் பறிக்கும் திட்டமா ? உலகப் பேரழகியாகச் சொல்லப்படும் கிளியோபாட்ரா என்ற பெண்மணி கூட நிறம் கறுப்புதான் என்பது இந்தக் கொடுமையாளர்களுக்குத் தெரியாது போலும் ! காசு கொடுத்தால் கறுப்பு சகிக்கப்படுமா ? அட ஜென்மங்களே ! " என்று ஒரு தந்தைக்கு உரிய கோபத்தோடும், சிவப்பாக இல்லாதது அவர் குற்றமா ? எனும் அறிவியல்பூர்வமான சிந்தனையோடும் நூலாசிரியர் தொடுக்கும் வினாக்கள் நம்மைச் சிந்திக்கவைக்கின்றன.
"உணவுப் பழக்கங்கள் மூலம் கொலாஸ்ட்ராலைக் குறைக்க " டாக்டர்.சு.நரேந்திரன் அவர்கள் நூலில் இருந்து ஆசிரியர் மேற்கோள் காட்டிடும் வரிகள் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியவை ஆகும்."தினமும் பூண்டு சாப்பிடுவது(பம்பாய் மருத்துவக் கல்லூரி ஆய்வின்படி) 50பேர் தினமும் 3 பூண்டுப் பற்கள் பச்சையாக 2 மாதங்கள் உண்ண,  கொலாஸ்ட்ராலின் அளவு 15 விழுக்காடு; குறைந்துள்ளது.பூண்டு பற்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைத் தினமும் அருந்த ஒரு மாதத்தில் 7 விழுக்காடு  கொலாஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலாஸ்ட்ரால் 23% அதிகரித்துள்ளது.நல்ல கொலாஸ்ட்ராலை அதிகரிக்க  தினமும் அரை பச்சை வெங்காயம் அல்லது அதன் சாறு சாப்பிட்டால் 30 % அதிகரிக்கும் என்பது ஆய்வின் முடிவாகும்.இன்னும் விவரங்களைப் பெற "இதயத்தைக் காப்போம்" எனும் திரு.சு.நரேந்திரனின் நூலை வாங்கிப் படியுங்கள்" என்று வேண்டுகோள் விடுக்கிறார் நூலாசிரியர்.இது ஒரு எடுத்துக்காட்டுதான். இந்த நூல் முழுவதும் நூலாசிரியர் பற்பல நூல்களுக்கான மதிப்புரை போலவே பல இடங்களில் எழுதி நம்மை புத்தகங்களைப் படிக்க மீண்டும் மீண்டும் தூண்டுவது மிகச் சிறப்பாகும்.
பக்கம் 89ல்,"தொண்டறத்தினை ஆற்றாதவனும்,கோபத்தால் ஆட்டிவைக்கப்படுவனும் செத்த பிணமாகிவிடுகிறார்கள்"என்று
நூலாசிரியர் செம்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்.
மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் நூலாசிரியருக்கு எழுதியனுப்பிய "இதயமுள்ள இரைப்பை" எனும் கடிதமே கட்டுரை வடிவில் நூலாசிரியர் மூலம் நமக்கு அறிமுகமாகிறது.
 வண்ணக்கதிரில் வெளிவந்த குறுந்தகவல்  செய்திகளாக,"வீட்டுக்கூரை ; உயர்ந்த லட்சியங்களை ஏற்றிடுக,மின்விசிறி : நீ சூடானாலும்,மற்றவர்களை குளுமையாக வைத்திரு,கடிகாரம் : ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது, காலாண்டர் : எப்போதும் புதிதாய் இரு,கதவு : புதிய சிந்தனைகளுக்கு வழிவிடு போன்றவைகளைக் குறிப்பிட்டு,இளைஞர்கள் அனுப்பி மகிழும் எஸ்.எம்.எஸ்கள் இப்படி இருந்தால் நல்லது தானே "என்று கேட்கிறார் நூலாசிரியர்.இளைய சமுதாயத்தினர் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தியாக இருக்கிறது.
"யானைகளைத் தேடாதீர்கள் ; நாய்களைத் தேடுங்கள்" எனும் கட்டுரையில், அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல நட்பு அமையக் கூடாது.உண்மையான நட்பு என்பது ஒருவர் நல்ல நிலையில் இருந்தாலும் சரி,இல்லாதிருக்கும் போதும் சரி , நிழல் போலத் தொடருவதே.அவர்களே உயிர் நண்பர்களாவார்கள் என்று கூறும் நூலாசியர்,"நட்பாராய்தல்" எனும் தலைப்பில் நாலாடியாரில் 22அத்தியாயத்திலி உள்ள பாடலைக் கூறி,யானை பல தரம் அறிந்திருந்தும், தனக்கு உணவு கொடுத்துக் காக்கிற பாகனையே கொல்லுகின்றது.ஆனால்,தன்னையுடையவன் பிரயோகித்த  ஆயுதமானது,தன் உடலில் பொருந்தியிருக்கும் போதும் நாய் தன் வாலை ஆட்டும் என்று கூறும் நூலாசிரியர்,"இது நட்புக்கு மட்டுமல்ல.குடும்ப்ங்களுக்கும், இயக்கங்களுக்கும் கூடப் பொருந்தும்" என்று கூறுவது அருமையிலும் அருமையாக உள்ளது.இது போன்று பல்வேறு வாழ்வியல் வழிமுறைகளை அவருக்கே உரித்தான ஆற்றொழுக்கு நடையில் ஆசிரியர் இந்நூல் முழுவதும் விவரித்துள்ளார்.வாங்கிப் படித்துப் பயன்பெறுங்கள். நூல் : வாழ்வியல் சிந்தனைகள் பாகம் -7,விலை ;ரூ.80. பக்கங்கள் 212.                                            


Tuesday, June 28, 2011

உழைப்பே வெற்றி

 ஆதித்யாவும் எழிலும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் - நண்பர்கள். ஆதித்யாவின் அப்பா தீரன் நல்ல உழைப்பாளி. உணவகம் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தி வந்தார். உழைப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர். எதனையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து - பகுத்தறிந்து செயலாற்றுபவர். தன் மகன் ஆதித்யாவையும் பகுத்தறிந்து சிந்தித்துச் செயலாற்றுபவனாக வளர்த்து வந்தார்..............உழைப்பே வெற்றி

Thursday, May 26, 2011

தனித்தன்மை

தனித்தன்மை 


              சிந்த்த்தனையாளர் அரிஸ்டாட்டிலிடம் , கிரேக்கத்தைச் சேர்ந்த்த பல இளவரசரான அலெக்ச்சாண்டரும் அவர்களில் ஒருவர் . கிரேக்க கலாச்சாரம் தான் உன்னதமானது என்ற கருத்துடையவர், அரிஸ்டாட்டில். பல கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்து , புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென எண்ணியவர், அலெக்சாண்டர்.
                 ஒரு நாள் தன்னுடைய மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது "நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி செய்வதற்கு கடைப்பிடிப்பீர்கள்?" என்று ஒவ்வரையும் பார்த்து  கேட்டார்.
                  "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரிஸ்டாட்டிலின் போதனைப்படி தான் ஆட்சி செய்வோம்" என எல்லோரும் கூறினர்.
                  "உங்கள் போதனையை மனதில் வைத்துக்கொள்வேன். அனால்,அந்த சந்தர்ப்பத்தில் என் மனதுக்கு எது  சரியென்று படுகிறதோ , அந்த மாதிரி தான் ஆட்சி செய்வேன்" என்றார் அலெக்சாண்டர்.
                  குருவிடம் அலெக்சாண்டருக்கு பக்தியும், விசுவாசமும்  இருந்ததாலும் , தனக்கென்று தனியான சிந்த்தனை இருப்பதைத் தெளிவுப்படுத்தும் வகையில் அவர் அமைந்த்திருந்தது. 
                   இந்த உலகத்தில் எவ்வளவோ விசயங்களை நாம் கற்றுக்கொள்கிறோம் . இருந்தாலும், நமக்கென்று உள்ள தனித்த சிந்தனையை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. ஒருவேளை அப்படி இழந்து விட்டால், உங்களின் மதிப்பு தெரியாமல் போய்விடும்.  
                                                                        நன்றி தினத்தந்தி 1-4-2011   

Monday, May 23, 2011


தந்தை பெரியாரைப் பற்றி என் தந்தை.....



அறிவு எங்களுக்கு 

அதிசயமாக போன பிறகு....
மானம் எங்களுக்கு
மறதியாக போனபிறகு....
வீரம் எங்களுக்கு
வெறுங்கதையான பிறகு...
அடிமைத்தனமே எங்களது
அன்றாட வாழ்வான பிறகு...
சுயநலம் எங்களுக்கு
சோறாக ஆனபிறகு....
"கடவுள்" எங்களின்
கருத்தையும் கையையும் கட்டிப்போட்ட பிறகு....
"விதி" எங்கள் முயர்ச்சிகளை
விலைக்கு வாங்கிவிட்ட பிறகு...
"சாத்திரங்கள்"-எங்கள்
சாகசங்களை அடக்கிவிட்ட பிறகு...
பார்பனனும் பண்டிகைகளும் எங்கள்
பணங்களை பறித்துவிட்ட பிறகு...
சொரணை எங்களுக்கு
சொந்தமில்லாது போய்விட்ட பிறகு...
உணர்வு எங்களைவிட்டு
ஊர்தேசம் போய்விட்ட பிறகு...
"மனிதன்" என்ற நிலைமாறி - நாங்கள்
மரக்கட்டைகளாக ஆன பிறகு...
புனிதனே !! நீ வந்தாய்...
புயலாகி பொய்மைகளைச் சாடினாய்...
ஓய்வே கொள்ளாமல்
ஊர்நகரம் சுற்றிவந்தாய்...
ஒலிச்சங்காய் ஓங்கிக்குரல் கொடுத்து
எம் தூக்கம் அகற்றிவிட்டாய்..!!
கருப்புச் சட்டையுடன் வந்தாலும்
எங்களை
வெளிச்சத்திரற்கு கொண்டு வந்துவிட்ட
பொறுப்புள்ள தந்தை நீதான்!
உன்
பூப்பாதம் நடந்த வழியினில்
புது உலகம் படைக்க நாங்களும்
"எங்களையே அழித்து -ஒளிரும்
கருப்பு மெழுகுவர்த்திகளாய்"
 நேற்றும் இன்றும் என்றும்
வாழ்வோமய்யா..!!!
                       - சுப. முருகானந்தம் 
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!