கடவுளை நம்பும் முட்டாள்களே
கடவுள்களை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?
பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?
இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?
கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், “யோக்கியனாகவோ, கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடியவில்லையே ஏன்?
கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே ஏன்? மனிதன் எதனால் “கெட்ட” காரியங்களைச் செய்கிறான்?
ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் தீங்குகள் செய்யப்படுகின்றன?
கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?
மனிதனிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?
ஒரு மனிதனுக்கு அவன் “கெட்ட காரியம்” செய்த பிறகு செய்து விட்டுச் செத்த பிறகு அவனுக்குத் தண்டனையைக் கொடுக்கும் கடவுள் அந்த மனிதனைக் “கெட்ட” காரியம் செய்யாமல் தடுக்க முடியாமல் போவது ஏன்?
”கெட்ட” காரியம் செய்தவனுக்குத் தண்டனை கொடுப்பதானாலும் கெட்ட காரியம் செய்யப்பட்டாதால் துன்பம், நட்டம், நோய், மரணம் அடைந்தவனுக்குக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார்?
மனிதனுக்கு நன்மை, தீமை, இலாபம், நஷ்டம், செல்வம், தரித்திரம், சுகம் துக்கம், அதிருப்தி, கவலை, துன்பம் முதலிய அவஸ்தைகள் எதற்காக ஏற்பட்டும் இருந்தும் வர வேண்டும்?
மனிதன் படும் அவஸ்தைகள் கடவுளுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தால் இவை கடவுளுக்குத் திருவிளையாடலா?
“நரகத்தை”ப் பாவ காரியத்திற்குப் பரிகாரமாக, தண்டணையாகச் சிருஷ்டித்த கடவுளை விட வேறு அயோக்கியன், கொடியவன், துஷ்டன் உலகில் யாராவது இருக்க முடியுமா?
இப்படிப்பட்டவனை அன்புருவு, கருணையுருவு என்று சொல்லுகிறவனை விட வேறு மடையன் உலகில் இருக்க முடியுமா?
ஏன் இதைப்பற்றி இவ்வளவு சொல்லுகிறேனென்றால் என் அனுபவத்தில் கடவுளால் உலக முன்னேற்றமும், மனித சமூதாய ஒழுக்கமும், மனிதத்தன்மையும், பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு விட்டதுடன், கெட்டும் வருகிறது என்று உணர்ந்ததாலும், இதை வெளிப்படுத்த வேறு ஆள் இல்லையென்று நான் காணுவதாலும் எனக்கு வயது எல்லைக்கு நெருங்குவதாலும் உணர்ந்ததை வெளிப்படுத்தி விடலாம் என்று கருதியதாலேயேயாகும்.
ஆகவே, மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு சமூதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி.
* 14/07/1970- “உண்மை” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்
No comments:
Post a Comment