Thursday, December 5, 2019

என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?

என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?
(எண்சீர் விருத்தம்)
                            கவிஞர்.சுப.முருகானந்தம்.மதுரை

தட்டிவிட்டுப் பறிக்கின்றார் கல்வி வேலை
தறிகெட்டுக் கிடக்கிறது சட்டம் நீதி
கட்டவிழா மொட்டுக்கள் கருகிச் சாகக்
காட்டாட்சி நடக்கிறது மதத்தின் பேரால்
எட்டப்ப ராகிவிட்டார் இம்மண் ஆள்வோர்
எதுநடந்தும் வாய்பேசா ஊமை யானார்
கொட்டட்டும் அய்யாவுன் முழக்கம் இங்கு
கொடுமைதனைப் பொசுக்குதற்கு இடியைப் போலே!

எட்டுத்திக்கும் பெரியாரை ஏற்றி வைப்போம்
இனமானம் காப்பதற்குச் சூளு ரைப்போம்
நட்டமெனத் தந்துவுயிர் நாடு காக்க
நடைகட்ட உம்பின்னால் தமிழர் சேனை
வட்டமிடும் கழுகார்க்கு வளைந்தோ மில்லை
வாய்ப்பந்தல் போடுபவர் இங்கே இல்லை
"விட்டோமா பார்"என்றே வினைமு டிக்கும்
வீரமணிப் பெருங்கூட்டம் யாரே வெல்வார்?

எட்டொன்று வயதினிலே மேடை ஏறி!
இன்றுவரை வழங்குகின்றாய் உழைப்பை வாரி!!
தொட்டாலே தீட்டென்ற சோகம் போக்கத்
தொடர்வாயே வரலாற்றின் துவக்கம் சொல்லி!
கட்டாக ஆதாரங் காட்டிக் காட்டிக்
கனிவாக 'அருள்கூர்ந்து' கேட்கச் செய்துப்
பொட்டினிலே அடித்தாற்போல் தருவாய் பேச்சும்!
போனதிசை தெரியாமல் மடமை போகும்!!

சிட்டாக நீயிருந்த போதில் சீறிச்
செருக்குற்றப் பகையழிக்கப் போரும் செய்தாய்!
பட்டாளம் இன்றுண்டு உன்றன் பின்னே
பார்த்தசைக்க விழியோரம் பாரும் சுற்றும்!!
கிட்டாது உரிமையிங்கு கானல் நீராய்
கேடர்களின் கொடுசெயலால் போன தய்யா!
"எட்டாதோ?" எனவேங்கும் எளியார்க் கெல்லாம்
என்தலைவ! நீயன்றி வழியே துண்டு?

Monday, November 25, 2019

#Asiriyar_k_veeramani #Quotes#

#ஆசிரியர் #கி_வீரமணி #Asiriyar_k_veeramani #Quotes
#ஆசிரியர்_மொழிக்_குறள்_வெண்பா

Thursday, September 26, 2019

தம்பி. செ.சுப்பிரமணியன் முதலாமாண்டு நினைவுநாள்

#ஆசிரியன்
பொன்னுடல் நெஞ்சில் பெரியார்
புகன்றவை போற்றி போற்றித்

தென்றலை மிஞ்சும் மென்மை
தேனிதழ் தன்னில் தேக்கித்

தன்னல மில்லா வாழ்வில்
தன்னையே கரைத்த தம்பி

சென்றது மெங்கே யென்று
தேடுவோம் தினமும் காலை

தந்தைதாய் மறுத்த போதும்
தயவுடன் கெஞ்சிக் கெஞ்சிக்

கந்தையா யிருந்தோர் வாழ்வில்
கல்வியைப் புகட்டு தற்கு

முந்தியை விரித்துத் தானம்
முடிந்தவ ரிடத்தில் பெற்று

சிந்திய வேர்வை யிந்தச்
சீர்மிகு நிலத்தைக் காக்கும்

வந்தரு ளென்றே யுன்னை
வாயினா லழைக்க மாட்டேன்

தந்தது போதும் தம்பி
தாயக வுரிமைப் போரில்

முந்திநீ  நின்றாய் நாளும்
முடிந்தவை யாவுஞ் செய்தாய்

சிந்தையில் நினைத்த தெல்லாம்
செயலினில் செய்வோ மய்யா!!
விடுதலை வேண்டி விலையென் றுயிரைக்
கொடுவெனக் கொற்றவன் கூறக் கொடுத்தாய்
வடுவென நெஞ்சில் வரைந்தவுன் கோலம்
விடுபடு மோவெமை விட்டு.

செப்'26 திலீபன் நினைவு நாள்.

Friday, September 20, 2019

அவர்தாம்_பெரியார்



#பெரியார்141.

#அவர்தாம்_பெரியார்

கேள்வி கேட்பவன் நாவில் இருப்பார்
கேட்டுத் தெளிபவன் நெஞ்சில் இருப்பார்
வேள்வி யாலனைத்தும்  விளையு மென்பானின்
விலாவினை முறித்து வேலெனக் கிளர்வார்.
                                                (கேள்வி)
நாள்பலன் பார்த்து நடுங்கிச் சாவோர்
நல்வழி யுணர்த்தும் நண்பனாய் நிற்பார்
தோள்வலி மறந்து தொண்டறங் காக்கும்
தூயவர் வாழ்வில் சுடரென ஒளிர்வார்
                                                 (கேள்வி)
மான அறிவின் அழகில் சிரிப்பார்
மனிதர் ஒழுக்க நெறியில் இருப்பார்
காலந் தோறும் பேதங் களையும்
களத்தில் தானே கருத்தாய் நிற்பார்
உலகை ஒன்றாய் ஆக்கத் துடித்து
உரிமை கோரி ஓங்கி ஒலிக்கும்
கலகக் குரலின் கனலாய் இருப்பார்
கறுக்கல் விலக்கும் சிவப்பாய் மிளிர்வார்
                                                       (கேள்வி)

Sunday, September 15, 2019

#பேரறிஞர்_அண்ணா_பிறந்தநாள்

வழுவிலா குறள்நெறி வாழ்வினைக் கற்றவன்
முழுவதும் இத்தரை முத்திரை பதித்தவன்
கொலுவினில் இருப்பினும் குடிசையில் வாழ்பவர்
விழிகளின் சிரிப்பினை விளைக்கவே விழைந்தவன்
ஆரிய மாயைகள் அனைத்தையும் விளக்கியே
போரினைத் தொடுத்தவன் பொசுக்கிட அழைத்தவன்
இந்தியைத் திணித்துமே எம்மொழி அழித்திட
வந்தவம் மந்திகள் வாலினை அறுத்தவன்
மன்னவன் சொன்னசொல் போற்றியே
இன்தமிழ் நாட்டினை ஏற்றுவோம் பாரிலே!!

Thursday, September 5, 2019

ஆசிரியர்தினத்தில்..

#ஆசிரியர்தினத்தில்.....

எல்லோரும் கல்விபெற்று ஏற்றமுற வேண்டுமென
கல்லாரின் கல்லடிக்கும் கற்றவரின் சொல்லடிக்கும்
நில்லாது நாட்டின் நிலைமாற்றிச் சென்றவர்தம்
நல்நினைவைப் போற்றுவோ மின்று.

Friday, August 30, 2019

பைந்தமிழ் மொட்டுகளுக்குத் தாலாட்டு

ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...

(1)ஆரா வமுதே! அருந்தமிழர் காப்பியமே!!
தேரா தெதையுந் தெளியாத் தென்னகமே!!
பொன்வான் கதிரே! புவியில் பிறந்தோரெல்லாம்
உன்றன் உறவென்றே ஓதவந்த பேரருளே!!(2)
நூறாயி ரமாண்டு நுடக்கிவைத்த மதஞ்சாதி,
கூராய்ந்துக் குப்பையெனக்
கொளுத்தவந்த பகுத்தறிவே!!(3)
வேராங் கிளைகளையே விருந்தோம்பித் தாங்குதற்கே
சீராய்ப் பிறந்துவந்த செல்லமே கண்ணுறங்கு!!.... செல்லமே கண்ணுறங்கு!!
செங்காந்தள் பூச்சரமே!! செந்தமிழே !!!
நீயுறங்கு!!....செந்தமிழே !!!
நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...
(5)
கானக் குயில்மொழியே! கட்டிவைத்த மல்லிகையே!!
மானம் அழகென்னும் மாத்தமிழர் பண்பாடே(6)
கூனில் முழுநிலவே! குதித்தாடும் மயிலழகே!!
வேனில் முடித்துவைக்க வீடுவந்த தென்காற்றே!!(7)
ஆனிப்பொன் தொட்டிலே! அழகேநீ கண்ணுறங்கு!!
அன்னச் சிறகாலே! அடுக்கிவைத்த மெத்தையிலே!!
சின்னக் கண்மூடி சிணுங்காமல் நீயுறங்கு!!
ஆராரோ.... ஆரிரரோ... ஆராரோ.... ஆரிரரோ...
ஆராரோ.... ஆரிரரோ...

(8)
அய்யன் சொன்னகுறள் அழகாக எடுத்தியம்பிப்
பொய்யர்  புரட்டுகளைப் புறங்காணச் செய்வாயோ(9)
உய்யும் வழிதேடி உலழு முலகோர்க்கு
பொய்யா மொழிசொல்லி பொருளு முரைப்பாயே(10)
உண்ணல் சமனாக்கி உழைப்பும் பொதுவாக்கி
உலகம் ஒன்றாக்க உறுதி கொள்வாயோ(11)
நம்மில் பிளவாக்கும் நரியார் செய்கையெண்ணி
விம்மி யரற்றாமல் வேங்கையே! நீயுறங்கு!!
வேங்கையே! நீயுறங்கு!!
வேளை வரும்   கண்ணுறங்கு!
வேளைவரும்...... கண்ணுறங்கு !!

கலைவாணர்


கலைவாணர்

நினைவு நாள்


கிந்தனா ரென்றுபேர் சாற்றி - நீ
கேடாம்ப ழங்கதை மாற்றி - ஒரு
கிளிபோலவும் மொழிபேசிய
திரையோவியம் மறைந்தேகிடக்
கிளர்ந்தாய்! - புகழ் - அளந்தாய்!!

வந்தப டத்தினி லெல்லாம் - நீ
வந்துக தைத்தன வெல்லாம்
மனையாளவள் அறிவாகிய
துணையேகவு விதைதூவிய
வழியே! - அறிவின் - ஒளியே!!


வாடிய உள்ளங்கள் பார்த்து - நீ
வாரிவ ழங்கினாய் ஆர்த்து - உன்
மனமாகிய கடலேயொரு
அலையாகிய பொருளேதரு
மன்றோ - அருள் - குன்றோ!!


 தேடிய செல்வங்கள் தீர்த்து - நீ
சென்றாயோ மாண்பினைச் சேர்த்து - அத்
திரைவானதில் நிலவாகியும்
மறையாதொரு புகழாகியும்
சென்றாய் - எம்மை - வென்றாய்

Wednesday, August 7, 2019

வீட்டிற்கு வரப்போகும் புதுவரவிற்கு வரவேற்பு


எடுப்பு:
பொன்னே புதுவானே
பொன்னின் மணியென
பூப்பாய் இந்நாளே..

உந்தன் முகங் காணத்தான் தவிக்கின்றோம்..

உன்மழலை கேட்கத்தான் துடிக்கின்றோம்

தேரில் வாராய் துன்பந் தீரவாராய்

தொடுப்பு 1:
அன்னைத் தமிழின் அழகென வருக...
தந்தை குணத்தில் தளிரென வருக...

எங்கள் இனங் காப்பாய் தேனின்
இனிய தழிழாளே...

ஊரே கூடி உனைப் பார்க்கவே...
உறவும் பாடி உனை வாழ்த்தவே..
(பொன்னே..புதுவானே)

தொடுப்பு 2;
நாளை யெண்ணி நாங்களு மிருப்போம்

நங்கை முகங் கண்டு நகைப்பினில் குதிப்போம்...

நாட்டையு மறவாதே அம்மாநீ
நன்றியு மறவாதே

வாநீ யிங்கு வளருங் கதிர்
வந்தால் தானே புலரும் புவி...
(பொன்னே..புதுவானே)

சுப முருகானந்தம்.
உறுப்பினர் எண் வழங்கப்படவில்லை அம்மா

Wednesday, July 24, 2019

மணநாள் வாழ்த்துகள்....

மணநாள் வாழ்த்துகள்....

 கொள்கைச் சான்றோர்கள் பி.வரதராசன் அமுது.ரசினி இணையருக்கு...

கற்பன கற்றுமே காசுபணஞ் சேர்க்கவே
காளைய ரெண்ணிக் களம்புகு வேளையில்
நற்றவம் போலுமே நானில நன்மைக்கு
நாளு முழைக்கவே நாடினோர்; வாழ்வினில்
பெற்ற பயனெல்லாம் பெரியாரின் தொண்டரென
பேருவகை கொண்ட பெருமையே யல்லாமல்
மற்றவை தேடாத அண்ணன் அண்ணி
மணவாழ்வும் கொள்கை வளர்வாழ்வு தானே!!
 (வெண்டளையான் இயன்ற எண்சீர்  விருத்தம்)

பகுத்தறிவை நாடு...!!

கீழென்று மேலென்று கீறிப் பிளக்காமல்
பாழென்ற சாதிமதப் பாட்டினில் வீழாமல்
ஒன்றே அனைவரும் ஓர்நிலை என்றுணர
நன்றாம் பகுத்தறிவை நாடு.
(இன்னிசை வெண்பா)

Thursday, March 14, 2019

பெண்ணும் ஆணும் சமமே

#பெண்ணே_நீயுனைப்_போற்று

1.பெண்ணுடன் ஆணும் பிறப்பால் சமமெனும்
உண்மை தெளிதல் உயர்வு.

2.எதுவும் இருவருக்கும் எப்போதும் ஒன்றே
பொதுவாக்கு நீதொடுத்து போர்.

3.நிற்பாளே தானாய் நிமிர்ந்து உலகமவள்
சொற்படி கேட்கும் சுழன்று

4.அறமும் மறமும் அறிந்தவள் பெண்ணே
மறந்தவன் வாழ்வினில் மண்.

5.மண்ணையும் பொன்னாக்கும் வன்திறம் கொண்டநல்
பெண்மையே ஞாலத்தின் பீடு.

Monday, March 4, 2019

வீரவணக்கம் மகளே!

வீர வணக்கம் மகளே!
நீ பிறந்த நாளில்....



நித்தம் நித்தம் நெஞ்சில் வருவாய்
சித்தம் கலங்கச் சிந்துவோம் கண்ணீர்
மெத்தப் படித்து மேல்நிலை யுற்றுநீ
நத்தும் இனத்தின் நலந்தனைக் காப்பாய்
என்றே இருந்தோம் எம்மறச் செல்வியே
கொன்றுனைத் தீர்த்தனர் கொடுமதி ஆள்வோர்
நின்று நிலவும் நின்புகழ் நிலத்தில்
வன்மம் தீர்ப்போம் வருநாளில்
உன்மனம் நினைத்ததை உறுதியாய் செய்தே!
- சுப முருகானந்தம்.
(நேரிசை ஆசிரியப்பா)

Sunday, March 3, 2019

துடிக்குதே தமிழர் தோளே

தேரினில் சென்றார் தன்னைத்
தெருநாயும் குலைத்த தைப்போல்
வேரெனத் தமிழர் கண்ட
வேந்தனைக் கொல்வோ மென்று
சீறினான் பார்ப்பான் இன்று
சிகைதனை மூடிக் கொண்டு
ஏறிவா இரண்டில் ஒன்று
இருக்குமா பார்ப்பான் பூண்டே!

நாட்டினின் தந்தை தன்னை
நாங்களே கொன்றோம் என்று
ஏட்டினில் எழுதிச் சொன்னான்
எங்குதான் போனான் ஆள்வோன்
கூட்டினில் அவனைத் தள்ளக்
கொடுக்கவே குரலை ஓங்கி
நாட்டினில் பற்று கொண்டோர்
நானெனச் சொன்னோர் எங்கே?

இருக்குதா அரசும் நாடும்
இருக்குதா காவல் நீதி
பொறுக்குமா தமிழர் நெஞ்சம்
போர்க்கள மாக்க நாட்டை
தறுக்கியே திரிவார் தம்மை
தடுத்திடு அரசே நீயும்
சுருட்டுக பார்ப்பான் வாலை
துடிக்குதே தமிழர் தோளே!!

கற்றபடி நிற்பீர்

கவியரங்கம் 160
தலைப்பு: கல்விக்கழகு

தமிழ் வாழ்த்து:

எண்ணம் முழுதும்நீ என்றும் நிறைந்துநல்
வண்ணம் மனம்புகுந்து வாழும் தமிழே
வணங்கியே நின்றேன்  வருக
இணங்கியே எல்லாம்  இயைந்து தருகவே!

தலைமைக்கும் அவைக்கும் வணக்கம்:

அவையின் தலைமையீர் அன்பு வணக்கம்
சுவைக்குமத் தேனைத் துகிக்கு மிதரெனச்
செந்தமிழ்ச் சோறுண்ணத் தந்தீர் நிலாமுற்றம்
தந்தேன் வணக்கம் மகிழ்ந்து.

துணைத்தலைப்பு: கற்றபடி நிற்க.

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

(விளம், மா,தேமா வாய்ப்பாடு)

சுற்றிய சுற்றும் மாடும்
சொல்லிய சொல்லுங் கிள்ளை
கற்றதை அன்றே விட்டு கலங்கியே தவிக்கும் பிள்ளை
நற்றமிழ் நெறிகள் சொல்லும் நலனதைக் கொண்டே யாரும் இன்றைநாள் வாழ்வ துண்டோ
எண்ணியே பார்ப்போம் இன்றே!

கற்றதைச் செயலில் காட்டி
கனிவினைச் சொல்லில் தேக்கி
மற்றவர் நலத்தைப் பேணும் மாண்பினை நெஞ்சில் கொண்டு
பெற்றதைப் பிறர்க்கு நல்கி பெருமையும் சேர்த்து நன்றே சுற்றமும் சூழ வாழும்
 தூயவர் எவரும் உண்டோ?

படித்ததை மதிப்பெண் வாங்கும்
பாதையாய் மனதில் எண்ணி துடித்துமே வேலை தேடி
தொண்டையின் மேலே நின்று இடிப்பதைத் தேர்வில் சொல்லி இடத்தினைப் பெறுவார் கோடி நடிக்கவும் செய்வார் நல்ல ஞானமும் பெற்றார் போலே!

சொல்லிய கருத்தைப் பார்நீ
சொன்னவர் யாரென் றாலும்
துல்லிய கோலில் இட்டே
தூயதை ஏற்றுக் கொள்க!
சொல்லினில் எட்டிக் காயைத்
தூரநீ எறிவாய் கண்ணே!
வெல்லமாய் கனிந்த வார்த்தை
விதையினால் வளர்ப்பாய் நட்பே!!

அறத்தினை மனதில் ஏற்றி
அருளினால் ஞாலம் போற்றி
பிறந்தவர் யார்க்கும் யாரும்
பேதமில் லென்னும் கொள்கைத்
திறத்தினால் உழைத்து நல்ல
சிறப்பினைப் பெற்று வாழ்வாய்
செந்தமிழ் கற்று நின்றே!

முடிவுரை:

வள்ளுவன் சொன்ன பாடம்
வந்துநான் சொல்ல வந்தேன்
வாழ்வினில் ஏற்று வாழ்ந்தால்
வரும்படி யாக நல்ல
தாழ்விலா வாழ்வும் கிட்டும்
தமிழினை உலகம் மெச்சும்
ஊழென ஒன்றும் இல்லை
உறுதிநீ கொண்டே வெல்க!!

நன்றி நவிலல்:

கற்றபடி நிற்க
கவிவடிக்க எனக்கு
நல்வாய்ப்பு தந்தீர்
நன்றி பல கோடி..
வணக்கம்.
சுப.முருகானந்தம் 2465 நிலா முற்றம் எனும் முகநூல் குழுமத்தில் வார இறுதியில் நடக்கும் கவியரங்கத்திற்கு எழுதியது.

Tuesday, February 26, 2019

தாயே எனை வாழ்த்துவாயே!

(வஞ்சித் தாழிசை)
இன்மொழி நன்மனம்
என்றும் ஈந்து
என்நலம் காத்தாய்
இன்முகத் தாயே!

நல்லவை காட்டி
அல்லவை நீக்கும்
வல்லமை தந்து
வாழ்த்துவாய் தாயே!

உண்மையைப் பேச
நன்மையைச் செய்ய
உன்வழி யேற்பேன்
என்றுமே தாயே!!
- முருகானந்தம் சுப.

Saturday, February 16, 2019

தன்னலம் மறுப்பாய் மனமே!

(வஞ்சிப்பா)

தன்னலந்தனை யெண்ணியேதினம்
 இந்நிலந்தனில் யிருப்பாரவர்
 எந்நலமதைப் பெறுவாரென
இன்னமுமறி கிலேனென்பதால்

நானும்

பெற்றதுங் கற்றதும் பேச்சினால் சொல்லியும்
உற்றதிற் சிற்சில ஊரினில்
அற்றவர்க் கீந்தே அகமகிழ்ந் தேனே!

- முருகானந்தம் சுப

Thursday, February 7, 2019

#ஆளவந்தார்
ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000

வீடெல்லாங் கொட்டும்  பணமிங்கே வென்று
வீரமாகச் சொன்னா ரேசெய் தாரா?
காடொல்லாங் காய கசிந்துழவன் வாடி
கடைத்தெருவி லன்று நின்றா னய்யோ!
ஓடோடி  யாரு முருகவில்லை யென்றே
ஒடிந்துமனந் திரும்பி னானே யன்று!
நாடெல்லாஞ் சுற்றி யவர்வந்தே யின்று
நடிக்கின்றார் மேடை யேறி நன்றே!!.

பொசுங்கியது மனுதர்மம்

பொசுங்கியது மனுதர்மம்


 (கட்டளைக் கலிப்பா)

ஒன்றே மானிடர் யாவரு மென்றுரை
ஓங்கு சீர்மர புத்தமி ழர்மனம்
குன்றிச் சீர்கெட வோர்குலத் துக்கொரு
கோணல் நீதிசொல் லும்மனு வின்குரல்
மண்ணில் பேரிடி போலுமே வந்ததை
மண்ணின் பிண்டமாய்ப் பார்த்திருத் தல்தகா
தென்றே போர்க்குரல் எங்குமே சூழ்ந்ததால்
இன்று தீயிடை யம்மனு  வெந்ததே!!

Saturday, February 2, 2019

வெள்ளையரும் கொள்ளையரும் (வெண்கலிப்பா)

அனைவருக்கும் அனைத்துமே அட்டியின்றி கிடைக்குமென
நினைத்தேதான் விரட்டினோமே நீலவிழி வெள்ளையரை
புனைபொய்யுரைக் கொள்ளையரைப் புதுத்தலைமை யேற்கவிட்ட
கணையாலே வீழ்ந்தோமே காண்.

Monday, January 28, 2019

தழைக்கவே பொதுவுடமை

தழைக்கவே பொதுவுடமை:


உழைப்பைப் பகிர்ந்தே உழைத்துக் கிடைத்த
விளைபொருளை யாவர்க்கும் வீதப்  படியீந்தும்
ஏழை பணக்கார  ரென்றநிலை மாற்றித்
தழைக்கப் பொதுவுடமை தான்.
- சுப முருகானந்தம்.

(இன்னிசை வெண்பா)









Saturday, January 26, 2019

அறிவும் மானமும் அருள்வாய் தமிழே



இறந்தவொரு மொழியிலன்றோ இணையேற்பு நடத்துகின்றார்
சிறந்ததொரு படிப்பென்றால் திகழ்வதுமாங் கிலந்தானாம்
பிறந்தவொரு மழலைக்குப் பெயர்வைக்கும் பொழுதினிலும்
மறந்துமுனை நினைக்காத மடமையிலே யுழலுகிறார்

ஆதலினால்

அறிவால் பூக்கும் அகத்தின் மானம்
செறிவாய் தேக்குந் திறனைச்
சொரிவா யின்றே தொல்தமிழ்த் தாயே!
(தரவு கொச்சகக் கலிப்பா)

Friday, January 25, 2019

திராவிடர் என்றே சொல்


நந்தமிழர் வரலாற்றின் நடுவினிலே புகுந்தேதான்
முந்துபழ மடச்சாதி முறைமைகள் வகுத்தவனே
அந்தமுதற் கடவுளவன் அடிதொழவே அவதரித்து
மந்திரங்கள் பயின்றுள்ளோம் மறக்காதே எமைத்தொழுக
எனவுரைத்தார்
ஆரியர் நீக்கிய அருமைத் தமிழரை
கூறி யழைக்க வொருசொல்
வீரிய திராவிட மன்றேல் வேறெதோ?
(தரவு கொச்சகக் கலிப்பா)







Friday, January 11, 2019

மோடியின் 10%

கொடுத்தால் ஒதுக்கீடு குற்றமெனச் சொல்லித்
தடுக்க ரதப்போர் நடத்தினாரே அன்று
தடுக்கவே போர்நடத்திச் சென்ற வரின்று
மிடுக்காய் ஒதுக்கீடு வேண்டுவ தேனோ?
அடுக்காய் பலதோல்வி ஆனதி னாலே!

Saturday, January 5, 2019

வந்ததிந்தப் புத்தாண்டு!

வாளென்று வந்துநம் வாழ்வைச் சுருக்கியே
நாளென்று மாறி நகர்ந்திடும் ஆண்டதில்
சூளென்று நெஞ்சத்தில் தூயன தாங்கிநீ
வேலென வுன்னிலக்கை வேகமாய் யேகுவாய்
கீழென்று பார்த்துக் கிளையை விலக்காமல்
பாழென்ற சொல்லால் பகைமை வளர்க்காமல்
ஆலென்றே வும்மினத்தை யண்டி நலந்தந்து
வாழென்று வாழ்த்திட வந்ததிந்தப் புத்தாண்டே!

Thursday, January 3, 2019

சிவந்தது கிழக்கு...

வாயில் குதப்பிய வெற்றிலைக் காவியைத்
தோயும் இருட் சாலையில் துப்பியே
தேயும் அவளைத் திருப்பி யனுப்பியே
சேயோன் எழுந்தான்  கிழக்கும் சிவந்ததே!
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!