Friday, May 29, 2020

கொல்லும் பசி கொல்வேனடி

ஓலைக் குடிசையோரம்
உலவுந் தென்றல்போலே
மாலையில் வருவாளடி - கிளியே
மாற்றி வழிசெல்வாளடி!

காலைக்குள் இராப்பொழுதைக்
கட்டிவைத்த ஞாயிறுபோல்
சேலைக்குள் தான்மறைந்தே - கிளியே
தேகத்தை எரிப்பாளடி

நாளுமொரு வேடமிட்டு
நகர்ந்து வரும்நிலவாய்
வேளைக்கோர் உடைஉடுத்திக் - கிளியே
வேகவைத்துத் போவளடி

வாளுக்குக் கூர்முனைபோல்
வடித்த விழியழகு
வாவென்று சொல்வாளடி - கிளியே
வருமுன் மறைவாளடி

பாழாகிப் போகும்முன்னே
பக்கம்வந்து சேர்த்தணைத்துப்
பாலாகி இனித்தாளடி - கிளியே
பாதிவுயிர் காப்பேனடி!

ஏழாகி இசைப்பாட்டை
இணைத்தாளும் செந்தமிழாள்
கூழாகி வந்தாளடி - கிளியே
கொல்லும்பசி கொல்வேனடி!


No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!