Thursday, December 30, 2010

வாழ்த்துக்கள்...!!


பத்தோடு பதினொன்றாய்

அத்தோடு போகாமல்

சத்தாக

முத்தாக

மானுட நலத்தின் வித்தாக

வா.. வா... புத்தாண்டே.....!

வரவேற்கிறேன்

வாழ்த்துக்கள்...!!

Tuesday, December 7, 2010

வாழ்வியல் சிந்தனைகள் - மானமிகு.கி.வீரமணி அவர்கள்

யானைகளைத் தேடாதீர்; நாய்களைத் தேடுங்கள்!
உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது! பல மனிதர்கள் பல நேரங்களில் மனிதர்கள்மீது விழுந்து, விழுந்து கவனிப்பார்கள்; நீங்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்கிறோம் என்ற ஆஷாடபூதித்தனத்தின் அப்பட்டமான வேடத்தை அருமையாகச் செய்வார்கள்!
பல பதவியாளர் - நண்பர்கள் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வைப்பதற்குத் தெரியாமல், அவர்களின் முகஸ்துதிக்குப் பலியாவது வழமையாகிவிட்டது.
நகுதல் பொருட்டல்ல நட்பு என்பதை பலரும் உணர்ந்து, ஒளிவு மறைவின்றி கசப்பான விஷயங்களைக் கூறும் நண்பர்கள்தான் நமது உண்மையான பாதுகாவலர்கள் என்று எண்ணினால், அது அவர்களுக்கேகூட நல்ல பாதுகாப்பு அரணாக விளங்கும்!
அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகளைப் போன்ற நண்பர்கள் - நெருக்கடியும், சோதனையும் வரும்போது காணாமற்போய் விடுவார்கள்! இது உலகியல் வாழ்க்கை.
உண்மையான நட்பு என்பது ஒருவர் நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி, இல்லாதிருக்கும்போதும் சரி நிழல்போலத் தொடருவதே. அவர்களே உயிர் நண்பர்களாவார்கள்.
பெரியவர்கள், லட்சாதிபதிகள், கோடீசுவரர்கள், பதவிப் பவிசில் ஜொலிப்போர் - இவர்கள் என் நண்பர்கள் என்று பெருமை கொள்வதைவிட, எளிய நண்பர்கள் எக்காலத்தும் நண்பர்கள் - எதையும் எதிர்பாராது பாசத்தையும், அன்பையும் ஊற்றுக் கிளம்புவதுபோல் காட்டத் தவறாத நல்லவர்கள் என்பவர்களையே தேர்வு செய்து பழகிடப் பயிலவேண்டும்.
கல்வி பயிலுவதைவிட, நட்பைத் தேர்வு செய்ய அதிகமாகவே பயிலவேண்டும்; வாழ்க்கைக் கல்வி அது. சுற்றங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது; நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது!
நாலடியாரில் 22 ஆம் அத்தியாயத்தில், நட்பாராய்தல் என்ற ஒரு தலைப்பில் ஓர் அருமையான பாட்டு -
யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; யானை
அறிந்தறிந்துப் பாகனையே கொல்லும், எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்
- நாலடியார் (213)
இதன் கருத்து: யானை போன்றவர்களுடைய நட்பை - நேசத்தை விட்டு, நாய் போன்றவர்களுடைய சிநேகத்தைச் சேர்த்துக் கொள்வது அவசியம்; ஏனெனில், யானை பலதரம் அறிந்திருந்தும், தனக்கு உணவு கொடுத்துக் காக்கிற பாகனையே கொல்லுகின்றது; தன்னை யுடையவன் பிரயோகித்த ஆயுதமானது தன் உடலில் பொத்தியிருக்கவும் நாய் வாலை யாட்டும்.
என்னே அருமையான உவமை நயம்!
தனக்கு நாள்தோறும் உணவு தந்து, குளிப்பாட்டி, நோய் தீர்த்து, முகப்படாம் அணிவித்துப் பெருமை சேர்க்கும் பாகனைக்கூட அது விட்டுவிடுவதில்லை என்பது உண்மை.
அதுபோலவே, நாய் இரண்டுவேளை உணவு ரொட்டி போட்டுவிட்டால், வாலைக் குழைத்து வந்து நிற்கும்; அடித்து விரட்டினாலும் விசுவாசத்தை மறக்கவே செய்யாது!
இது நட்புக்கும் பொருந்தும்; குடும்பங்களுக்கும் பொருந்தும். மிக ஆடம்பரத் திருமணம், பெரிய இடத்து சம்பந்தம் யானைபோல ஆகிவிடுகிறதே பலருக்கு!
அதுவே, கூட்டுக் குடும்பத்திற்கு மட்டுமல்ல, கூட்டணி அரசியலுக்கும் கூடப் பொருந்தும்தானே!
எனவே, யானைகளைத் தேடவேண்டாம்;
நாய்களைத் தேடுங்கள் - நட்பு பாராட்ட! நன்றி காட்ட!!

Tuesday, November 30, 2010

உலகை உருவாக்கியது கடவுள் அல்ல

உலகை உருவாக்கியது கடவுள் அல்ல
அறிவியல் அறிஞரின் அதிரடி

கடவுள் கருத்து உருவாக்கப்பட்ட காலம் தொட்டே,கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என தர்க்க ரீதியாக மறுப்புரைத்தோர் இருந்து வந்துள்ளனர். கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தியோரைக் கண்டிக்கும் மனிதநேயர்களும் அப்போதே இருந்தனர்.மனிதர்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடிய சுயநலக்கும்பலை அம்பலப் படுத்தினர்.
அந்த மனிதர்கள் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்தி இயற்கைக்கு எதிராக உருவாக்கப்பட்ட கடவுள் கோட்பாட்டை தகர்த்தெரிந்தனர்.இன்றுவரை பகுத்தறிவாளர்களின் தர்க்கத்திற்கு மதவாதிகளால் நேருக்கு நேர் பதில் அளிக்க முடியவில்லை.சப்பைக் கட்டுகளாலும்,அது ஒரு நம்பிக்கை என்று கூறியும் தப்பித்து ஓடுகிறார்கள்.
அறிவு யுகத்தின் கேள்விகள் தொடர,பின் அறிவியல் உலகம் மலர்ந்தபோது சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி பரிணாமக்கோட்பாட்டைக் கூறினார்.
உலகின் தோற்றம், வானவியல், இயற்பியல், உயிரினங்களின் வளர்ச்சி என பல்வேறு பொருள் குறித்த அறிவியல் கருத்துகளும் வெளிவரத்
துவங்கின. இப்படி ஒவ்வொன்றாய் வரவர அதுவரை கட்டமைக்கப்பட்ட கடவுள் கருத்து தகரத் தொடங்கியது. கணினிக் காலமான இந்தக்காலத்தில் இன்னும் அதிகமான ஆராய்ச்சி வசதிகள் வந்துவிட, விஞ்ஞானி கள் பலரும் கடவுள் என்ற கருத்தியல் மீதான அறிவியல் ஆய்வு முடிவுகளை அவ்வப்போது வெளியிட்டுவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இப்போது ஒரு அறிவியல் ஆய்வுக்கருத்தை முன்வைத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.
புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், சர் அய்சக் நியூட்டன் இருந்த ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர்.


காலத்தைப்பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு எனும் இவருடைய நூல் 1988 இல் எழுதப் பெற்றது. அந்நூல் இவருடைய புகழை உயர்த்தியது. பன்னாட்டு அளவில் மிக அதிகம் விற்ற நூல்களில் அதுவும் ஒன்று. தமிழ் உள்படப் பல மொழிகளில் அந்நூல் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. கடவுள் கருத்து அல்லது தெய்வீகம் என்பது பிரபஞ்சத்தைப்பற்றிய அறிவியல் புரிதலுக்கு முரண்பட்டது அல்ல என அப்போது அவர் அந்நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியிருந்தார்.
ஆனால், 2010 செப்டம்பர் 2 இல் சில பகுதிகள் வெளியிடப்பட்ட இவரது நூலான தி கிராண்ட் டிசைன் (The Grand Design) எனும் நூலில், இயல்பியலில் ஏற் பட்டுள்ள தொடர்ந்த வளர்ச்சிகளின் காரண மாக, பிரபஞ்சப் படைப்புப்பற்றிய கோட்பாடு களில் இனி மேல் கடவுளுக்கு எந்த இடமும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமாகக் கொள்ளப் படும் பெருவெடிப்பு, ஈர்ப்பு விசை விதியின் விளைவுதான், என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.
ஈர்ப்பு விசை என்பதாக ஒன்று இருப்பதால், எதுவுமற்றதிலிருந்து பிரபஞ்சம் தன்னைப் படைத்துக் கொள்ள முடியும், படைத்துக் கொள்ளும். தானாக நிகழும் படைப்பின் காரணமாக, எதுவுமற்றது என்பதைவிட ஏதோ ஒன்று இருக்கிறது என்பதும், பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்பது, நாம் ஏன் இருக்கிறோம் என்பதும் புலனாகிறது என ஹாக்கிங் எழுதியுள்ளார்.
வான்வெளியில் உலவும் பிரபஞ்சப் படைப் பிற்குக் கடவுளைத் துணைக்கு அழைக்கவேண்டிய தேவை யில்லை என்கிறார், ஹாக்கிங்.
அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தால் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் சமூக விஞ்ஞானி பெரியார்.
அறிவியல் வளர்ச்சி கடவுளை ஒழிக்கத்தொடங்கி விட்டது. மனித மூளைக்குள் அச்சம்,அறியாமை என்ற கவசத்தால் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொண்டிருக்கும் கடவுளை, அறிவியல் சம்மட்டியால் தாக்கி அழிக்கும் காலம் அருகில் வந்துவிட்டதைத்தான் ஹாக்கிங்கின் கருத்து உணர்த்துகிறது.

Thursday, November 25, 2010

தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: இணையத்தில் தமிழ் அகராதி

தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: இணையத்தில் தமிழ் அகராதி: "http://www.tamildict.com http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/ http://www.dictionary.tamilcube.com/"

தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: நம் கண்கள்

தமிழ் கம்ப்யூட்டர் - TAMIL COMPUTER: நம் கண்கள்: "நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். ..."

Wednesday, November 24, 2010

தடை செய் ஜோதிடத்தை!

ஜோதிடம்
தன் திறமையிலும், உழைப் பிலும், நேர்மையிலும், தன்னம்பிக்கையிலும்
நம்பிக்கை இல்லாதவர்கள் ஜோதிடர் களை நாடுகிறார்கள். தம் பெயர்களின்
எழுத்துக்களைக் கூட்டிக் கொள்கிறார்கள், குறைத்துக் கொள்கிறார்கள்,
இடையில் இணைத்துக் கொள்கிறார்கள்.
குருட்டுப் பூனை விட்டத்தில் பாயாதா? கூரையைப் பிய்த்துக் கொண்டு தெய்வம்
கொட்டாதா என்று மூடத்தனமான நப்பாசையில் மிதந்து தெப்பம் விடுகிறார்கள்.
மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சராக இருந்தவர் அசோக் சவாண். ஆதர்ஷ் வீட்டு
வசதி குடியிருப்பு முறை கேட்டில் சிக்கி, முதல் அமைச்சர் பதவியைப் பறி
கொடுத்து விட்டார்.
அந்தோ, பரிதாபம்! கடந்த மாதம்தான் தன் பதவி நிலைக்க வேண்டும் என்ப தற்காக
ஜோதிடரை நாடி, அவரின் யோசனைப்படி தம் பெயரின் இடையில் ராவ் என்பதைத்
திணித்து அசோக் ராவ் சவான் என்று மாற்றிக் கொண்டார். (தினமணி 10.11.2010,
பக்கம் 1)
ஒரு மாதத்திற்குள் அவர் முதல் அமைச்சர் பதவி பறிபோனதுதான் மிச்சம். ஊழல்
செய்தற்கு முன் பெயர் ராசி பார்த்து மாற்றம் செய்து கொள்கிறார்கள் என்பது
தான் இந்த இடத்தில் அழுத்தமாகக் கோடிட்டுப் பார்த்துக் கொள்ள
வேண்டியதாகும்.
மும்பை வரை போவானேன். நம் ஊர் ஜெயலலிதா என்ன செய்தார்? தம் பெயரில்
ஆங்கிலத்தில் கடைசியில் இன்னொரு ய யை நீட்டிக் கொண்டார். பெயரைத்தான்
நீட்டிக்க முடிந்ததே தவிர, பதவியை நீட்டித்துக் கொள்ள முடியவில்லையே!
லால்பகதூர் சாஸ்திரி யின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு இந்திரா
காந்தியும், மொரார்ஜி தேசாயும் களத்தில் நின்றனர். காமராசர் இந்திரா காந்
தியைப் பிரதமராக்குவதில் வெற்றி பெற்றார்.
இந்திராவை விட மூத்த, அதிக தியாகம் செய்த மொரார்ஜி தேசாயை காமராசர்
ஆதரிக்காததற்குக் காரணம் என்னவென்று கேட்டபொழுது பல காரணங்களைச்
சொல்லலாம். இந்த ஆள் எதற்கெடுத்தாலும் ஜோசியம் பார்க்கிறாரு. ஜோசியம்
பார்த்தா நாட்டை ஆள முடியும்? என்று காமராசர் கூறினார். (ஆலடி அரு ணாவின்
காமராசர்- ஒரு வழிகாட்டி நூல். பக்கம் 304).
ஜாதகப்படி மு. வரதராசனார் அவர்களுக்கு திருவேங்கடம் என்றுதான் பெயர்
வைத்தனர். அதை மாற்றிக் கொண்டார் - அதனால் என்ன கெட்டுப் போய்விட்டார்?
மும்பையைச் சேர்ந்த ஜோதிடர் பெஜன் தருவாலாரும், ராஜகுமார் சர்மாவும்,
வாலாஷா என்பவரும், ஜோதிடத்தின் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்து,
பா.ஜ.க. தலைவரான அத்வானிதான் 15 ஆவது மக்களைவைத் தேர்தலில் ஜெயித்து
முதல் இரண்டாண்டுகள் பிரதமராக இருப்பார் என்று கூறினர். அடுத்த பிரதமர்
ஒரு பெண்தான் என்று மூக்கைச் சொறிந்துவிட்டனர் வேறு சில ஜோதிடர்கள்.
ஜெயலலிதாவும் கழுத்து வரை ஆசையைத் தேக்கி வைத்துக் கொண்டு தயாராகத்தான்
இருந்தார். நடந்தது என்ன என்பது யாருக்குத் தான் தெரியாது.
ஜோதிடத்தை நம்பி நேபாளத்தில் ஓர் அரச குடும்பமே அழிந்தது - மீதிப் பேர்
ஆட்சியையும் இழந்து நடுவீதியில் நிற்கிறார்கள். இதற்குப் பிறகும்
ஜோதிடமா?
ஊருக்கெல்லாம் ஜோதிடம் சொன்ன தேவபிரசன்னம் புகழ் பணிக்கர் இப்பொழுது
நீதிமன்றத்தில் கைகட்டி நிற்கிறார்.
தடை செய் ஜோதிடத்தை!
------------------- மயிலாடன் அவர்கள் 13-11-2010 “விடுதலை” யில் எழுதிய
கட்டுரை

Thursday, November 18, 2010

விலங்குகளிடமிருந்து கற்போம்(1)

ஒரு காடு...

அங்கே ஒரு இடத்தில் வரிக்குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இந்த சமயம் பார்த்துப் பசியோடு ஒரு சிங்கம் அந்த பக்கமாக வருகிறது.வரிக்குதிரைகளை அது பார்த்துவிடுகிறது.அவ்வளவுதான் விரட்ட ஆரம்பித்தது.

கூட்டம் சிதறி ஓடியது.அந்தச் சிங்கம் ஒரே ஒரு வரிக்குதிரையைப் பிடித்துக் கொண்டது.அவ்வளவுதான்.

அதன் பிறகு மற்ற வரிக்குதிரைகள் எல்லாம் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் வழக்கம் போல மேய ஆரம்பித்துவிட்டன.

பயந்துகொண்டு இடத்தையே காலி பண்ணிவிட்டுப் போய்விடவில்லை.

மனிதனுக்கு ஆறு அறிவு என்கிறோம்.மிருகங்களுக்கு அய்ந்து அறிவு என்கிறோம்.இருந்தாலும்,மிருகங்களிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய உண்டு.

முதல் பாடம் :

விலங்குகளுக்குப் பயம் என்பது மிகவும் குறைவு.

மனிதனுக்குப் பயம் என்பது அதிகம்.

மனிதன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான்.

நடந்ததை நினைத்து பயப்படுகிறான்.மற்றவர்களைப் பார்த்து பயப்படுகிறான்.மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறான்.

ஆனால்.....

விலங்குகள் இப்படி இல்லை.தங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற நிலையில் தான் விலங்குகள் பயப்படுகின்றன.

ஆபத்துச் சூழ்நிலை விலகியவுடன் அவற்றின் பயமும் விலகிவிடுகிறது.அதன் பிறகு கவலைப்படாமல் எப்போதும் போல வாழ ஆரம்பித்துவிடுகின்றன.-தென்கச்சி சுவாமிநாதன்

மனிதர்கள் நாமும் அதுபோல் செய்தால் என்ன ? -அகில்

Friday, November 5, 2010


சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன் .
-தந்தை பெரியார்

Thursday, November 4, 2010





சிந்திப்பவன் மனிதன்

சிந்திக்க மறுப்பவன் மதவாதி

சிந்திக்க பயப்படுகிறவன் கோழை

சிந்திக்காதவன் மிருகம் - தந்தை பெரியார்

Wednesday, November 3, 2010


ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதும் ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல
- "தந்தை பெரியார்"
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!