Tuesday, November 19, 2013




மானுட சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதே தன் வாழ்நாள் பணியாய்க் கொண்டு, கடவுள் மத ஜாதித் தடைகளைத் தகர்த்தெறிந்து சமத்துவ சமுதாயம் படைக்க, தள்ளாத வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்தபடி சுற்றிச்சுற்றித் தொண்டாற்றிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் உலகத் தலைவர் பெரியார்!

மானுடப்பற்றைத் தவிர வேறு எதன்மீதும் எனக்குப் பற்று இல்லை என பறை சாற்றியவர்! சமூக நீதிக்குரல் எழுப்பி 1925ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், சாகும் தருவாயிலும் தான் கொண்ட கொள்கையில் சாயாத சிங்கமாய் சிலிர்த்து நின்றார்!
காங்கிரசை ஒழிப்பதே முதல்வேலை என்று சூளுரைத்து வெளியேறிய பெரியார்தான் பச்சைத்தமிழர் காமராசரை ஆதரித்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இரட்சகர் காமராசர் என்றார். அவரது ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வேர்களில் கல்வி நீரோடை பாய்ந்தது. அரசுப் பணிகளில் அடக்கப்பட்ட சமூகம் அடியெடுத்து வைத்தது. காமராசரை வலுப்படுத்துங்கள்! என்று முழங்கினார் பெரியார். காரணம் பெரியார்! காரியம் காமராசர்! என்று ஏடுகள் எழுதின.
மனித வளர்ச்சிக்குப் பயன்படாத மதக்குப்பைகளை மண்ணோடு மண்ணாக புதைக்கச் சொன்னவர் பெரியார். அதே பெரியார்தான் சூத்திரப்பட்டம் ஒழிய வேண்டி புத்த மதத்திற்கும், இஸ்லாத்திற்கும் செல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறார்! ஆனால் புத்த மதத்தைத் தழுவ முடிவெடுத்து அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது பெரியார் அதை மறுக்கிறார். இஸ்லாத்துக்கோ, புத்த மதத்திற்கோ செல்வதைக்கூட சூத்திரப்பட்டம் ஒழிய ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதினார் பெரியார். கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 சதவீத மக்கள் இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்கிறார்கள். அப்படி இருக்க இசுலாத்துக்குச் செல்வதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கிறது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது இஸ்லாம் மதமும் ஒழிந்து போகும்!  என ஓங்கி ஒலிக்கிறார்.
பெரியாரின் சொல்லிலும் செயலிலும் நேர்மை இருந்தது. தாம் கொண்ட கொள்கையில் கடைசிவரை உறுதியாய் இருந்தார். தமிழ்ச் சமுதாயம் அவர்மீது நம்பிக்கை வைத்தது. பெரியாரை வளைக்கவோ, திரிக்கவோ முயற்சிப்பவர்கள் என்றும் அம்பலப்பட்டுப்போவார்கள் என்பதை வரலாறு அவ்வப்போது உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.
திரு.சேஷாச்சலம் அவர்கள், சிலநாட்கள் பூங்குன்றனாக பவனிவந்து, பின் பெரியாரின் கொள்கைகள் தன்னை ஆட்கொண்டதாகச் சொல்லி பெரியார்தாசன் என பெயர் மாற்றி அதன் பின்னர் புத்தமதம் தன்னை ஈர்த்ததாகக் கூறி அதற்குத்தாவி உடன் சித்தார்த்தன் என பெயர் மாற்றி இறுதியில் இஸ்லாமே இனிய மார்க்கம் என்று கருதி அப்துல்லாஹ் வாக வேடமேற்று அண்மையில் மைத்தானவர்.  தன் நா வன்மையால் தமிழ்நாட்டு மேடைகளில் வலம்வந்தவர். அவர் எழுதிய இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா? எனும் நூலை இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டிருக்கிறது. அப்துல்லாஹ் என்ற பெயரிலேயே இந்த நூல் எழுதப்பட்டுள்ளதால் இனி அப்துல்லாஹ் என்றே குறிப்பிடுவோம்.
நபிகள் நாயகம் விழா போன்ற இஸ்லாமிய விழாக்களில் பெரியார் பேசிய ஒன்றிரண்டு பேச்சுக்களை எடுத்து, அதையும் முழுமையாக வெளியிடாமல், சிற்சில வரிகளை மட்டும் பொறுக்கி பக்கத்திற்குப் பக்கம் மேற்கோள் காட்டி தன் கருத்துக்கு வலுசேர்க்க முயற்சித்திருக்கிறார் அப்துல்லாஹ்!.
1923 லிருந்து 1973 வரை, பெரியார் இஸ்லாத்தைப் பற்றி பேசி வந்திருக்கிறார் என்று குறிப்பிடும் அப்துல்லாஹ்க்கு 50 ஆண்டுகளில் காணக் கிடைத்தது இரண்டு மூன்று கட்டுரைகளே என்பதும், அதிலும் முன்னுக்குப் பின் வெட்டப்பட்ட சில வரிகளே என்று நினைக்கும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் எனது கருத்துகளை மட்டுமே பேசிவந்த நான் இந்த விசயத்தில் எனது கருத்துகளைக் கூறாமல் பெரியாரின் கருத்துகளையே கூற விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நூலுக்கான மறுப்பை நாமும் எமது சொந்தக் கருத்தாக எதையும் வைக்கப்போவதில்லை; பெரியாரின் மத ஒழிப்புக் கொள்கையைக் கொச்சைப்படுத்த முயல்வோரைத் தோலுரிக்க, அவர் வழியிலேயே, அவர் எடுத்துக் கொண்ட, பெரியார் கட்டுரைகளின் மறைக்கப்பட்ட பகுதிகளோடு, மேலும் சில பேச்சுகளையும், கட்டுரைகளையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம். பெரியார் இஸ்லாத்தின் அழைப்பாளராகவே (Representative) இருந்தார் என்று எழுதுகிறார் அப்துல்லாஹ்! பெரியாரோ, 1927லேயே நான் எந்த மதத்துக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல என்று எச்சரித்திருக்கிறார்! நான் எந்த மதக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல; அல்லது எந்த மதத்துக்காரனுக்காவது நான் அடிமையுமல்ல; அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன்.   மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப் படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளை தயவுசெய்து யோசித்துப் பாருங்கள். - குடிஅரசு 11.9.1927
நமது நிலைக்குக் காரணம் என்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும் பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவு நிலைக்குக் காரணம்.
மதத்தையாவது, ஜாதியையாவது, கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும், அறிவும், தொழிலும், செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது. - குடிஅரசு 14.9.1930
மதத்தையோ கடவுளையோ உண்மை என்று நம்பி காப்பாற்ற முயற்சிப்பவர்களால், மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்லும் பெரியாரை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு அழைப்பாளராக அடையாளப்படுத்தும் அப்துல்லாஹ், பெரியார் இறைவனைப் பற்றியும் தொடர்ந்து பேசியிருப்பதாக கூறுகிறார். அப்படி அவர் இறைவனைப் பற்றிப் பேசியிருப்பாரேயானால் அந்த வரிகளை எடுத்துக்காட்டியிருக்க வேண்டியதுதானே? இறைவனைப் பற்றி பெரியார் பேசியிருக்கிறார். எப்படித் தெரியுமா? கடவுள் இல்லை!  இல்லவே இல்லை! என்று பேசியிருக்கிறார். பெரியார் இஸ்லாத்தைப்பற்றி பேசியிருக்கிறார். இஸ்லாத்தில் சகோதரத்துவம் இருக்கிறது. சூத்திரப்பட்டம் ஒழிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே இஸ்லாத்துக்குச் சென்று உங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுங்கள் என்றார். அதேசமயம் அவர் இஸ்லாத்தின் மூடநம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டவும் தயங்கியதில்லை.
மனிதனின் அறிவிற்குப் பயப்படும் கடவுளும் மார்க்கமும் உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் பயந்து ஓடுகிறீர்கள்? அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கிறவனை விட கடவுள், மதம் இவைகளைப் பற்றிக் கவலைப்படாதவனே, இல்லை என்று கருதிக்கொண்டிருப்பவனே வீரனென்று நான் சொல்லுவேன்.
சமாதை வணங்கவேண்டாம், பூசை செய்யவேண்டாம் என்றால் உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கு உருவமில்லை என்பதும், அதைத்தவிர மற்றதை வணங்கக்கூடாதென்றும் சொல்லப்படுகிறது. அது மாத்திரமில்லாமல் அல்லாசாமி பண்டிகையிலும் கூண்டு முதலிய பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இஸ்லாமியர் சிலர் நடந்துகொள்வது மிகவும் வெறுக்கத்தக்கது. இவைகளையெல்லாம் ஒரு மார்க்க கட்டளை என்று சொல்வதானால் அந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ, உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியாது.
இன்று இந்துவும், கிறிஸ்தவனும் பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகிறார்கள். இஸ்லாம் மார்க்கத்தில்தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று பந்தயம் கட்டுகிறார்கள். ஆனால் சமாது வணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கையோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும், சேர்த்து வைத்துக்கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்? மற்ற மதங்களைவிட இசுலாம் மதம் மேலானது என்பது எனது அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிதுகூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் நான் முரண்பட்டவன். ஏனெனில் நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகிறேன். இன்று இசுலாம் மதச் சடங்குகள் சீர்செய்யப்பட வேண்டியவை என்று துணிந்து கூறுவேன். - குடிஅரசு 1.2.1931
மற்ற மதங்களைவிட இசுலாம் மதம் மேலானது என்பது எனது அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிதுகூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன் நான் முரண்பட்டவன் என்று கூறும் பெரியார் அவர்கள் ஒட்டுமொத்த மதத்தைப்பற்றிய தனது பொதுவான கருத்தாக, மனிதனின் அறிவிற்குப் பயப்படும் கடவுளும் மார்க்கமும் உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும், ஆராய்ச்சியையும் கண்டால் ஏன் பயந்து ஓடுகிறீர்கள்? அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கிறவனைவிட கடவுள், மதம் இவைகளைப் பற்றிக் கவலைப்படாதவனே, இல்லை என்று கருதிக்கொண்டிருப்பவனே வீரனென்று நான் சொல்லுவேன் என்று அறிவிக்கிறார்.
காந்தியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பெரியார், காந்தி இறந்தபோது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்றார். இப்படி பெரியார் முன்பு சொன்ன கருத்துகள் பலவற்றை பின்னால் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று எழுதுகிறார் அப்துல்லாஹ்.
பெரியார் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்பது சரியா? காந்தியார் பார்ப்பனத் தலைவர்களோடு சேர்ந்து, சமூகநீதிக்கு எதிராகச் செயல்பட்டபோது காந்தியை ஒழித்துக்கட்டுவேன் என்ற பெரியார், அதே காந்தி இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பெரியார் இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என பெயர் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். பெரியாரை முழுமையாகப் புரிந்தவர்களுக்கு இதில் முரண்பாட்டுக்கே இடம் இல்லை என்பது புரியும்.
பெரியார் 1932இல் ரஷ்யா சென்று வந்தார். அவ்வருடம் தொடங்கி 1938 வரை முழுமையான நாத்திகப் பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னும் பின்னும் சமயங்களைப்பற்றி அவர் கொண்டிருந்த கருத்துகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் அப்துல்லாஹ்.
1953இல் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்! 1956இல் இராமர் படஎரிப்புப் போராட்டம்! 1967இல் திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில்
கடவுள் இல்லை! கடவுள் இல்லை!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!
கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்!
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!
ஆத்மா, மோட்சம், நரகம், பிதிர்லோகம் ஆகியவைகளை கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன், இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்               மகாமகா அயோக்கியன்!!
என்கிற கருத்தாழமிக்க கடவுள் மறுப்பு வாசகத்தை அறிவித்து, அதைத் தன் சிலைகளுக்குக் கீழேயும் கொடிக்கம்பங்களிலும் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட வேண்டும் என்கிற வேண்டுகோள்! இப்படி தன் வாழ்நாள் முழுதும் நாத்திகப் பிரச்சாரம் செய்த நாத்திகத் தலைவனை நா கூசாமல் பெரியார் 1932 முதல் 1938 வரையே முழுமையான நாத்திகப் பிரச்சாரம் செய்ததாக ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அப்துல்லாஹ்.
ஆதிதிராவிடர்களை நான் ஏன் இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்று கூறுகிறேன்? எனக்கேட்டு, அதற்கான பதிலையும் தருகிறார் பெரியார்!
ஆதிதிராவிடர்களை நான் இசுலாம் மதத்தில் சேருங்கள் என்று சொல்வதற்காக அநேகம்பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை. சொல்வதைக் கிரகிக்கக்கூடிய சக்தியும் இல்லை.
மோட்சம் அடைவதற்காக என்று நான்  ஆதிதிராவிடர்களை இசுலாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. அல்லது ஆத்மார்த்தத்திற்கோ, கடவுளை அடைவதற்கோ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதிதிராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாகிரகம் செய்வது போலவே இசுலாம் கொள்கையைத் தழுவுவது என்பது ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்வேன்.
கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னவோ, அவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதையெல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கிறது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது இசுலாம் மதமும் ஒழியும்.
நான் இசுலாம் மதக்கொள்கைகள் முழுவதையும் ஒப்புகொண்டதாகவோ, அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மதத்தில் எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கின்றோமோ அவை போன்ற நடவடிக்கைகளை இசுலாம் மதத்திலும் செய்கிறார்கள்.
சமாதி வணக்கம், பூசை, நெய்வேத்தியம் முதலியவைகள் இசுலாம் மதத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல், இசுலாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கிறது. மற்றும் நாகூர் முதலிய ஸ்தல விசேஷங்களும், சந்தனக்கூடு, தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. இவை குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. ஆனால் இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ள முடியும். - குடிஅரசு 2.8.1931.
பெரியார் மதமாற்றத்தை எல்லோருக்குமாக முன்மொழியவில்லை. கடவுள் நம்பிக்கையோடு இருப்பவர்கள், அதே நேரத்தில் ஜாதி இழிவு வேண்டாம் என்பவர்களுக்கு மதமாற்றத்தை ஒரு வழியாகக் காட்டினார். ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமாக அவர் ஒருநாளும் அதைக் கூறவில்லை. அம்பேத்கர் மதம் மாறுவதாக அறிவித்தபோது, ஒரு தோழர், பெரியாருக்குக் கடிதம் எழுதி, மதத்தை மறுக்கும் சுயமரியாதைக்காரர்கள் மத மாற்றத்தை ஆதரிக்கலாமா என்று கேட்டதற்கு, பெரியார் அளித்த விளக்கத்தைப் படித்தால் இன்னும் தெளிவாக விளங்கும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால் அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும், நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபணை என்ன என்று கேட்கின்றோம்.
முகம்மதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம். கோஷா இருக்கலாம். கடவுள் இருக்கலாம். மூட நம்பிக்கை இருக்கலாம். மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம். சமதர்மம் இல்லாமலுமிருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக் காரருக்குக் கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகம்மதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொது உடமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற - ஒதுக்கப்பட்டிருக்கின்ற தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, நாயினும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் - தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கின்றோம்.
உண்மையாகவே சுயமரியாதைக்காரருக்கு இந்தச் சமயத்திலும் வேலை இருக்கிறது என்றுதான் நாம் கருதுகிறோம். ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவப் பிள்ளை, கிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லீம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும் என்கின்றவன் போனால் இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் சரி எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள் என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.
-
குடிஅரசு 17.11.1935
ஜாதி, கடவுள், மதம் ஒழிந்த சமதர்ம சமத்துவ சமுதாயத்தையே இறுதி லட்சியமாகக் கொண்டிருந்த பெரியார், தீண்டாமையிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு மட்டுமே, மதமாற்றத்தை மக்களுக்கு தாம் முன்மொழிவதாகக் கூறுகிறார். மற்றபடி முஸ்லிம் மதத்தில் உள்ள மூட நம்பிக்கை, பெண்ணுரிமை மறுப்புக் கருத்துகள் சுயமரியாதைக்காரர்களுக்கோ, பொதுவுடைமைவாதிகளுக்கோ உடன்பாடானது அல்ல என்றும் கூறுகிறார்
இசுலாம் மார்க்கம், மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியங்களிலும் மேன்மையாக இருக்கிறது என்கிறார் பெரியார். அதனால்தான் சொல்கிறேன் இசுலாத்தை பெரியார் எதிர்க்கவில்லை, ஏற்றுக்கொண்டார் என்று அந்தப் புத்தகத்தை முடித்திருக்கிறார்.
இசுலாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியங்களிலும் மேன்மையாக இருக்கிறது என்று பேசிய பெரியார் தொடர்ந்து பேசியதை லாவகமாக மறைத்துவிட்டார் அப்துல்லாஹ்!.
இசுலாம் மார்க்கம் மக்களுக்கு உபதேசிப்பதிலும், வேதவாக்கியத்திலும், மேன்மையானதாய் இருக்கின்றது என்கின்ற திருப்தியானது மனித சமுதாயத்திற்கு எல்லா பயன்களையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்துக்கு ஒப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச்செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக்கி உலக மக்களை ஒன்றுபடுத்தவும், சகோதரத்தன்மையுடன் இருக்கவும், பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்ய வேண்டும்.
எந்தக் கொள்கைக்காரனும் புத்தகத்தில் இருப்பதைக் கொண்டு, தங்கள் முன்னோர்கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது. உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி, எதையும் நேரிடை அனுபவத்தைக் கொண்டு பரீட்சித்து சரிபார்க்க வந்துவிட்டது.
செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய் இருந்தால்தான் இனி செலாவணியாகும்.
என் சரக்கைப் பரீட்சிக்கலாமா? என்கின்ற அடக்குமுறை இனி பலிக்காது. அவர் ஒஸ்தின்னு சொன்னார் ஆண்டவன் சொன்னான் என்பவையெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால், காரியத்தில் நடந்து காட்டாவிட்டால், இனி மதிப்புபெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கியதையும் கையில் வாங்கிப் பார்த்துத்தான் மதிக்கவேண்டியதாகும். அந்த முறையில் இசுலாம் கொள்கை என்பதும், முசுலிம் மக்களின் நடத்தையைக் கொண்டும், அவர்களது பிரத்தியட்சப் பயனைக் கொண்டும்தான் மதிக்கப்பட முடியும்.
இந்துக்கள் தேர் இழுப்பதைப்பார்த்து முசுலிம்கள் பரிகாசம் செய்துவிட்டு, முசுலிம்கள் கூண்டு கட்டிச் சுமந்துகொண்டு, கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு, வாணவேடிகை செய்துகொண்டு தெருவில் போய்க்கொண்டிருந்தால் உலகம் திரும்பிச் சிரிக்காதா?
இந்துக்கள் காசிக்கும், இராமேஸ்வரத்திற்கும் போய் பணம் செலவழித்துவிட்டு பாவம் தொலைந்துவிட்டது என்று திரும்பி வருவதைப் பார்த்து முசுலிம்கள் சிரித்துவிட்டு, நாகூருக்கும், மக்காவுக்கும், முத்துப்பேட்டைக்கும் போய்விட்டு வந்து தங்கள் பாவம் தொலைந்துவிட்டது என்றால் மற்றவர்கள் சிரிக்கமாட்டார்களா?
-
குடிஅரசு 9.8.1931
நாகூருக்கும், மக்காவுக்கும், பாவம் தொலைக்கச் செல்வதாகக் கூறுபவர்களை கடுமையாகச் சாடுகிறார் பெரியார். ஆனால் பெரியார் கொள்கையை 40 ஆண்டுகாலமாக கடைப்பிடித்து வந்ததாகச் சொல்லும் நூலாசிரியரோ இறைவனுக்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயமான கஅபாவிற்குச் சென்று உம்மா செய்தேன் என்று எழுதுகிறார்.
தீண்டாமையை ஒழிக்க தற்காலிக ஏற்பாடாக இசுலாத்தைத் தழுவச்சொன்ன பெரியார், நபிகளை இஸ்லாம் மார்க்கம் கூறுவது போன்று மகான் என்றோ அமானுஷ்யசக்தி படைத்தவர் என்றோ தான் கருதவில்லை என நபிகள்நாயகம் விழாவிலேயே பேசுகிறார். அப்படி சில நேரங்களில் நபிகளையும், கிறிஸ்துவையும் தான் மகான் என்று குறிப்பிட்டதற்காண காரணத்தையும் அவரே விவரிக்கிறார். அதோடு புத்தமதத்தைக் கை விட்டதால்தான் நாம் மானஉணர்ச்சியற்ற முட்டாள்களாக இருக்கிறோம் என்றும் கூறுகிறார்.
தோழர்களே நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்யசக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நபி அவர்களை ஒரு மனிதத்தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல் அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
குடிஅரசு 23.12.1953
நபிகள் பிறந்த காலத்தில் அராபிய மக்கள் அசல் காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தார்கள். அந்தக் காட்டுமிராண்டி காலத்திலேயே, அவர் அந்தக் காலநிலைக்கு ஏற்ற வழிகாட்டினார் என்பதாலேயே, அவரை மகான் என்கிறோம். அது போலவே ஏசுநாதர். இவர்களையெல்லாம் பெரிதாகப் பேசக்காரணம், மக்களிடம் அறியாமையும், காட்டுமிராண்டித்தன்மையும் நிறைந்திருந்த காலத்தில் சொன்னார்கள் என்பதால்தான்.
மதசாஸ்திரிகள் வண்டிவண்டியாக அளப்பார்கள். ஆனால் சரித்திரத்தைப்பற்றிப் பேசினால் எவனோ வெள்ளைக்காரன் சொன்னதை நம்புகிறாயா? என்பார்கள். இவர்களெல்லாம் உள்ளபடியே மனசாட்சியை மறைத்துப் பேசுவார்கள். மக்களும், வாதாடத் தெரிந்த அளவு படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுவதில்லை. எதை எடுத்தாலும் சண்டப்பிரசண்டமாகப் பேசவேண்டும் என்பதைத் தவிர சரித்திரம், உண்மைத்தத்துவம் படித்து விஷயங்களை உணர்ந்து பேசவேண்டும் என்று நினைப்பதேயில்லை. மதம் என்றாலே மடமைதான்.
-
விடுதலை 17.5.1957
புத்தரால் கூறப்பட்ட பத்துக் கோட்பாடுகளையே, கிறிஸ்து பத்துக் கட்டளைகளாகச் சுருக்கிக் கூறியிருக்கிறார். முகமதுநபிகூட ஏறத்தாழ அப்படித்தான் செய்துள்ளார். ஆகவே, எல்லா மதத்தினர்களும் புத்தக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டே தங்கள் கோட்பாடுகளை வளர்க்க முயன்றிருக்கிறார்கள்.
புத்தரை அடுத்து கிறிஸ்துவும், முகமதுநபியும் தோன்றினார்கள். இவர்களுக்குப்பிறகு இந்த நாட்டில் வேறு அறிவாளிகளே தோன்றவில்லை என்று அர்த்தமா?
புத்தர் தன்னை மனிதர் என்றே கூறிக்கொண்டார். ஏசு தன்னை கர்த்தரின் தூதுவன் என்று கூறிக்கொண்டார். முகமதுநபியும் தன்னை ஆண்டவனால் அனுப்பப்பட்ட தூதன் என்று கூறிக்கொண்டார். அப்படிக் கூறிக்கொண்டதால்தான் பாமரமக்கள் அவர்களை நம்பினார்கள்.
தன்னை மனிதன் என்றே கூறிக்கொண்டு மனித சமுதாயத்திற்கு வேண்டிய பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறிய புத்ததர்மத்தை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தான் நாம் இன்று கடுகளவுகூட மானஉணர்ச்சி அற்றவர்களாக - முட்டாள்களாக இருக்கிறோம்.
-
விடுதலை 17.1.1959
அப்துல்லாஹ் அவர்கள் தன் வாதத்திற்கு வலுச்சேர்ப்பதாக நினைத்து எடுத்துக்காட்டிய பெரியாரின் கட்டுரைகளோடு, 1925இல் காங்கிரஸை விட்டு பெரியார் வெளியேறிய காலம் முதல் 1973இல் மறையும்வரை மதத்திற்கு எதிராக அவர் பேசியும், எழுதியும் வந்த பல்வேறு கட்டுரைகளிலிருந்து சிலவற்றையும் சேர்த்து, காலவரிசைப்படியே அளித்து நூலாசிரியரின் பொய்யான வாதத்தை மறுத்திருக்கிறோம். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பெரியார் தன் இறுதிக்காலத்தில் 1972இல் விடுதலையில் எழுதிய தலையங்கம் ஒன்றே பெரியார் எந்த ஒரு மதத்திற்கோ, கடவுளுக்கோ, ஜாதிக்கோ ஏஜெண்டாக ஒருபோதும் இருக்கவில்லை என்பதையும், அப்படிக் கற்பிக்க முயலுவோரின் முகத்திரையை  இந்த ஒரு கட்டுரையே கிழித்தெறியும் என்பதையும் வாசகர்கள் உணரலாம்.
கடவுளால் ஒன்றும் பயனில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும், முட்டாள்தனமான, காட்டுமிராண்டி, அயோக்கியத்தனங்கள் ஒழிக்கப்படுவதற்காகவாவது கடவுள் மதம் ஒழிக்கப்பட வேண்டாமா? என்று கேட்கிறேன்.
ஒழுக்கத்துறையில், அறிவுத்துறையில், இவ்வளவு கேடுகள் இருப்பது மாத்திரமல்லாமல் பொருளாதாரத் துறையில் எவ்வளவு கேடுகள், நட்டங்கள் ஏற்படுகின்றன? இந்தக் கேட்டிற்குப் பயன் என்ன?
அயோக்கியர்கள், மடையர்கள், சோம்பேறிகள் பிழைக்கிறார்கள். மக்களை ஏய்க்கிறார்கள். என்பதில்லாமல் நற்பயன் என்ன என்று கேட்கிறேன்? சமுதாயம் எவ்வளவு பிரிவுற்று சின்னாபின்னப்பட்டுக் குதறிக்கிடக்கிறது?
எதற்காக இந்து, எதற்காக கிறித்தவம், எதற்காக முசுலிம், முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்குத் தனித்தனி வேதம், செய்கைகள் முதலியன எதற்காக தேவையாக இருக்கின்றன? இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல் சமுதாயத்திற்கு நலமென்ன? என்று கேட்கிறேன்.
இவற்றால் மனிதனின் அறிவுகெட்டு, வளர்ச்சி பாழாகி, இந்த இருபதாம் நூற்றாண்டிலும் மனிதன் அறிவிற்கும், சிந்தனைக்கும் ஏற்றபடி வளராமல் தேங்கிக் கிடக்கிறான். இது எவ்வளவு பெரிய கேடு?
ஆகவே, தன்னைப் பகுத்தறிவுள்ள மனிதன் என்று உணர்ந்த எவனும், மனித சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால், தன் வாழ்நாளில் ஏதாவது நல்ல காரியம் என்று கூறிக்கொள்ள வேண்டுமானால் கடவுள், மதம், வேதங்கள் ஒழிக்கப்பட தன்னால் கூடியதைச் செய்யவேண்டும். இதுதான் அறிவுள்ள மனிதருக்கு அடையாளம் என்பது என் கருத்து.
- விடுதலை தலையங்கம் 18.10.1972.
பகுத்தறிவுள்ள மனிதன், கடவுள்- மதம்- வேதங்கள் ஒழிக்கப்பட தன்னால் கூடியதைச் செய்யவேண்டும். அதுதான் அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம் என்று தந்தை பெரியார் தனது 92ஆம் வயதிலும் தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பெரியார் கொள்கையும், இயக்கமும், புத்தகங்களும் வாழும்மட்டும் பெரியாரை எந்தக் கொம்பனாலும் திரிக்க முடியாது!. தங்கள் வசதிக்கு பெரியாரை வளைக்கப் பார்க்கும் குதர்க்கவாதிகள் இனியாவது தங்கள் ஈனச்செயல்களை நிறுத்தட்டும்!


Monday, November 18, 2013

இந்துமதக் கடவுளர்கள் பிறந்தது எப்படியாம்..? (அவர்கள் சொல்கிறபடி)

சிங்கத்திற்கு சிங்கமகாசூரன் பிறந்தான் புலிக்கு வீரீஞ்சிகன் பிறந்தான் யானைக்கு விநாயகன் பிறந்தான் குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான் கழுதைக்கு காங்கேயன் பிறந்தான் கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான் எருமைக்கு மகிஷன் பிறந்தான் பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான் ஆட்டுக்கு அசமுகி பிறந்தான் மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான் நாய்க்கு சவுநகன் பிறந்தான் நரிக்கு கேசகம்பலன் பிறந்தான் பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான் குரங்குக்கு சம்புகன் பிறந்தான் மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான் கிளிக்கு சுகர் பிறந்தான் பட்சிக்கு சகுனி பிறந்தான் ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான் தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான் மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான் பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான் மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள் பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள் மலைக்கு வசுவதத்தன் பிறந்தான் துரோனியில் துரோணன் பிறந்தான் கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான் ஆற்றில் பீஷ்மன் பிறந்தான் காற்றுக்கு பீமன் பிறந்தான் புற்றில் வால்மீகி பிறந்தான் குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான் தாமரையில் பத்மை பிறந்தான் அண்டத்தில் வாதன் பிறந்தான் கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள் சூரியனுக்கு கர்ணன் பிறந்தான் சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான் செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான் புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான் வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான் சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான் சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான் முகத்தில் பிராமணன் பிறந்தான் தோளில் சத்திரியன் பிறந்தான் தொடையில் வைசியன் பிறந்தான் காலில் சூத்திரன் பிறந்தான் வாயில் வேதவல்லி பிறந்தாள் மூக்கில் அஸ்வினி பிறந்தாள் மனதில் மன்மதன் பிறந்தான் தொப்பிளில் வீரவாகு பிறந்தான் கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான் தும்மலில் தூபன் பிறந்தான் நிழலில் சுந்தரன் பிறந்தான் கண்ணீரில் வானரன் பிறந்தான் உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான் வலது கால் விரலில் கக்கன் பிறந்தான் இடது கால் விரலில் தாணி பிறந்தான் கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான் ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான் பேய்க்கு காந்தாரி பிறந்தாள் கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான் காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான் விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான் நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான் மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள் வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான் புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான் பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான் நன்றி; ஸ்டாலின் மனோகர் முகநூல் நண்பர்

Sunday, October 27, 2013

அந்தப் பதினெட்டு நாட்கள்- பே.பா.குபேரன் -சிறுகதை

அந்தப் பதினெட்டு நாட்கள்- பே.பா.குபேரன்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் இந்திரனுக்கு ஒரு யோசனை. அடுத்தது மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டும். மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் _ இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி திரைக்கதையை உருவாக்க வேண்டுமே... இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு கண்ணயர்ந்தார் இந்திரன். அவரது மனத்திரையில் வியாசர் விருந்து காட்சிகளாக உருவெடுக்க ஆரம்பித்தது. அப்போது _
நாள்தோறும் செய்துவரும் விநாயகர் பூசனையை முடித்தபோது கண்ணெதிரே ஒரு வெளிச்சம். இந்திரனுக்குக் கண்கள் கூசின. சாட்சாத் விநாயகர் வந்து நின்றார்.

வணக்கம் கடவுளே! என் பாக்கியமே பாக்கியம்! என் வழிபாட்டுக்குப் பலன் கிடைத்துவிட்டது. வாழ்த்துங்கள் சுவாமி _ என்னை வாழ்த்துங்கள்!...
வாழ்த்துகிறேன் _ ஆனால் ஒரு நிபந்தனை...
சொல்லுங்கள் சுவாமி!...
நீ தயாரிக்கும் மகாபாரதக் கதையை நான்தான் எழுதினேன்; தெரியுமா...
தெரியும் சுவாமி! எழுதுகோல் இல்லாத காலத்தில் உங்களுடைய தந்தத்தை ஒடித்து எழுதினீர்களாமே_
படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதுகின்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிடு. படத்தின் பெயருக்கு முன் விநாயகர் அளிக்கும் என்று குறிப்பிட வேண்டும். இதுதான் என் கண்டிஷன்!
உங்களுக்கும் சினிமா ஆசை வந்துவிட்டதா சுவாமி? உங்கள் விருப்பப்படியே திரைக்கதை வசனம் எழுதிவிடுங்கள்!...
சரி சரி! உன் முயற்சிக்கு என்னுடைய ஆசிர்வாதம்! உன் படம் வைரவிழா கொண்டாடும்!... சந்தேகமே இல்லை...
முழுமுதற் கடவுள் விநாயகரே தரிசனமாகி சினிமா சான்ஸ் கேட்டுவிட்டார். மறுக்க முடியவில்லை இந்திரனால். ஏடுகளில் செய்திகளும் விளம்பரங்களும் வெளிவரத் தொடங்கின. இந்திரன் மூவிஸ் தயாரிக்க இருக்கும் மகாபாரதக் கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேவை...
பிள்ளையாருக்கு வாய்ப்புக் கொடுத்தது சம்பந்தமாக பைனான்ஸியர் குபேந்திரனுக்கு மகிழ்ச்சி. பகவானின் ஆசி, அத்துடன் பிள்ளையாரின் பக்தர்கள் குவிந்து விடுவார்கள் _ வைரவிழா கொண்டாடலாம் _ மூன்றுமாத காலத்திற்கு நுழைவுச்சீட்டு முன்பதிவு ஆகிவிடும்! நிச்சயம் சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் போட்டு வைக்கலாம்....
இந்திரன் மூவிஸ் வாசலில் தேவர்கள் கூட்டம். நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு நீண்ட வரிசை... இந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் அலுவலகத்தில் நுழைந்தார் ஒரு முதியவர். நரைத்த தாடி, மீசை, ஒரு கையில் தடி _ இன்னொரு கையில் கமண்டலம்; இவர்தான் வியாசர். கோபம் கொந்தளித்தது அவர் முகத்தில்.
பெரியவரே! உமக்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்க முடியாது _ தயவுசெய்து போய் வாருங்கள்!
நான் உங்களிடம் வாய்ப்புக் கேட்டு வரவில்லை! நான்தான் வியாசர்! மகாபாரதம் என்னுடைய கதை! இந்திரனும் குபேந்திரனும் திகைத்தனர்.
அப்படியா_
இமயமலைச் சாரலில் தங்கியிருந்த சமயத்தில், நான் கதையைச் சொன்னேன். அதைத்தான் விநாயகர் எழுதினார். இனிமேல் விளம்பரத்தில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால்_
பெரியவரே! கோபப்படாதீர்கள்! நாங்கள் விநாயகரைக் கலந்துகொண்டு முடிவெடுக்கிறோம்...  அவசரப்பட்டு வழக்குத் தொடர்ந்து விடாதீர்கள் _ போய் வாருங்கள்.
பெருமூச்சு விட்டபடி புறப்பட்டார் வியாசர். வியாசர் சொல்வதும் நியாயம்தானே_ இந்திரன் நினைத்துக் கொண்டார்.
ஏடும் எழுத்தாணியுமாக விநாயகர் வந்து நின்றார். வாருங்கள் விநாயகரே! கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஒரு பெரியவர் _ வியாசராம்! இங்கே வந்து சத்தம் போட்டார் என்ன சேதி?
மகாபாரதம் _ அவர் சொல்லிய கதையாம்! எங்களுக்கு ஒரே டென்ஷன் ஆகிவிட்டது. தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். இது உங்கள் கதையா அல்லது வியாசரின் கதையா?... _ பெரிய கதை! வியாசர்தான் கதை சொன்னார். அவர் கதை சொல்லிய பிரகாரம் இப்போது நான் கதை எழுதவில்லை... பல திருத்தங்கள், மாற்றங்கள் செய்துதான் திரைக்கதை எழுதியிருக்கிறேன். அவர் சொல்லிய கதையைப் படமாக்கினால் திவால் ஆகிவிடுவீர்கள். படத்திற்கு பாக்கியராஜ் பாணியில் அந்த பனினெட்டு நாட்கள் என்று பெயர் வைத்திருக்கிறேன். படம் வெளிவந்த பிறகு வியாசர் பார்க்கட்டும் _ அவர் சொன்ன மூலக்கதைக்கும் நான் எழுதிய திரைக்கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது... விநாயகர் சிரித்தார்.
மகாபாரதக் கதைக்கு ராஜாஜி வியாசர் விருந்து என்றுதானே பெயர் வைத்தார். ஆனபடியால் _
பெயர் போடும்போது... கீழ்வரிசையில் ரொம்பவும் சின்ன எழுத்துகளில் மூலக்கதை _ வியாசர் என்று குறிப்பிடுங்கள்; அதுபோதும்! நான் ரொம்பவும் சிரமப்பட்டு திரைக்கதை அமைத்திருக்கிறேன். கேளுங்கள்! பதினெட்டு நாட்கள் யுத்தம் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் இரவில் வீரர்கள் இன்பக் கனவு காண்பார்கள்... எல்லாம் தேன்நிலவுக் காட்சிகள். இத்துடன் அரண்மனையில் பெண்கள் குளிக்கும் காட்சி _ அஸ்தினாபுரத்தில் அழகுப் போட்டி! தாமரைப் பொய்கையில் நங்கையர் நீச்சல் போட்டி! இத்துடன் துச்சாதனன் திரவுபதியின் துகிலுரியும் காட்சி... தேவர்கள் ஆனந்தப்பரவசம் அடைவார்கள் _ ஜொள்ளு விடுவார்கள்!...
சூப்பர் சுவாமி! யுத்தக் கதையை முத்தக்கதை ஆக்கிவிட்டீர்கள். இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை சுவாமி! நன்றி... நன்றி... நடிகர்கள் தேர்வு நடைபெற்றபோது, கருட வாகனத்தில் திருமால் வந்து இறங்கினார். எல்லோரும் சிரம்தாழ்த்தி வணங்கினார்கள். சொகுசு நாற்காலியில் உட்கார்ந்தார் பகவான். இந்திரன் உபசரித்தார்.
பகவானே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நாங்களே வைகுண்டலோகம் வந்திருப்போமே! பாற்கடல் பள்ளியைவிட்டு இந்தப் படக்கம்பெனிக்கு ஏன் வந்தீர்கள் சுவாமி? உங்கள் தரிசனம் _ நாங்கள் தன்யர்கள் ஆனோம்...
பாரதக் கதை நடந்த காலத்தில் நான்தான் கண்ணபிரானாக அவதாரம் செய்தேன். ஸ்ரீகண்ணபிரான் வேஷத்திற்கு என்னையே போட்டுவிடுங்கள்... ரொம்பவும் பொருத்தமாக இருக்கும்!...
கண்ணனாக நீங்கள் நடிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை... ஆனால், _ என்.டி.ராமாராவ் பாணியில்தான் நீங்கள் நடிக்க வேண்டும். உங்கள் இஷ்டப்படி எல்லாம் நடிக்கக்கூடாது! என்.டி.ஆர். நடித்த படங்களின் வீடியோ போட்டுக் பார்த்து அவரைப் போலவே நடித்துவிடுங்கள்!...
நான்தான் கண்ணன். உங்களுக்கும் தெரியும். நான் என்.டி.ஆரைக் காப்பி அடிக்க வேண்டுமா...
ஆமாம் சுவாமி! அப்போதுதான் படம் ஓடும். விநியோகஸ்தர்கள் படத்தை வாங்குவார்கள். நடிப்புக்குச் சம்பளமாக, வைகுண்டம் ஏரியாவுக்கு நீங்கள் விநியோகஸ்தர்!... இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணனாக நடிக்க திருமால் ஒப்புக்கொண்டார். குபேந்திரா, நான் திருப்பதியில் என் கல்யாணத்திற்காக வாங்கிய கடனைச் சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்...
மகாபாரத காலத்தில் செத்துப்போன தேவர்கள் இப்போது சொர்க்கத்தில் அந்தந்தக் கதாபாத்திரங்களாக நடிக்க வந்துவிட்டார்கள்.
ஒரு வழியாக படப்பிடிப்பு ஆரம்பமானது. நாரதர், இசை அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். விநாயகரின் எழுத்து, இந்திரனின் இயக்கம்... அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்படும் நாள் நெருங்கியது....
அந்தப் பதினெட்டு நாட்கள் திரைப்படத்தின் மூலமாக பகவத்கீதையின் ரகசியத்தை ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார் விநாயகர். உண்மையில் கீதா ரகசியம் என்பது என்ன?...
போர்க்களத்தில் இரு தரப்பினரும் அணிவகுத்து நிற்கிறார்கள். தேரோட்டியாகிய கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்கிறான். உற்றார் உறவினர்களைப் போரிட்டுச் சாகடித்துவிட்டு சக்கரவர்த்தியாக வேண்டுமா! வேண்டாம்... இப்படி முடிவு செய்த அர்ச்சுனனுக்கு மந்திர உபதேசம் செய்கிறார். ஒரே வார்த்தை... பதவியே பரமசுகம்! ஆமாம்... பதவியே சுவர்க்கம்! பதவியே வாழ்க்கை!... பதவி நாற்காலி பார்ப்பானுக்கு மட்டும்... மற்ற இனத்தவர்கள் அவர்களுக்குப் பல்லக்குச் சுமக்க வேண்டும். பிரம்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணருக்கு மட்டும் _ உத்தியோகம் புருஷலட்சணம்! ஏனையவர்கள் கர்மபலன், பழைய பிறவி, விதி என்று மூளைச்சலவை செய்யப்பட்டு பகுத்தறிவை இழந்துகொண்டு இருக்க வேண்டும்... கட்டிய மனைவியைக் காப்பாற்ற வக்கில்லாத இராமனையும், பிறன் மனையைப் பெண்டாள நினைத்த கிருஷ்ணனையும் காலமெல்லாம் வணங்கிக் கொண்டிருக்க வேண்டும்... வருணாசிரமதர்மம் என்னும் நச்சுமரத்தின் வேர்தான் பகவத் கீதை!...
கண்ணனின் உபதேசம் கேட்டபிறகு, புதிய உற்சாகத்துடன் போரிட்டான் அர்ச்சுனன்.. நாடு சுடுகாடானது; பாண்டவர்களுக்கு வெற்றி! செத்தவர்கள் எல்லாம் வைகுண்டலோகத்தில் வாழ்கிறார்கள்... சுபம்... படம் முடிவடைகிறது.
இதோ, படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. பிரிவியு தியேட்டரில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் மற்றும் முக்கிய தேவர்களுக்காக அந்தப் பதினெட்டு நாட்கள் திரையிடப்பட்டது. வாசலில் பெரிய அளவில் விநாயகர் கட்அவுட் _ எல்லோருக்கும் இலவச கொழுக்கட்டை, சுண்டல்!...
மயில் வாகனத்தில் முருகன், காளைமீது சிவன், அன்னப்பட்சியில் பிரம்மா, சிம்ம வாகனத்தில் பார்வதி, கருடன் மீது திருமால் அனைவரும் வந்துவிட்டார்கள். இந்திரனும், குபேந்திரனும் வந்தவர்களை வரவேற்று வணங்கி தியேட்டருக்குள் அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது_ இருவருக்கும் அதிர்ச்சி. காக்கை வாகனத்தில் ஒருவர் வந்து இறங்கினார். கால் ஒன்று நொண்டி _ கருத்த உருவம் _ அவர்தான் சனிபகவான். தேவேந்திரா, போச்சு, எல்லாம் போச்சு. இவரை யார் கூப்பிட்டார்கள்? இவர் பார்வை பட்டால் எல்லாம் சாம்பலாகிவிடுமே... சனிபகவானையும் காகத்தையும் பார்த்து தேவர்கள் கிண்டலாகச் சிரித்தனர். இந்திரன் சமாதானப்படுத்தினார். விவரம் தெரியாத தேவர்கள் _ அவர்கள் சிரிப்பதைப் பெரிசு பண்ணிக் கொள்ளாதீர்கள் சுவாமி!
இந்திரன், குபேந்திரன் இருவரும் சனிபகவானின் திருப்பாதங்களில் விழுந்தனர். ஆளுக்கொரு காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.
பூலோகத்தில் நான் யாரையும் விட்டுவைப்பதில்லை. எல்லாரையும் பிடித்துக் கொள்வேன். நீங்கள் ஏன் என்னைப் பிடித்துக் கொள்கிறீர்கள்?...
ப்ளீஸ் சுவாமி ப்ளீஸ்! தயவுசெய்து நீங்கள் படம் பார்க்க வேண்டாம்! திரும்பிச் சென்று விடுங்கள். உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்று எங்களுக்குத் தெரியும்! படம் நூறுநாள் ஓடியபிறகு வீடியோ கேசட் அனுப்பி வைக்கிறோம். நீங்கள் சாவகாசமாக படம் பார்க்கலாம்...
அரிச்சந்திரன், நளமகாராசா கதைகளை நினைத்துப் பார்த்து இருவரும் சின்னக் குழந்தைகள்போல் கேவிக்கேவி அழ ஆரம்பித்தனர். பகவானே! வரக்கூடிய லாபத்தில் ஒரு பகுதி உங்களுக்குக் காணிக்கை வைக்கிறோம். தயவுசெய்து மனம் இரங்குங்கள்!
சனிபகவான் சொன்னார், எல்லாரையும் வா வா என்று அழைத்துவிட்டு என்னை மட்டும் போ போ என்று துரத்துகிறீர்கள். இது நியாயமா? சரி சரி... நான் போகிறேன்; என் காலை விடுங்கள்...
இந்திரன், குபேந்திரன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் சனிபகவான். காகம் அவர் அருகில் வந்து நின்றது. ஏறி அமர்ந்ததும் வானவெளியில் பறந்தது... கா, கா... ஒரே சத்தம்.
கா... கா... சத்தம் கேட்டு கண்விழித்துக் கொண்டார் தயாரிப்பாளர் இந்திரன். மகாபாரதக் கதையைப் படமாக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்... துணிமணிகளைச் சலவைசெய்து அழுக்கை நீக்கி சம்பாதிக்கிறார்கள் _ மக்களின் மூளைகளைச் சலவைசெய்து அழுக்கைச் சேர்த்து சம்பாதிக்கவும் வேண்டுமா, வேண்டாமே... இந்திரனின் மூளைக்கு மாமேதை லெனின் சொன்ன வாசகம் நினைவிற்கு வந்தது...
மதம்... மக்களுக்கு அபினி. ஏழை மக்களுக்குக் கடிவாளம். இந்தக் கடிவாளத்தை ஏழைகளுக்குப் பூட்டிவிட்டதால் அவர்கள் பணக்காரர்களுக்குச் சாதகமான பாதையில் ஒழுங்காகச் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

Saturday, October 19, 2013

தீபாவளிப்பண்டிகை— தந்தைபெரியார்

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள்.
துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலான தாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக் கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங் களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ “காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது” என்றால் உடனே “கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய “காளைமாடு எப்படி கன்றுப் போடும்” என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.

உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங் களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண் ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறு வதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ் தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார் களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு” என்பாரும் “புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு “நாங்கள் தான் பிரதிநிதிகள்” என்பாரும் மற்றும் “திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு” மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற “படித்த” கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங் களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.

****

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமாயிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
தீபாவளியின் கதைச் சுருக்கம்:

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டு மென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.

முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? “எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு”க்கும் பூமி “தேவி”க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி “தேவி” என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! “பொறுமையில் பூமிதேவிபோல்” என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த “அம்மையாரை” உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட் டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
——————— தந்தைபெரியார் — “குடிஅரசு” 01.11.1936

பாதுகாக்கப்பட வேண்டிய பகுத்தறிவுச் சிற்றூர் நன்றி;வண்ணக்கதிர்



Saturday, October 12, 2013

எண்ணிப்பார் . . . . கோபியாமல்! அறிஞர் அண்ணா

எண்ணிப்பார் . . . . கோபியாமல்!அறிஞர் அண்ணா
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக், கண்டுபிடிக்கும் கருவி
டார்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்குள் போகக் கருவீ
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருகக மனிதனின் உழைப்பைக் குறைக்கம் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்.
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!!
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இந்தியாவுக்கு வழிகண்டுபிடித்த வாஸ்கோடிகாமா இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம்,
ஆயுத பூசை
செய்தவர்களல்ல! நவராத்திரி கொண்டாடினவர்களல்ல!
நூற்றுக்கு நூறு என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே
சரஸ்வதி பூசை
இல்லை!
ஓலைக்குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கற்பூரம் கூட, நீ செய்ததில்லை.
கடவுட் படங்களுக்கு அலங்காரத்துககுப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய்,
சரஸ்வதி பூசை
ஆயத பூசை!!
ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்சிறாயே!!
ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய அதிசயப் பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்கத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்.
உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ய நூற்களை எல்லாம்கூட, ஓலைச்சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு யந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!
எல்லம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுததிக்கொண்டு, பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயேஇ சரியா? யோசித்துப பார்!
சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது - என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, சாரதர் சர்விஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது ராய்ட்டர் சர்விஸ் - தந்தி முறை - அவன் தந்தது!
தசரதன் வீட்டிலே டெலிபோன் இருநததில்லையே!
ராகவன், ரேடியோ கேட்டதில்லை.
சிபி, சினிமா பார்த்ததில்லை!
தருமராஜன், தநிந்திக்கம்பம் பார்த்ததில்லை!
இவைகளெல்லாம், மிகமிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது - அனுபவிக்கிறோம்.
அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருளைத் தந்த அறிவாளர்களை மறந்துவிடுகிறோம். அவர்கள்
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்துவிடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும, பார்த்தும், ரசிக்கிறோம். இது முறைதானா?
பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்துவிட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும், பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.
யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!
சினிமாவிலே, முன்பு ஓர் வேடிக்கை பார்த்தேன், கவனத்திற்கு வருகிறது, சொல்கிறேன்.
ஒரு இரும்புப் பெட்டி! அதிலே, என்ன வைத்திருக்கிறான் என்று எண்ணுகிறாய்? வைரம், வைடூரியமா, தங்கம், வெள்ளியா? இல்லை! கத்திரி, வாழை, கீரைத் தண்டு, இப்படிப்பட்ட சாமான்களை!
ஒரு லோபி! அவன் இரும்புப் பெட்டியிலே, வைத்திருக்கிறான், இந்தச் சரக்குகளை. மனைவி, சமயலுககாக வந்து கேட்கும்போது, இருமபுப் பெட்டியை ஜாக்கிரதையாகத் திறந்து கத்தரி ஒன்றும் வாழையில் கால்பாகமும், தருகிறான்! பிறகு பெட்டியைப் பூட்டி விடுகிறான்.
காய்கறியின் விலை என்ன, அதை வைத்துப் பூட்டி வைத்திருக்கிறானே இரும்புப் பெட்டி, அதன் விலை எவ்வளவு!
அவன் யோசிக்கிறானா அதை.
அதுபோலத்தான், மேனாட்டு, அறிஞர்கள் கொடுத்த இரும்புப்பெட்டி போன்ற விஞ்ஞான சாதனத்துககுள்ளே, நாம், நமது பழைய கருததுக்கள், முறைகள், பூசைகள் ஆகிய சில்லறைகளை வைத்துக்கொண்டு காலந்தள்ளுகிறோம்.
எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, சினிமாவிலே, இந்தக் காட்டிசியைக் கண்ட உடனே கொட்டகையிலே இருந்தவர்கள், அட! பைத்தியக்காரா! என்று கேலி செய்தனர்.
நமது போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையிலே எவ்வளவு பேர், கேலி செய்தார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்?
நாம் கட்டிக் கழித்த துணியை, ஒட்டுப்போட்டு, ஓரம் வைத்துப் போட்டுக் கொண்டு ஒரு ஆள், நம்மிடமே வந்துநின்று, புதுசா ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன் - அருமையான துணிகள் இருககு நம்ம கடைக்கே வாங்க - என்று நம்மையே அழைத்தால் நமக்கு எப்படி இருக்கும் . . . .?
(திராவிடநாடு)

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!