Saturday, August 18, 2012

தந்தை பெரியாரின் தொலை நோக்கு



                            தி.மு.க  தொடங்கப்பட்டு 2 வாரங்களுக்கு பிறகு , முகத்தில் சோர்வோடு இருந்த பெரியாரை , அப்போது அவருடன் பணிபுரிந்த பத்திரிக்கையாளர் சே.வி.கே அவர்கள், "அய்யா ரொம்பக் கவலையில் இருப்பதாகத் தெரிகிறதே? கழகத்திலிருந்து அண்ணாவோடு ஏராளமானவர்கள் வெளியேறிவிட்டார்களே என்ற கவலையா ?"என்று கேட்டிருக்கிறார்.
                               இயக்க வரலாற்றில் எத்தனையோ பேர் விலகிச் சென்றிருக்கிறார்கள் எனவே அதுபற்றி தான் கவலைப்படவில்லை என்று கூறிய தந்தை பெரியார், " நீ சொன்னதைப் போல என் மனதுக்குள் ஒரு கவலை இருந்து வருவது உண்மைதான்.... அண்ணாதுரை எதற்காக நமது கழகத்தில இருந்து விலகிச் சென்று புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார்? அவருக்கு அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.என்னோடு இருக்கும் வரையிலும் நான் அதற்கு அனுமதி தர மாட்டேன்.அதனால்,வெளியேறிவிட்டார். என்னுடைய கொள்கைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றவே முடியாது என்பதில் திட்டவட்டமான தீர்மானத்தைச் செய்துவிட்டுத்தான்,கழகத்தை இயக்கமாகவே நடத்தி வருகிறேன்.அண்ணாதுரையோ தி.மு.க என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அரசியல் என்று இறங்கிவிட்டால்,பிறகு தேர்தல்களே முக்கியமாகிவிடும்.தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் அதற்குப் பண பலம் தேவை.பிறகு, பல தரப்பிலிருந்தும் பண வசூல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.அப்போதே கொள்கைகள் எல்லாம் பின்னுககுத் தள்ள வேண்டிய கட்டாயத்துக்கு போய்விடும். இது ஒருபுறம் இருக்க,தப்பித் தவறி தி.மு.க ஆளும் கட்சியாக மாறிவிட்டாலோ, அதிலிருந்துதான் திராவிடர் கழகக் கொள்கைக்கே சரிவு ஏற்பட்டுவிடும்.
                        ஏனெனில், ஆளும்கட்சியாக மாறிவிட்ட பிறகு, கட்சிக்குள்ளேயே பல மையங்கள் தோன்றிவிடும்.அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்ப்பதில் பலரும் இறங்கிவிடுவார்கள்.ஏனெனில், சமுதாயத்தில வசதியாக வாழவேண்டும் என்ற ஆசை இல்லாமல் போகாது.இதன் விளைவாகக் கட்சிக்கே கெட்ட பெயர் ஏற்படும் அளவுக்குச் சென்றுவிடும். அந்தச் சமயம் பார்த்து, என் கொள்கை ரீதியான எதிரிகள் ஊழல் கற்களால் திராவிட இய்க்கத்துக் கொள்கைகளையே அழிக்கப் பார்ப்பார்கள். அது மட்டுமல்ல, தி.மு.க. அதிகாரத்தைக் கைப்பற்றுமானால்,அதன் பிறகு கட்சிக்கள் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாடுகளாலும், போட்டியாலும் கழகமே பலவிதமான பிளவுகளுக்கு உள்ளாவதை தவிர்க்க இயலாது." என்று நீண்ட உரையை நிகழ்த்தியுள்ளார்.
-திரு.இரா.கண்ணன் எழுதிய " அண்ணா  ஒரு சாதரண மனிதரின் அசாதாரண வாழ்க்கை " புத்தகத்திலிருந்து
                                       

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!