Saturday, July 20, 2013

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! --நா.முத்துநிலவன் கட்டுரை—

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!

--நா.முத்துநிலவன் கட்டுரை—




      என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு  நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.             
அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் –அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.  
கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழி என்பது ஒரு பகுதிதான். அதைவிட, வகுப்பிலும், விடுதியிலும் இருக்கும்போது, மற்றவர்களோடு எப்படிப் பழகுவது, நல்லது கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதுதான் உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாகப் பாதியும், ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும், கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்விஅறிவு!  அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும், கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.  
ஆனால் உன்போலும் பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசி, கணினி, தொலைக்காட்சியுடனே செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும், என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். நீ எனது செல்பேசியில் திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித்தந்ததை நான்என் நண்பர்களிடமெல்லாம் காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன் “இது எப்படிங்க? என்செல்பேசியிலும் வச்சுத்தாங்களேன்?“ என்று சொல்லும் போது “இது என்மகள் வச்சுத் தந்தது, எனக்குத் தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்படி மின்-நூல்களைப் படிப்பது, மின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும் பயன்பாடுகள்  ஒருபக்கமிருக்க, வேறுபல திசைகளில் நேரவிரயத்துடன், நம்மைப் புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை. அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும்.
இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர், மிகுந்த –பன்முக- திறமைசாலிகளாக இருப்பதை, சில செய்தி-தொலைக்காட்சி-களில் பார்த்து வியந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா-நானா விவாதங்கள், சூப்பர்-சிங்கர், கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில பேச்சு மற்றும நேரலையாகக் கருத்துக்கூறும் நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து  மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!
இதுபோல் நல்லநிகழ்ச்சிகளை பார்த்துரசிக்காமல், குறும்புசெய்து திட்டும்குட்டும் வாங்காமல், நல்ல விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல், வெளியில் போய் விளையாடி மகிழாமல், வீட்டுக்குள் உட்கார்ந்து “ஓடிவிளையாடு பாப்பா” என்று மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்குதை எப்படிச் சாதனைஎன்று சொல்லமுடியும்? அவர்கள் குழந்தைப் பருவத்தையே படிப்புக்காகத் தியாகம் செய்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்க விரும்புகிறேன்.
முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டு, ஓவிய, இசை முதலான பலப்பல வகுப்புகளையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானே? பல பள்ளிகளில் முக்கியமாக “மாநில முதலிடம், இரண்டாமிடம், மற்றும் 450க்கு மேல் 800பேர்” என்று விளம்பரம் செய்து கல்லாக்கட்டும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில் இருக்கும் ஓவியம்,விளையாட்டு,சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகளே நடத்தப்படுவதில்லை! ஒரே புத்தகத்தை இரண்டுவருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளிபிசகாமல் “வாந்திஎடுத்து” எழுதிக்காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனதான். பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத்திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா? முதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா யோசித்துப் பார்!  
இதனால்தான் மகளே, எனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த இடத்திலும் நான், “என் எதிரே மலர்ந்த முகங்களோடு அமர்ந்திருக்கும், இன்றைய மாணவர்களான- எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான, எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே! குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே! தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களே, அன்னை தெரஸாக்களே!” என்று சொல்லும்போது கூட்டமே ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும்.  இது பேச ஆரம்பிக்கும்போதே, பார்வையாளர்களைக் கவர நான் செய்யும் உத்திதான் எனினும், அதில் இருக்கும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்லவே?
ஆனால், எனதுநண்பர் ஒருவர் -மத்திய அரசின் விருதுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- சொன்ன ஒரு கருத்தும், மற்றொரு பக்கம் உறுத்தத்தான் செய்கிறது. அவர் சொன்னார் – “சார், நாங்கள்ளாம் 1985மற்றும் 89ஆம் ஆண்டுகளில் நடத்திய பெரும்பெரும் போராட்டங்களால், இப்போது எங்கள் சம்பளமும் சரி பென்ஷனும் சரி உயர்ந்து நிற்கிறது. நான் 37ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ.60,000 சம்பளத்தை, என்மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்”  “ஆகா, இதுவல்லவா மகிழ்ச்சி” என்று நான்சொல்ல, அவர் சற்றும் மகிழ்ச்சியில்லாமல், உச்சுக்கொட்டிக்கொண்டு, “அட போங்க சார், வாழ்க்கைன்னா என்னன்னு  தெரிஞ்சிக்கறதுக்கு முந்தியே வாழ்ந்துமுடிச்சிடுறாங்கெ சார்!  பெரியபடிப்பு, கைநெறய சம்பளம், ஆனா வாழ்க்கைன்னா என்னன்னே தெரியலசார்! அல்பவிஷயத்த பூதாகரமாக்கி அடிச்சிக்கிறது, பெரிய விஷயங்கள புரிஞ்சிக்காமயே லூஸ்ல விட்டுர்ரதுன்னு இருந்தா என்ன சார் அர்த்தம்? சும்மா டென்ஷன் டென்ஷன்னு... 27வயசுக்காரன் சொன்னா, 60வயசுல நா என்ன சொல்றது? என்று அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமலே போனதற்குக் காரணம் என்ன? அந்தப் பாவத்தை நமது பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அல்லவா செய்துவிட்டன என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது! குதிரைக்குக் கண்படாம் போட்டது போல, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காமல் “நேராக“பார்! மதிப்பெண் மட்டும் தெரிகிறதா? சரி என, பயிற்சிபெறும் யாரும் யதார்த்த உலகத்தை விட்டு அந்நியப் படுவதன் காரணமும் பள்ளியில் –புரியாமலே- மனப்பாடம் செய்வதில் தொடங்கிவிடுகிறது அல்லவா?
இன்றைய இளைய சமுதாயம் நன்றாகப் படிக்கிறது ஆனால், படிப்பை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது?  எதை, எதற்காகப் படிக்கிறார்கள் என்று தெரிந்துதான் படிக்கிறார்களா? 
எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம்,                                                      
பி.ஈ.படித்தால்பொறியாளர்ஆகலாம்.                                                  
பி.எல்.படித்தால்வழக்குரைஞர்ஆகலாம்,                                         
ஐ.ஏ.எஸ்.படித்தால்மாவட்டஆட்சியர்ஆகலாம்,                                                 
எதுவுமேபடிக்காமல்மந்திரியும்ஆகலாம்.                                              
ஆனால்,என்னபடித்தால்மனிதர்ஆகலாம்?                                                  
மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம்.  என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.

அதனால், நீ என்ன வேண்டுமானாலும் படி, எல்லாவற்றுக்குள்ளும் மனிதரை மட்டும் மறக்காமல் படி, அல்லது மனிதருக்காக எதுவேண்டுமானாலும் படி. ஆனால், நேர் எதிராகச் சிலர், படிப்பு ஏற ஏற மனிதரை மறந்துவிடுகிறார்கள் அல்லது மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறந்து போகிறார்கள்!
கலைஇலக்கிய வாதிகள் பலர் பள்ளி கல்லூரிப்படிப்பே இல்லாதவர்கள். ஆனால், அந்தப் “படிக்காதவர்கள்“தான் பல நூறு பேர்களுக்குப் பட்டங்களையே தருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? நான் சொல்வது படிக்காமலே பல கல்லூரிகளை நடத்திப் பட்டம் வழங்கும் –கல்வி வள்ளல்கள் எனும் பெயரோடு உலவிவரும் “கல்வி முதலாளிகளை அல்ல! அது இன்றைய நம் சமூகத்தின் முரண்பாடு! அவர்களிலும் நல்லவர் சிலர் –விதிவிலக்குகளாக- இருக்கிறார்கள் என்றாலும் நான்சொல்லவந்தது அவர்களையும் அல்ல. கல்லூரிப்படிப்புப் படிக்காத –ஆனால் சமகால மனிதர்களைப் படித்த- மேதைகளான எழுத்தாளர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3ஆம் வகுப்புத் தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துகளை ஆய்வு செய்த படிப்பாளிகள் பலநூறுபேர் “முனைவர்” (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?
பட்டம் பெற்ற மனிதர்களுக்கான பணிகளும் பதவிகளும் மாறிமாறி வரும், போகும், பதவிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், ஆனால், பதவிகளை வகிக்கும் மனிர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”-குறள் இதைத்தானே சொல்கிறது? பதவிகளுக்காகவே வாழும் மனிதர்களைப் பற்றி ஒரு சொலவடை இருக்கிறது-
தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!”  இது எப்படி இருக்கு? ரொம்ப எதார்த்தமா இருக்குல்ல?
ஆமாம் அவ்வளவுதான், பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும், மனத்தளவில் செத்துப் போவது அதனால்தான்! பதவிகளை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தவாய்ப்பு என்றுநினைக்கும் இடதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருந்தால் கூட “தோழர்” எனும் ஒரு சொல்லுக்குள் அடங்கி நிற்பார்கள். இடதுசாரித் தலைவர்களை மட்டும்தான் இன்னமும் தா.பா.வர்ராராமில்ல?ஜி.ஆர்.பேசுறாராமில்ல? என்று பெயர்ச்சுருக்கத்தைச் சொல்லிச் சாதாரணத் தொண்டர் அழைப்பதைப் பார்க்கலாம். மற்ற கட்சிகளில் வட்டம், மாவட்டங்களையே பெயர் சொல்லி அழைக்க முடியாது! அவர்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர்களாகி விட்டார்கள் என்று அர்த்தம். அதாவது அவர்கள் மனிதர்களாகவே இல்லை என்பது பொருள்!
சிறந்த சிந்தனையாளரும் நல்ல தமிழறிஞருமான சாலய்.இளந்திரையன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதோ அந்தக்கவிதை - 
“எழுதிவைத்த புத்தகத்தில் முழுகிப் போவாய்,
எதிரிருக்கும்மானுடரைபபடிக்கமாட்டாய்,
கழுதைகளும் புத்தகத்தை மேயும், பின்னர
கால்முட்டி இடித்திடவே நடக்கும் தோழா”   என்பது,. புத்தகங்களைப் படிக்கத்தான் வேண்டும். அதற்காகப் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை அதை நடைமுறைப்படுத்த, மனிதர்களுக்காக அந்தச் சிந்தனைகளைப் பயன்படுத்த வேண்டும்.
முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், “முதல்மதிப்பெண்“ மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே லட்சியமாக நினைக்கவைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்ன? எழுத்துகளை மேய்ந்த அஜீரணத்திற்கு மருந்து தேடி, இவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே முடிந்து விடுகிறதே! நல்ல கவிதை தேமா, புளிமா, பண்புத்தொகை, வினைத்தொகைகளுடன் இருக்கலாம். ஆனால், இந்த இலக்கணக் குறிப்புகளை அறிந்து மதிப்பெண் பெறும் பதட்டத்தில், அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகை, ஆழமான அர்த்த்த்தை என்பதை அறிந்துகொள்வதற்குள் படிப்பே முடிந்துவிட்டதே!
இதைத்தான் நமது மகாகவி பாரதி –
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”  என்று சொன்னான். இதுவும் புரியவில்லை என்றால், குளத்துக்குள் எத்தனை நாள் கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும், பயனையும் என்றுதான் சொல்ல வேண்டும்.
டந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், ஒருபாடத்தில் மட்டும்தான் முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன்அம்மா கூறினார். அது போதும் மகளே! முதல்மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம் வீணாக்காதே! உனக்கு மட்டுமல்ல, வழக்குரைஞராக இருக்கும் உன் அக்காவுக்கும், கணினிப் பணியிலிருக்கும் உன் அண்ணனுக்கும் -அவர்கள் படித்தபோது- இதையே சொல்லியிருக்கிறேன்.
பாடப் புத்தகங்களைப் படித்துப்படித்து “உருப்போட்டு“, முதல் மதிப்பெண் எடுப்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாகத் தோன்றும். ஆனால், அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பின்னால் என்ன சாதித்தார்கள் என்று யோசித்துப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த பல பத்தாண்டுகளாக “மாநில அளவில் முதல்மதிப்பெண்“ பெற்ற மாணவர்களுக்கு –அவர்களின் முதல்மதிப்பெண் சாதனைக்காக- பலப்பலப் பரிசுகள் தரப்படுகின்றன. அன்று அவர்கள்தாம் தொலைக்காட்சிகளின் கதாநாயக/நாயகியர்! இனிப்பு ஊட்டுவதென்ன? தோழர்-தோழியர் தூக்கிவைத்துக் கொண்டாட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் கொடுப்பதென்ன?!!! எல்லாம் அந்த ஒரு நாளோடு சரி. அதன் பின் ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே ஆண்டுதோறும் நடந்துவருகிறது அல்லவா?
நன்றாக யோசித்துப் பார்த்தால், பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, “பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநிலமுதன்மை எடுப்பேன்“ என்று வாரிவழங்கும் உறுதிமொழியைப் பெரும்பாலும் –அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக எனக்கு நினைவில்லை.
இப்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேனென்றால், கடந்த சிலபல நாள்களாக, பள்ளியிறுதி(SSLC),, மற்றும் மேல்நிலை(+2) வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்து, செய்தித்தாள்களின் பக்கங்களையெல்லாம் தனியார்பள்ளி கல்லூரிக் கல்விவள்ளல்களின் விளம்பரங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை நீயும் பார்த்திருப்பாய்! மாநில முதன்மை பெற்ற மாணவர்களின் பேட்டிகளால் செய்தித்தாள்கள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இந்த ஆண்டு பத்தாம்வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை வாரிக் குவித்து விட்டார்கள் போ! மாநிலஅளவில் முதல்மதிப்பெண்ணே ஒன்பது பேர்! இரண்டாமிடத்தில் 32பேர் மூன்றாமிடத்திலோ 148பேர்!
இந்த மாணவர்கள் மீண்டும் இதே அளவுக்குச் சாதிக்கா விட்டாலும், நன்றாகவெ படித்து, விரும்பும் உயர்கல்வியை விரும்பும் கல்விநிறுவனத்தில் முடித்து, நல்ல தேர்ச்சிகாட்டி, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, மாவட்டஆட்சியராகவோகூட வந்துவிடலாம் ஆனால், அந்த மதிப்பெண் சாதனையாளர்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்றால்... பெரும்பாலும் ஏமாற்றம்தான்... ஏனெனில், வாழ்க்கையில் வெற்றி என்பது கைநிறையச் சம்பளம் தரும் நல்ல வேலைக்குப் போவது, நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது, குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்வது, கார்வாங்குவது, பங்களா கட்டுவது என்று “செட்டில்” ஆவதில் இல்லை! அது சுயநலமிக்க வாழ்க்கை. அது நமக்குத் தேவையுமில்லை மகளே! இதைத்தானே பாரதிதாசன் மண்டையிலடித்தாற்பேலச் சொன்னார்?
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு                                                        
சம்பாத்தியம் இவையுண்டு தானுண் டென்போன்                                  
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்                                                     
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“ நாட்டின் நல்லகுடிமகனாக, சிறந்தமனிதராக, புகழ் பெறாவிட்டாலும் சாதாரணமாக அடுத்தவர் நினைவில் தோன்றும்போது (IMAGE) நல்ல மனிதராக வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கையின் அடையாளம். இதைத்தான் வள்ளுவப் பெரியாரும், “தோன்றின் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்று சொல்லியிருக்க வேண்டும்.
மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல, நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக்கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும் மாறி 100மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் விரைவில் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்தாலும் போராடி வென்று இந்தச் சமுதாய முரண்பாடுகளைப் புரிந்து கொண்டு சமூக மனிதனாக” நாலுபேருக்கு நன்மை செய்து,சாதாரணமாகவே வாழ்பவன்தான் உண்மையில் வெற்றி பெறுகிறான். தேர்வில் வெற்றிபெறுவது முக்கியமா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமா என்று கேட்டால் கிடைக்கும்  விடை இதை உனக்கு இன்னும் விளக்கிவிடும். ஆனால், முதல் மதிப்பெண் வெற்றி தானே வாழ்க்கை வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று கேட்டால் பெருவெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்கவில்லை என்னும் வரலாற்று உண்மையை நீ புரிந்துகொள்ள வேண்டும். தனது பள்ளிப்படிப்பில் –மற்ற பாடங்களை விடவும் குறைவாகவே வரலாற்றுப்பாடத்தில் மதிப்பெண் எடுத்த காந்திதான் இந்திய வரலாற்றையே தன் வாழ்க்கையால் மாற்றி எழுதினார். இன்னொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கிய லெனின் அந்தப் படிப்புக்குத் தொடர்பில்லாத அரசியலில்தான் சோவியத்து நாட்டு வரலாற்றை மட்டுமல்ல, உலக வரலாற்றையே புதிதாக எழுதிவிட்டார்!
படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கையைத் திட்டமிட்டுக்கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிலர்பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரை கற்றுக்கொண்டு வா. சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே! அப்புறம் –பாடப்புத்தகம் தவிரவும்- என்ன புத்தகம் புதிதாகப் படித்தாய் என்றும் மின் உலகில் புதிதாக எனக்கென்ன கற்றுக்கொடுக்கப் போகிறாய் என்றும் எனக்குச் சொல்லு.                                       
சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...                             
நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...                                
சித்தர்களும் யோகியரும் சிந்தனையில் ஞானிகளும்                                         
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்                                                   
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க...                                        
எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க...
– பட்டுக்கோட்டையார்  பாடல்

அவ்வளவுதான் மகளே! 
அன்புடன் 
உன் அப்பா.           

Thursday, July 18, 2013

ஊனம் மனதிலா ? உடலிலா?



ஒருவன் 
மலையென நிமிர்ந்த தோள் 
விளைந்த மரமெனும் கையும் காலும் ....
ஓடியே உலகை சுற்றும் 
நெஞ்சுரம் கொண்ட மாந்தன்......
கண்ணிலே ஒளிதானில்லை....- அது 
காட்டிடும் வழிதானில்லை.....

மற்றொருவன்...
கையுண்டு .. கண்ணுண்டு 
கால்களில்லை ...
நத்தையும் அவனும் ஒன்று ...
நகர்வதில் உலகை கண்டு .....

நண்பர்களாயினர் இருவருமே..

நடக்க முடிந்தவன் நடந்தான் ..
பார்க்கத் தெரிந்தவன் ...
அவன் தன் தோள்மீது 
அம்ர்ந்து வழிகாட்டிடவே ....... 
நாடெங்கும் ஒலித்தது தமிழ் பாட்டு 
ஞாலம் வியந்தது அதை கேட்டு ...

உடலிலே  அழகோடு 
உள்ளத்தில் குறையோடு 
உள்ளவர் வெறுங்கூடு....
மனதெலாம் நிறைவோடு 
மகிழ்ச்சியில் உறவாடும் 
மனிதருக்கில்லை குறைபாடு ....

உடல் நலக் குறைபாட்டில் 
உள்ளதோ கேடு?
மனநலக் குறைபாடே 
பொதுநலக் கேடு .....

ஊனம் தமிழில்லை 
ஊனம் தமிழர்கில்லை 

மனிதஇனம் தழைத்திடவே 
மனநலம் போற்றுவோம் 
மாற்றுத் திறனாளிகளை

மனதார வாழ்த்துவோம் ......

Monday, July 8, 2013

"ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் " நூல் படித்தேன்


ஆரியம் ஒவ்வொரு காலத்திலும் ஒரு ஆற்றலுள்ள தமிழனை விலைபேசி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும்.கவிஞர் கண்ணதாசனை விலை பேசி அர்த்தமுள்ள இந்துமதம் எழுதச்செய்து சரிந்த இந்து மதத்தை தாங்கிப் பிடித்தனர். இப்போது அதே வரிசையில் எழுத்தாளர் குணா எனப்படும் எஸ் .குணசீலன் என்பவரின் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று தமிழ் தேசிய வியாதிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி .? நூல்....அப்போது போலவே , இப்போதும் , கிளர்ந்தெழுந்து அந்த நூலை அலசி ஆராய்ந்து ...மானமிகு. மஞ்சை வசந்தன் அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் படைத்துள்ள "ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் " நூல் படித்தேன்   தமிழர்தம் இனமான போருக்கு நல்ல ஆயுதம்.தமிழை, தமிழர்களை காக்கும் கவசமே "திராவிடர்" எனும் சொல் , ஆரியம் உள் நுழைய அனுமதிக்காத அரண் அது. இனவுணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள்.இன்னும்..இன்னும்.....248 பக்கங்கள். விலை.ரூ.100.

Monday, May 13, 2013

புதிதாய் பிறப்பெடு....! புது நம்பிக்கை கொள்....!!

தம்பீ.....

புதிதாய் பிறப்பெடு....!
புது நம்பிக்கை கொள்....!!

காலம் தந்ததை ஏற்றுக் கொள்...!

கண்களில்....
 நீர் சேர்க்காதே...!
நெருப்பைப் பற்றவை....!!

இனி

என்ன தரவேண்டும்
என
காலத்திற்கு நீ சொல்...!!

தினமும்
சூரியனுக்குப் பல் துலக்கி விடு...!

நேரத்தை நீ நடத்து...!

பகலினை பாத்தி பிரித்து
நாளெல்லாம் நீ நகர்த்து...!

நிலவோடு உறவாடு...!

நித்திரை வ்ருமுன்
"நாளைக்கு"  ஒத்திகை பார்..!
"இன்றை"  எடைபோடு...!!

உடல் வலி மற..!
உழைப்பினை உறுதி செய்..!!

காலம் நிச்சயம் - உன்
காலில் விழும்..!
வெற்றி மாலை நிச்சயம் - உன்
தோளில் விழும்..!!

Monday, March 4, 2013

எங்கள் பெண்களை பறையனுக்கு கொடுப்போமா?





(பெரியாரின் சொற்பொழிவுகளில் மிக சிறந்தவைகளில் இதுவும் ஒன்று. இச்
சொற்பொழிவில் பலரின் அய்யங்களுக்கு தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்
பெரியார். வாசகர்கள் இச் சொற்பொழிவை ஊன்றிப்படித்து உண்மைகளை உணர்ந்து
தெளிவு பெற வேண்டுகிறோம் --நன்றி )

நாகையில் பொதுக் கூட்டம்

தலைவரவர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!!

தலைவர் அவர்கள் சும்மா இருந்த உங்களை தூண்டிவிட்டு கேள்விகள் கேட்கும்படி
செய்துவிட்டார். நான் வம்பு சண்டைக்கு வரவில்லை. வலியவந்தால் நான் எப்படி
ஓட முடியும்? உங்கள் சந்தேகத்தையெல்லாம் தீர்க்கக் கூடிய தீரனல்ல நான்.
எனக்கு தோன்றியதை, நான் சரியென்று கருதியதை சொல்லுகின்றேன். உங்களுக்கு
சரி என்று பட்டதை ஒப்புக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளி விடுங்கள். அவ்வளவு
தான் சொல்ல முடியும்.

என்னை ஒரு மகாத்மா என்றோ, மனித தன்மைக்கு மீறிய சக்தி உடையவனென்றோ கருதி
ஒன்றையும் கேட்டுவிடாதீர்கள். சாதாரணமான மனிதன் என்று கருதி நான்
சொன்னவற்றில் உங்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் கேளுங்கள். எனக்கு
தோன்றியதை சொல்லுகிறேன். சரி தப்பு என்று கூட என்னிடம் சொல்லாதீர்கள்.
உங்களுக்குத் தோன்றியபடி நினைத்துக் கொள்ளுங்கள். திருந்துங்கள். எனக்கு
ஆட்சேபனை இல்லை, நான் பேசு பவற்றில் தப்பிதங்கள் இருக்கலாம் என்பதில்
ஆட்சேபனை இல்லை. ஆனால் நான் சரி என்று நினைத்ததைச் சொல்ல எனக்கு உரிமை
உண்டு என்பதில் நான் சந்தேகப்படவில்லை.

என்னை பற்றி

நண்பர்களே! முதலில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது
சாப்பாட்டு ஜாகைக்கு போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப்
பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதி இருந்தது, மற்றும் சிலரைப்
பற்றியும் எழுதி இருந்தது.

பதிலுக்கு பதில் எழுதும் முறையிலோ என்னமோ மற்றும் சிலரைப் பற்றியும்
எழுதி இருக்க கண்டேன். தவிர, தலைவர் திரு. குப்புசாமி அவர்களிடம் யாரோ
ஒருவர் நாங்கள் ஜாதியைக் கெடுக்கின்றோம்என்றும் சுயமரியாதைக்காரர்கள்
தங்கள் பெண்களை பறையருக்கு கொடுப்பார்களா?” என்றும் கேட்டார்களாம்.
அதற்கும் பதில் சொல்லுங்கள்என்றார்.

நண்பர்களே! என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள
விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய் சொல்லுகிறேன்.
என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ தெய்வத் தன்மை பொருந்தியவர்
என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதை விட
கருதுவதை விட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள்
என்றும், சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும்
இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது
என்று கருதுகின்றேன்.

ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும்
தெய்வத்தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள்
சொல்லிக் கொள்ளவோ,எனது படத்தை பூஜையில் வைத்து பூஜிக்கவோ, தேரில் வைத்து
இழுக்கவோ, கோவிலில் என் பெயரில் விக்கிரகம் செய்து பூசை உற்சவம் செய்யவோ
நான் கருதவில்லை. அந்த குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி
வெளிப்பட்டவன். ஆகவே, என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள்
ஆவார்கள். எனது கொள்கைகளுக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.

ஏனெனில் வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார்
என்று சொல்லப்பட்ட இழிகுலமக்கள் என்பவர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள்,
நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும், உற்சவம் செய்யப் பட்டும், நாட்டுக்கோ,
அச்சமூகங்களுக்கோ ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கின்றேன். அதன் பேரால்
அவர்கள் கதைகளைச் சொல்லி சிலர் வயிறு வளர்க்கின்றனர். சிலர்
சோம்பேரிகளாய் வாழ்கின்றார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதுபோலவே இராமகிருஷ்ண பரமஹம்சர்’, விவேகானந்த சுவாமிகள்’ , லோகமன்ய
திலக மகரிஷி’, இராமலிங்க வள்ளலார்என் கின்ற சமீபகால மக்களால்
நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்கு
தெரியும். இவர்களை 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100 ல்
ஒருவருக்கு நடந்த நன்மை என்ன? அதுபோலவே இன்று பிரத்தியட்சத்தில்
இருக்கும் காந்தி மகாத்மாவும், திருப்பாலக்குடி மஸ்தானும்
வணங்கப்படுவதும், அவதாரமாகவும், நபியாகவும் கருதப்படுவதும், அதோடு
மாத்திரமல்லாமல் அவர்களது மலம் முதல் சுவாசக் காற்று மலம் வரை
மதிக்கப்படுவது எனக்குத் தெரியும்.

மகாத்மா
திரு, காந்தியை விட மஸ்தான்சாயபுக்கு உண்மையிலேயே மதிப்பு அதிகம்
என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அனேகர் திரு.காந்தியை மனிதனாகவே கருத
வேண்டுமென்றே தங்கள் சுயநலத்திற்கும், ஆதிக்கத்திற்கும், வயிற்று
வளர்ப்புக்கும், திரு காந்தியை ஏமாற்றுவதற்கும் அவரை மகாத்மா என்று
சொல்லுகிறவர்கள், திருப்பாலக்குடிசாயபை உண்மை யிலேயே தெய்வத்தன்மை
பொருந்தியவராக மதித்து, பூஜித்து வருகிறார்கள். எங்கள் ஊரில் இருந்து
அனேக பி.ஏ., பி.எல்., எம்.ஏ., முதலியவர்களும், உயர்ந்த ஜாதியார் பிராமணர்
என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர் களுமே போய் அவரது எச்சிலை
சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். எச்சில் கலந்த தண்ணீரே பழனி பஞ்சாமிர்தம்
போல் டின்னில் அடைத்துக் கொண்டு வந்து இருக்கின்றார்கள். ஆனால் ,
இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கின்றேன்.

திருப்பாலக்குடி சாயபை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணாத காரணத்தால், அவரது
எச்சில் கலந்த தண்ணீரை குடித்து லாபம் பெறலா மென்று கருதி, மக்கள்
மூடர்களாக வேண்டியதாயிற்று. அதுபோலவே, திரு.காந்தியை மகாத்மா என்று
கருதியதால், அவரது காரியத்தால் ஏற்படும் தீமைகளும், நஷ்டங்களும்,
இழிவுகளும் எல்லாம் அதற்குமாறாக கருதப் படவேண்டியதாயிற்று. ஆனால்
என்னுடைய காரியங்களுக்கு அப்படிப் பட்ட விபரீதபலன் ஏற்படவேண்டாம் என்றே
கருதுகிறேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடையவேண்டாம்.
எதையும் நம்ப வேண்டாம். நான் கூறுபவைகளை வெகு ஜாக்கிரதையாய் அலசிப்
பார்க்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஆகையால், நான் தெய்வத்தன்மை
பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்துப்
பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன்என்று சொல்லப் பட்டால் என்
வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும்.

உதாரணமாக, இன்றைய கீதை என்பதை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் இருக்கும்
அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப்பின் முரண், மக்களை மக்கள்
இழிவுப்படுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்கு கின்றதா? ஏன்
விளங்கவில்லை? அதைச் சொன்ன மனிதனை இன்னான் என்றே, எதற்காகச் சொன்னான்
என்றே உணரமுடியாமல் பகவான் சொன் னார்என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக
மக்கள் எல்லாருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு
புகழப்படு கின்றது. அது போலவேதான் புராணங்கள். சாஸ்திரங்கள், வேதங்கள்
என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்படுகின்றன.

ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள்
அதற்குண்டான சரியான மதிப்புப்பெறவேண்டுமானால், நான் அயோக்கியனாகவும்,
பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும், கருதும்படியான பிரசாரம்
செய்பவர்கள் உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்த காரணத்தைக் கொண்டும்
மனிதத்தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்.

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்கு
செருப்படிஎன்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுக வில்லை இங்கும்
இராமசாமிக் கழுதை செத்துவிட்டதுஎன்றும் இராமசாமியின் மனைவி நாகம்மாள்
அவிசாரிஎன்றும் எழுதி இருந்தது. இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய்
இருக்க வேண்டும்என்று எழுதியிருந்ததைப் பார்த்து
சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் இராமசாமிக் கழுதை செத்துப் போய் விட்டது
என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அதுபோலவே, “இராமசாமி மனைவி
கற்புக்கரசிஎன்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம்
மும்மாரி மழை வரச் செய்து பயன் பெற்று இருந்தால் இராமசாமி மனைவி
நாகம்மாள் அவிசாரிஎன்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே,
அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளி லிருந்து ஒரு அளவுக்கு நான்
வெற்றி பெற்று விட்டேன்என்பதை மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே
நான் ஏதாவது மதிப்பு பெற வேண்டுமென்று கருதி இருந்தாலும், நானே, எனக்கு
தீங்கு தேடிக்கொண்டவனே யாவேன். அது எப்படியோ போகட்டும்.

பறையனுக்குப் பெண் கொடுப்பாயா?

ஜாதியை நாங்கள் ஒன்றாக்குகின்றோமாம் ஆம், ஆக்கமுயற்சிக் கின்றோம். அதில்
சந்தேகமில்லை. ஆனால் சீக்கிரத்தில் முடியுமா என்பது சந்தேகம். மனிதஜாதி
ஒன்றாகித்தான் தீர வேண்டும். அதற்கு தடை செய் கின்றவர்கள் அயோக்கியர்கள்,
மடையர்கள் என்று தைரியமாய்ச் சொல்லு கின்றோம். எங்கள் பெண்களை பறையனுக்கு
கொடுப்போமா? என்று கேட்கப்படுகின்றது. இது ஒரு அறிவீனமான கேள்வி, அல்லது
அயோக்கியத்தனமான கேள்வி என்றே சொல்லுவேன். ஏனெனில், எங்கள் பெண்களை
நாங்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடிவாழ செய்யப்போகின்றோமே
யொழிய, எங்களுக்கு இஷ்டமானவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைக்
கொண்டாடுகின்றவர்கள் அல்ல. பெண்களை ஒரு சாமானாக கருதி ஒருவருக்கு
கொடுப்பது என்கின்ற முறையை ஒழிக்க முயற்சிக் கின்றோம்.

நண்பர்களே! நாங்கள் ஆதிதிராவிடர்களைப் பற்றி பேசும் போது பார்ப்பனர்கள்
மனவருத்தமடைவதில் அருத்தம் உண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதார்
மனவருத்தமடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. அது வெறும் முட்டாள்தனமும்,
மானமற்றதன்மையுமேயாகும். ஏனெனில், நமது சமூகத்தில் பார்ப்பனர் என்கின்ற
கூட்டத்தாராகிய 100 -க்கு 3வீதமுள்ள ஜனத்தொகை நீங்கி, மற்ற ஜனங்களுக்கு
இந்த நாட்டில் சூத்திரன், (அடிமை) ஆதிதிராவிடன் (பறையன்) என்கின்ற
பட்டமில்லாமல் வேறு எந்தப் பட்டத்தோடாவது யாராவது இருக்க முடியுமா?
இருக்கின்றார்களா? என்று கருதியும், அனுபவத்தையும் கொண்டு பாருங்கள்.
சூத்திரன் என்கின்ற கலத்தில் நீங்கள் பதியப்பட்டிருப்பதில் உங்களுக்குச்
சிறிதாவது மானம் இருந்தால் பறையன் என்கின்ற பட்டம் போகவேண்டுமென்பதில்
கடுகள வாவது வருத்தமிருக்குமா?என்று கேட்கின்றேன்.

பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய் விடும் என்று
கருதினீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களே யாவீர்கள்.

மற்றும், பேசப்போனால் பறையன் சக்கிலி என்பதற்கு இன்னார் தான்
உரிமையென்றும், அது கீழ் ஜாதியென்பதற்கு இன்னது ஆதாரமென்றும்
சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில்லை.
ஆதலால், அதாவது சீக்கிரத்தில் மறைந்து விடக்கூடும். உங்கள்
சூத்திரப்பட்டத்திற்கு கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம்,
இதிகாசம், கோவில் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி
அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப்பட்.டம் கீழே
இறங்காது. ஆகவே, யாருக்காவது மான உணர்ச்சி இருந்திருந்தால் நீங்கள் ஜாதி
ஒன்றாக்குகின்றீர்களேஎன்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள். ஆகவே,
ஆதிதிராவிடர் நன்மையைக்கோரி பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும்
முயற்சிகளும், ஆதிதிராவிட ரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லாருடைய
நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.

நான் மாறுவது

நான் அடிக்கடி கொள்கைகளில் மாற்றமடைவதாக சொல்லப்படுகின்றது வாஸ்தவமாக
இருக்கலாம். நீங்கள் ஏன் அதை கவனிக்கின்றீர்கள்? ஒரு மனிதன் அவன்
பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன்
என்று சொல்லப்பட்டால் அவன் மகாயோக் கியனா? என்று கேட்கின்றேன். எந்த
மனிதனும் ஒரே நிலைமையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன்
ஆசைப்படுகின்றீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன லாபம்? மாறுதல்
முற்போக்குள்ளதா? பிற்போக்குள்ளதா? அதனால் மக்களுக்கு நன்மையா? தீமையா?
என்பன போன்ற வைகளை கவனிக்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும். மற்றும்,
பொது நன்மையை உத்தேசித்து கஷ்டப்படுகின்ற மக்கள் நன்மையை உத்தேசித்து
மாறினானா? அல்லது சுயநலத்திற்கு அக்கிரமமான லாபமடைவதற்கு மாறினானா? என்று
பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி,
கவலையாளி ஆகியவர்கள் மாற வேண்டியது அவசியமாகலாம். அதைப்பற்றிய கவலை ஏன்?
யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்கு புத்தியும் கண்ணும்
சரியாய் இருந்தால் மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்து விடாது. நான்
பல தடவை மாறி இருக்கலாம். பல குட்டிக்கரணங்கள் போட் டிருக்கலாம்.
சுயநலத்திற்காகவும் குட்டிக்கரணம் போட்டிருக்கலாம். பச்சோந்தியாய்
இருக்கலாம். அதனால் உங்களுக்கென்னகெடுதி? நாடகக் கொட்டகையில் நாடகம்
பார்க்கின்ற போது ஒரு மனிதன் எத்தனை வேஷம் மாறி மாறிப் போட்டு நடிப்பதை
நீங்கள் காசு கொடுத்து பார்த்து விட்டு, நடித்தவனையும் புகழ்ந்துகொண்டு
போகின்றீர்களா? அல்லது இல்லையா? என்பதை நினைத்துப் பாருங்கள். அதனால்
நீங்கள் ஏமாந்து போய் விடுகின்றீர்களா? அதுபோல் எங்களை நினைத்து கொண்டு
வந்து நாங்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு போங்கள். பிறகு, உங்கள் புத்திக்கு
பட்டதை ஒப்புக் கொள்ளுங்கள். மற்றதை தள்ளிவிடுங்கள். இன்றைய தினம் நான்
சொல்லுபவைகள் கூட எனக்கு முடிந்த முடிவா என்பது சந்தேகம் தான். அன்றியும்
உங்களுக்கு இன்றைய நிலைமையில் கால வர்த்தமானத்தை பொறுத்தவரையில்
இவ்வளவுதான் சொல்லலாம் என்று கருதிக்கொண்டு சில விஷயங்களில் அளவாகவே
பேசுகின்றேன் என்றும் சொல்லலாம்.

கோயில் கட்டிய மக்கள் கோயிலை இடிக்க வேண்டியவர்கள் ஆகி விடுவார்கள்.
அஹிம்சை பேசுபவர்கள், பலாத்காரத்தை பேசவேண்டியவர் களாகி விடுவார்கள்.
இராஜவிசுவாசிகள் இராஜ துரோகிகள் ஆகிவிடுவார்கள். திருடக்கூடாது
என்பவர்கள் கொள்ளை அடிக்கச் சொல்லுவார்கள். இப்படியாக அபிப்பிராயங்கள்
மாறிக் கொண்டுபோகலாம். இவற்றையெல் லாம் அபிப்பிராயங்கள் மாறியதாலேயே
குற்றம் என்று சொல்லிவிட முடியாது. தங்களை நல்ல சூத்திரர்கள் என்று
சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் கால்களைக் கழுவிய தண்ணீருக்கு பவுன்
கொடுத்து சாப்பிட்டவர்கள், ‘இன்று சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டடி
என்றும் பார்ப்பனர்கள் ஜாக்கிரதைஎன்றும் ஏன் சொல்லுகின்றார்கள்? இந்த
மாற்றத்தால் இப்படிச் சொன்னவர்கள் அயோக்கியர்களாகிவிட முடியுமா? தவிர
சூத்திரன் பணம் வைத்திருந்தால் பிராமணர்கள் பலாத்காரத்தால்
அதைப்பறித்துக் கொள்ளலாம்என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி
இப்பொழுது வெள்ளையர் தர்மத்தில் தந்திரங்களினாலும் சூக்ஷிகளாலும்
மாத்திரம் தான் பறித்துக் கொள்ளலாம்என்கின்றதான மாறுதல்
ஏற்பட்டுவிட்டது. நாளை ஒரு சமயம் சமதர்ம காலத்தில் பிராமணன் (சரீரத்தில்
பாடுபடாத வன்) சொத்து வைத்திருந்தால் மற்றவர்கள் பலாத்காரத்தில்
பிடுங்கிக் கொள்ளலாம்என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி
மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவுக்கும், நாட்டின் முற்போக்குக்கும்
ஏற்றார்போல் நடந்து தான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று
சொல்லப்படுவதில் வெட்கப்படவில்லை. நாளை நான் எப்படி மாறப் போகின்றேன்
என்பது எனக்கே தெரியாது. ஆதலால், நான் சொல்வதை கண்மூடித்தனமாய்
நம்பாதீர்கள்.

தேசீயத்திற்கு விரோதியாவது

மற்றும் நான் தேசீயத்திற்கு விரோதியென்று சொல்லப்படுகின்றது.
கடவுளுக்கும், மதத்திற்கும் விரோதியான ஒருவன் கேவலம் தேசீயத்திற்கும்
விரோதியாவது ஒரு அதிசயமல்ல. மற்ற யாருடைய தேசீயத்திற்கும் நான் விரோதியா?
அல்லது இல்லையா? என்பது விவகாரத்திற்கிடமான தாயிருந்தாலும்,
உயர்திரு.காந்தியவர்களின் தேசீயத்திற்கு நான் சரியான விரோதியேயாகும்.
அதிலும் பார்ப்பனீய தேசீயத்திற்கு எவ்வளவு விரோதி யோ அதை விட பலமடங்கு
அதிகமான விரோதியேயாகும். கராச்சி நவ ஜவான் வீரர்கள் காந்தி வீழ்க!
காந்தியம் வீழ்க!!என்று சொல்வதற்கு 2,3 வருஷத்திற்கு முன்பிருந்தே நான்
காந்தி தேசீயத்திற்கு விரோதியாகி இருக்கின்றேன். காந்தீயம் ஒழிந்தாலொழிய
இந்த நாட்டிற்கு விடுதலையோ, சமத்துவமோ, சுயமரியாதையோ இல்லை என்று கருதிக்
கொண்டு இருக் கின்றவன். காந்தி தேசீயமெல்லாம் வெள்ளைக்கார ஆக்ஷியைப்
பிடுங்கி, பார்ப்பனனிடமும், பணக்காரனிடமும் கொடுத்து, வருணாச்சிரம ஆட்சி
ஆக்க வேண்டும் என்கின்ற ஒரே கொள்கை கொண்டதுதான். உதாரணம் வேண்டுமானால்
அவரது கதர் தத்துவத்தையும், கிராம முன்னேற்றத் தத்துவதையும் நன்றாய்
கவனித்துப் பார்த்தால் அப்பொழுது அவைகள் வருணாச்சிரமத்தை ஆதரிப்பதே ஒழிய
வேறில்லை என்பதை விளக்கும். அன்றியும், திரு.காந்தியே வருணாச்சிரமத்தை
நிலைநிறுத்தவே சுயராஜ்யத்தை வேண்டுகிறேன்என்பதுவாக பல தடவை சொல்லி
இருக்கிறார். அவர் எண்ணமெல்லாம் இந்தியாவைப் பழங்கால நிலைமைக்கு கொண்டு
போக வேண்டுமென்பதேயாகும். இந்தக் கருத்தை உள்ளே வைத்துக் கொண்டுதான்
அதற்கு இடையூறாயிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி மீது மக்களுக்கு விரோதம்
ஏற்படும்படி நடிக்கின்றார். ருஷிய ஆட்சியை விட, மற்றும் ஏதாவது ஆட்சியை
விட, பிரிட்டிஷ் ஆட்சி மோசமானதாக இருக்கலாமேயொழிய இராமன், அரிச்சந்திரன்,
கிருஷ்ணன், மனு, சேர சோழ பாண்டியன் முதலியவர்களின் ஆட்சியை விட 1000
பங்கு வெள்ளை யாட்சி மேலானதென்றே சொல்லுவேன். உதாரணமாக,
திரு.இரவீந்திரநாத் டாகூர் அவர்கள் முந்தாநாள் பேசியதை கவனியுங்கள்.
பகுத்தறிவின்மை, மூட நம்பிக்கை, ஜாதிப்பிரிவு, மதத்துவேஷம் முதலியவைகள்
தான் நமது தேசத்தின் பெரும் விரோதிகள். அன்னிய ஆட்சியை விட அவை கொடியன.
இவை ஒழிந்தாலொழிய பூரண சுயேச்சை என்பது கிடையாதுஎன்று சாந்தி
நிகேதனத்தில் இருந்து உலக மக்களுக்கு சேதி அனுப்பியிருக்கின்றார். திரு.
காந்தி தேசீயம் இந்தியாவின் மேற்படி விரோதிகளை ஒழிக்குமா? அல்லது அதை
கொடுமையினதல்லாத அன்னிய ஆட்சியை ஒழித்து, அக்கொடுமைகளை நிலை நிறுத்துமா?
யோசித்துப் பாருங்கள். தேசீயம் என்று சொல்லிவிட்டதாலேயே பாம்புப்
புற்றில் கையைவிட வேண்டுமா? நெருப்புக்கு முத்தம் கொடுக்க வேண் டுமா?
என்று கேட்கின்றேன். சகோதரர்களே! நமது கொள்கை காந்தி தேசீய மாகிய
காங்கிரசுக்கு விரோதமானதேயாகும். வருணாச்சிரமத்திற்கும், முதலாளி
தத்துவத்திற்கும் விரோதமானதேயாகும். மேலும், அவற்றிற்கு
அனுகூலமாயிருக்கும் கடவுள், மதம் என்பனவாகியவற்றிற்கும் விரோத மேயாகும்.
இன்னும் எங்குபோய் நிற்கும் என்று என்னாலேயே சொல்ல முடியாது. ஆகவே,
நீங்கள் எதற்கும் உங்கள் பகுத்தறிவை தைரியமாய் உபயோகியுங்கள்.

-----------------------------ாகையில் 03.10.1931 அன்று நடைபெற்ற பொதுக்
கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை. குடி அரசு” - 11.10.1931
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!