Saturday, October 12, 2013

எண்ணிப்பார் . . . . கோபியாமல்! அறிஞர் அண்ணா

எண்ணிப்பார் . . . . கோபியாமல்!அறிஞர் அண்ணா
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக், கண்டுபிடிக்கும் கருவி
டார்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராமபோன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்குள் போகக் கருவீ
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் வரைபோக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருகக மனிதனின் உழைப்பைக் குறைக்கம் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம்.
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை
கொண்டாடாதவர்கள்!!
அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இந்தியாவுக்கு வழிகண்டுபிடித்த வாஸ்கோடிகாமா இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம்,
ஆயுத பூசை
செய்தவர்களல்ல! நவராத்திரி கொண்டாடினவர்களல்ல!
நூற்றுக்கு நூறு என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே
சரஸ்வதி பூசை
இல்லை!
ஓலைக்குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.
தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை.
கற்பூரம் கூட, நீ செய்ததில்லை.
கடவுட் படங்களுக்கு அலங்காரத்துககுப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய்,
சரஸ்வதி பூசை
ஆயத பூசை!!
ஏனப்பா? கொஞ்சம் யோசிக்கக் கூடாதா? மேனாட்டான், கண்டுபிடித்துத் தந்த அச்சு யந்திரத்தின் உதவி கொண்டு, உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்சிறாயே!!
ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய அதிசயப் பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்கத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை, அப்படித்தான், கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்.
உன், பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ய நூற்களை எல்லாம்கூட, ஓலைச்சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு யந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!
எல்லம் மேனாட்டான், கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு, அவைகளை, உபயோகப்படுததிக்கொண்டு, பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயேஇ சரியா? யோசித்துப பார்!
சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது - என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே. அது, சாரதர் சர்விஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது ராய்ட்டர் சர்விஸ் - தந்தி முறை - அவன் தந்தது!
தசரதன் வீட்டிலே டெலிபோன் இருநததில்லையே!
ராகவன், ரேடியோ கேட்டதில்லை.
சிபி, சினிமா பார்த்ததில்லை!
தருமராஜன், தநிந்திக்கம்பம் பார்த்ததில்லை!
இவைகளெல்லாம், மிகமிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது - அனுபவிக்கிறோம்.
அனுபவிக்கும்போதுகூட, அந்த அரிய பொருளைத் தந்த அறிவாளர்களை மறந்துவிடுகிறோம். அவர்கள்
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்துவிடுகிறோம். ரேடியோவிலே ராகவனைப்பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும், கேட்டும, பார்த்தும், ரசிக்கிறோம். இது முறைதானா?
பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த
சரஸ்வதி பூசை
ஆயுத பூசை
நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவன், நாம், ஆச்சரியப்படும்படியான, அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருஷர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்துவிட்டார்களே, என்று யோசித்தால் முதலில் கோபம் வரும், பிறகு வெட்கமாக இருக்கும், அதையும் தாண்டினால், விவேகம் பிறக்கும்.
யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!
சினிமாவிலே, முன்பு ஓர் வேடிக்கை பார்த்தேன், கவனத்திற்கு வருகிறது, சொல்கிறேன்.
ஒரு இரும்புப் பெட்டி! அதிலே, என்ன வைத்திருக்கிறான் என்று எண்ணுகிறாய்? வைரம், வைடூரியமா, தங்கம், வெள்ளியா? இல்லை! கத்திரி, வாழை, கீரைத் தண்டு, இப்படிப்பட்ட சாமான்களை!
ஒரு லோபி! அவன் இரும்புப் பெட்டியிலே, வைத்திருக்கிறான், இந்தச் சரக்குகளை. மனைவி, சமயலுககாக வந்து கேட்கும்போது, இருமபுப் பெட்டியை ஜாக்கிரதையாகத் திறந்து கத்தரி ஒன்றும் வாழையில் கால்பாகமும், தருகிறான்! பிறகு பெட்டியைப் பூட்டி விடுகிறான்.
காய்கறியின் விலை என்ன, அதை வைத்துப் பூட்டி வைத்திருக்கிறானே இரும்புப் பெட்டி, அதன் விலை எவ்வளவு!
அவன் யோசிக்கிறானா அதை.
அதுபோலத்தான், மேனாட்டு, அறிஞர்கள் கொடுத்த இரும்புப்பெட்டி போன்ற விஞ்ஞான சாதனத்துககுள்ளே, நாம், நமது பழைய கருததுக்கள், முறைகள், பூசைகள் ஆகிய சில்லறைகளை வைத்துக்கொண்டு காலந்தள்ளுகிறோம்.
எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, சினிமாவிலே, இந்தக் காட்டிசியைக் கண்ட உடனே கொட்டகையிலே இருந்தவர்கள், அட! பைத்தியக்காரா! என்று கேலி செய்தனர்.
நமது போக்கைக் கண்டு, உலகக் கொட்டகையிலே எவ்வளவு பேர், கேலி செய்தார்களோ? யார் கண்டார்கள்? செய்யாமலா இருப்பார்கள்?
நாம் கட்டிக் கழித்த துணியை, ஒட்டுப்போட்டு, ஓரம் வைத்துப் போட்டுக் கொண்டு ஒரு ஆள், நம்மிடமே வந்துநின்று, புதுசா ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன் - அருமையான துணிகள் இருககு நம்ம கடைக்கே வாங்க - என்று நம்மையே அழைத்தால் நமக்கு எப்படி இருக்கும் . . . .?
(திராவிடநாடு)

Sunday, September 22, 2013

பெரியார் 1000 வினாடி வினா எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

மதுரை மாநகர் ,மதுரை புறநகர் மாவட்டங்களுக்கான
பெரியார் 1000  வினாடி வினா எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  பரிசளிப்பு விழா மதுரை, , , , வடக்கு மாசி வீதி,   தேவசகாயம் நடுநிலைப் பள்ளியில் 22.09.2013 ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு        மண்டல  தி.க.தலைவர்    வே. செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். 
   ப.க.,மதுரை மாநகர்  மாவட்ட தலைவர் , சுப.முருகானந்தம்   அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

மதுரை அனுப்பானடி   மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி  தலையாசிரியை, திருமதி .பிரேமா கண்ணன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
பொ .நடராஜன் நீதியரசர் ஒய்வு ,செ .முனியசாமி மாவட்டத் தலைவர் தி.க.,க.அழகர் மாவட்ட செயலாளர் தி.க.,பொ .பவுன் ராசா தலைவர் .மதுரை புறநகர் மாவட்ட தி.க.,மன்னர்மன்னன் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்  அ.வேல்முருகன் , மதுரைபுறநகர் மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் , தமிழ் மக்களுக்கான அவரது தொண்டின் சிறப்புக்களையும் எடுத்துரைத்தனர்.



நிறைவாக,
பகுத்தறிவாளர் கழக  மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள்  கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துத்துரைத்து தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் என்று அன்பழைப்பு விடுத்து தமிழர் தலைவர் கி.வீரமணி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோருடைய கல்வி சார்ந்த கருத்துக்களை விளக்கிச் சொல்லி தனது உரையை நிறைவு செய்தார்.
சிறப்பு விருந்தினர் திருமதி.பிரேமா கண்ணன் அவர்களுக்கு நினைவுப் பரிசு -புத்தகம் வழங்கப்பட்ட்து.
அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்ட்து. ப.கதோழர்.செ.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இடவசதி கொடுத்த பள்ளியின் ஆசிரியர் திரு.அருள்மாறன் அவர்களுக்கு   பாரட்டும் நன்றியும் கூறி விடை பெற்றோம்.            வெற்றி பெற்ற மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.
நிகழ்ச்சியில் மு.கனி. மதுரை மாவட்ட தி.க இளைஞரணி தலைவர் பேக்கரி கண்ணன், தோழர் வேலுத்துரை ஆகியோர் சிறப்பாக கலந்துகொண்டு ஒத்துழைத்தனர்.



                 



Wednesday, August 7, 2013

தேவதாசிகள் இன்று இல்லையே எனக் கவலைப்படுவோருக்கு.. … . -கோவி.லெனின்

    வலைகள் பலவிதம். நடிகை சொர்ணமால்யாவின் கவலை அதில் ஒருவிதம். அவருடைய பர்சனல் கவலைகள் பல இருக்கலாம். அது பற்றி நமக்குக் கவலையில்லை. பரதநாட்டியம் பயின்று டாக்டர் பட்டமும் பெற்ற கலைஞர் அவர். அதனால் அவர் கவலைப்பட்டது, பரதக் கலை பற்றித்தான்.
    ஒரு  கல்லூரியில் பேசும்போது, “முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள்” என்ற அர்த்தத்தில் கவலையோடு பேசியிருக்கிறார். அதாவது, தேவதாசி என்கிற பழங்கால முறை தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட்டதால், பரதக் கலை வளராமல் போய்விட்டது என்று கவலைப்பட்டிருக்கிறார் சொர்ணமால்யா.
    தேவதாசி முறை என்பது என்ன? அந்தக் காலத்தில் கோவில்களில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துப் பெண்களைக் கடவுள் தொண்டு என்ற பெயரில் தேவதாசிகளாக நியமித்துவிடுவார்கள். சதுராட்டம்  என்ற பெயரில் அவர்கள் கோவில் நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடுவார்கள். பெயர்தான், கடவுள் தொண்டு. நடைமுறையோ  வேறு. கோவிலை  நிர்வகிப்பவர்களும் ஊர்  பெரிய மனிதர்களும் தங்கள் விருப்பத்திற்கு அந்தப் பெண்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.
    தேவதாசியாக ஒரு பெண் நியமிக்கப்படுகிறார் என்றால் அந்தப் பெண்ணின் பாட்டியும் தேவதாசியாக இருந்திருப்பார். அதன்பின் அவரது அம்மாவும் தேவதாசிதான். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் பிறந்தாலும் அதே நிலைதான். கடவுளின் பெயராலும் ஆன்மீகத்தின்  பெயராலும் பரம்பரை பரம்பரையாக பாலின இழிவையும் பாலியல் கொடுமையையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். சமுதாயத்திலும் ‘தாசி’கள் என அவர்களுக்கு இழிவான பெயரே இருந்தது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராக வெளிப்பட்ட அவர்களின் குமுறல்கள் அடக்கப்பட்டன. அல்லது நீடிக்க முடியாமல் அடங்கிப்போயின.
    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) உள்ளிட்டவர்கள் இந்த தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பல தலைவர்களின் ஆதரவைப் பெற்றனர். குறிப்பாக, பெரியாரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இந்தியாவில், அன்றைய சென்னை மாகாணம் என்பது இன்றைய தமிழகம், ஆந்திரா, கேரளாவின் சில பகுதிகள், ஒரிசா  எல்லை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்த மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்துவந்தது. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலெட்சுமிதான், சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
    சட்டமன்றத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி, தேவதாசி முறையை சட்டப்பூர்வமாக ஒழிப்பதற்கான மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த மசோதாவைப் பற்றியும் அதனை நிறைவேற்றுவது பற்றியும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தார். எனினும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
    மசோதாவை எதிர்த்துப்பேசிய காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, “தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய  காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.
    அதற்குப் பதிலளித்த  டாக்டர் முத்துலெட்சுமி, “ஒரு குலத்தில் மட்டும்தான் தாசிகள் தோன்ற வேண்டுமா? இது ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றால், அதை ஒரு சமுதாயத்துப் பெண்கள்தான் செய்ய வேண்டுமா? அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது? என்று சத்தியமூர்த்தியைப் பார்த்து சூடாகக் கேட்டார். கடுமையான எதிர்ப்புக்கு நடுவே சென்னை மாகாண சட்டமன்றத்தில் தேவதாசி ஒழிப்பு மசோதா நிறைவேறியது. இதன் மூலமாக, குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை பரம்பரை பரம்பரையாக கோவிலில் தேவதாசிகளாக்கி, பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் வழக்கம் ஒழிந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களில் இது மிகவும் முக்கியமானது.
    கோவிலின் பெயரால், பாலியல் கொடுமையை சமூக வழக்கமாக்கி வைத்திருந்த ஆதிக்க சக்திகளிடமிருந்து பெண்களை மீட்டது தேவதாசி ஒழிப்பு மசோதா. தேவதாசி முறையை ஒழித்தால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும் என அன்று சத்தியமூர்த்தி பேசினார். அதே கருத்தைத்தான் இன்று ‘கவலை’யோடு பேசியிருக்கிறார் சொர்ணமால்யா.

    சென்னை மாகாணத்தில் அப்போதே தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் அது தொடர்ந்தது. சில சமூகங்களில் வெவ்வேறு பெயர்களில் அது கடைப்பிடிக்கப்பட்டது. பருவமடைந்த பெண்களை கோயிலுக்குத் தேவதாசியாக்கி அங்கு ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் இச்சைக்குப் பலியாக்கும் வழக்கம் தமிழகத்தின் எல்லை உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்வதை ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும், படைப்பாளிகளும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தபடியே இருந்தனர். இந்த  வழக்கத்தை முற்றிலும்  ஒழித்து, அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் பல மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றன. மும்பை அதற்கோர் உதாரணம்.
    ஸ்வேதா கட்டிக்கு இப்போது 18 வயதுதான். மும்பையின் பிரபல சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் ஒரு  தேவதாசிப் பெண்ணின் மகளாகப் பிறந்தவர். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தேவதாசியாக்கப்பட்டு, தன் அம்மா படும் பாலியல் கொடுமையைக் கண்டு ஸ்வேதா பயந்தார். அவரது தாய் வந்தனாவும் தனக்கு நேரும்  கொடுமைகள்  தன் மகளுக்கு நேர்ந்துவிடக்கூடாது என நினைத்தார்.
    அருகிலுள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஸ்வேதா, சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படித்துவந்தார்.  காமத்திபுராவில் உள்ள இப்படிப்பட்ட பெண்குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தும், ‘அப்னே ஆப்’ என்ற அமைப்பு,  ஸ்வேதா நன்றாகப் படிப்பதை அறிந்து, அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்தது. அந்தப் பள்ளியிலேயே அவர் மேல்நிலை வகுப்புவரை நன்றாகப் படித்து தேர்ச்சியடைந்ததால், அப்னே ஆப் அமைப்பு ஸ்வேதாவை ‘க்ரண்ட்டி’ என்ற தொண்டு நிறுவனத்திடம் அழைத்துச்  சென்றது. நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் தன் இலட்சியக்கனவு என்று ஸ்வேதா தெரிவித்தார். பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்களிடமிருந்து உதவி பெற்றுத் தரும் நிறுவனமான க்ரண்ட்டி, ஸ்வேதாவுக்கு உதவ முன் வந்தது.
    அந்த  நிறுவனம் எடுத்த முயற்சிகளால், அமெரிக்காவுக்கு சென்று படிக்கும் வாய்ப்பை தற்போது பெற்றிருக்கிறார் ஸ்வேதா. உலகம் முழுவதுமிருந்தும் 200க்கும் அதிகமானவர்கள் ஸ்வேதாவின் கல்விக்காக நிதியுதவி அளிக்த்துள்ளனர். அதன் மூலமாக அமெரிக்காவில் உளவியல் துறையில் படிக்கப் போகிறார் ஸ்வேதா. அவருக்கு சக மாணவிகளின் வாழ்த்துகள் குவிந்தபடி இருக்கின்றன.
    ஸ்வேதாவின் அம்மா வந்தனா, “அவள் அங்கே என்ன படிக்கப்போகிறாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவள் என்கூட இருக்கப்போவதில்லை என்பது புரிகிறது. ஆனாலும்  அவளது நிலை கண்டு நான் மனரீதியாக பலமடைந்துள்ளேன்” என்று சொல்லியிருக்கிறார். தன்னுடன் தனது குடும்பத்தைப் பீடித்திருந்த இந்த ‘தேவதாசி’ கொடுமை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் தன் மகள் இந்தப் பாழுங்கிணற்றில் விழவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதுபோல இருந்திருக்கிறது வந்தனாவின் குரல்.
   அன்று மூவலூர் ராமாமிர்தமும், டாக்டர் முத்துலட்சுமியும் இழிவுபடுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர்கள். அந்த இழிவை எதிர்த்துப் போராடினார்கள்.  வென்றார்கள். ஆனால் சத்தியமூர்த்தி போன்றவர்கள், “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும்” என்றார்கள். இன்று வந்தனாவும் அவர் மகள் ஸ்வேதாவும் தேவதாசி குலத்திலிருந்து மீள்வதற்குப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் சொர்ணமால்யா போன்றவர்கள், “தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதால் பரதநாட்டியம் வளரவில்லை” எனக் ‘கவலை’ப்படுகிறார்கள். தேவதாசிகள் என்ற முறை எதற்குப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதற்கு ரத்தமும் சதையுமாக சாட்சிகளாக இருக்கிறார்கள் வந்தனா போன்றவர்கள்.
    சத்தியமூர்த்தியைப் பார்த்து டாக்டர் முத்துலட்சுமி, “கடவுளுக்கும் கலைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?” என்று சட்டமன்றத்தில் சத்தமாகக் கேட்டார். சொர்ணமால்யாக்களைப் பார்த்து வந்தனாவும் ஸ்வேதாவும் கேட்காமல் கேட்கிறார்கள்.

Monday, August 5, 2013

"இளமையில் காதல்"

"இளமையில் காதல்" 
 

இன்னமும் 
உன்னை நான் 
இப்படி அழைக்கலாமா ..... 

அடீ ....... 

"இளமையில் கல்" என்பதை 
நீயும் நானும் 
"இளமையில் காதல்" 
என்றல்லவா தவறி வாசித்துவிட்டோம் ..! 

பாட சாலைகளுக்குள் 
அலைய வேண்டிய நம் விழிப்புறாக்களை 
நாம் 
திரையரங்குகளிலல்லவா 
மேய விட்டோம்....!! 

பேருந்து நிறுத்தங்களில் 
நாம் எப்போதும் 
பேருந்துகளுக்காக மட்டுமே 
காத்திருந்தது இல்லையே ...? 

கல்லூரி நூலகங்களில் 
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 
புத்தகங்களின் ஊடே 
எத்தனை தடவைகள் 
நம் கைகளை இணைத்துக்கொண்டு 
பிரிக்க முடியாமல் தவித்திருக்கிறோம் ...! 

நீயும் நானும் 
கடிதங்கள் எழுதியது போக 
மீதியிருந்த பக்கங்களில் மட்டும் தானே 
பாடங்களை எழுதினோம் ..? 
'விழி'மூலகங்கள் 
'பருவக்' குடுவையுள் 
'கால' இரசாயண மாற்றத்தால் 
'காதல்' வாயுவை பிரசவித்ததாக 
நாம் கவிதை எழுதிக் கொள்ளத்தானே 
நம் பாடங்கள் 
நமக்குப் பயன்பட்டன .....!! 

காலை எழுந்தவுடன் SMS....-பின்பு 
கனிவு தரும் நல்ல பேச்சு 
மாலை முழுதும் பூங்காவில் -என 
வழக்கப்படுத்திக் கொண்டல்லவா 
நாம் நாட்களை விரட்டியடித்தோம் ...? 

இத்தனைக்கும் பின் .... 

நம் பெற்றோரின் 
மறுப்பு மகுடிச் சத்தம் கேட்டவுடன் 
நாம் ஏனப்படி 
பெட்டிப் பாம்புகளாய் அடங்கிவிட்டோம்...? 

'மண்ணோடு மண்ணாக போனாலும் 
என்னுயிர் 
உன்னோடு மட்டுமே உலவுமென' 
நம் சபத வாக்கியங்கள் 
கூறுவதால் தானோ 
நம் 
உடல்களை 
வேறு இருவருக்கு 
பந்தப்படுத்திக் கொண்டுவிட்டோம் ....? 
நாம் .. 
நம் குழந்தைகளுக்கு கூட 
அப்போதே 
பெயர் தேர்வு 
செய்து வைத்திருந்தோமே ... 
ஆனாலும் இன்று ... 
உன் குழந்தையும் 
என் குழந்தையும் 

அதோ கண்ணா மூச்சி விளையாடிகொண்டிருக்கின்றன....! 

நம் தோல்விக்குக் காரணம் 
'நம் பெற்றோரும் , சாதியும் , 
சமூக அந்தஸ்தும்' 
என்று மட்டுமா நீ 
தீர்ப்பெழுதப் போகிறாய்...? 

நாம் 
பெற்றோர்களின் 
கால்களினாலேயே 
நடக்க எண்ணினோம் .... 
அவர்களின் 
தோள்களின் சுமையை 
இறக்குவதற்கு பதிலாக 
மனங்களில் மீண்டும் 
பிரச்னை மூட்டைகளை ஏற்றினோம் ... 

ஆம் .... 
சொந்தக்காலில் 
நிற்ப்பதற்கு முன்னே 
நாம் "சொந்தம்" தேடிக் கொள்ள 
புறப்பட்டிராவிட்டால் 
தோல்வி 
நம்மோடு 
சொந்தம் கொண்டாடிட வந்திருக்காதன்றோ...?


Sunday, August 4, 2013

நட்பே ...!

நட்பே ...! 

எங்களுக்கு 
காலம் செய்த 
ஒரே ஒரு நல்ல கைங்கரியமே...! 
நாங்கள் 
சோதனைக் கடலில் 
துடிக்கும் போதெல்லாம் 
எங்களுக்கு 
வெற்றிக்கரையை காட்டுகின்ற 
கலங்கரை விளக்கு நீதான்....!! 
நீ எங்கள் 
சிறு வயதில் தொடக்கம்... 
ஆனால் 
இன்று எங்கள் 
உயிர்களும் உன்னுள் அடக்கம்...! 
எங்கள் சிந்தனைகளின் கருவறையே...! 
எங்களுக்குள் 
எதையும் எப்போதும் 
எங்களால் 
"செய்ய முடியும்" என்றிருகின்ற 
தன்னம்பிக்கையும் நீதான் ...! 
உன் கைகளின் அரவணைப்பில் தான் 
எங்கள் மீதே எங்களுக்கு 
நம்பிக்கை பிறக்கின்றது ... 
உன் கால்களின் சுவடுகளில் தான் 
எங்களின் பயணம் தொடர்கின்றது...! 
உன் 
அன்புப் பிணைப்பினிலே 
ஆயிரம் தாய்களின் பாசம் புரிகிறது ... 
உன் ஆலோசனைகளிலோ 
கோடித் தந்தைகளின் 
அனுபவம் தெரிகிறது .... 
எங்களை மனிதர்களாக்கிய புனிதனே...! 
உனது அறிமுகத்துக்கு பிறகுதான் 
மனிதர்களையே நாங்கள் 
சரியாக புரிந்துகொள்ள பழகினோம் ...! 
நிராதரவான பகல்களுக்கு பின்னால் 
நீ 
நிலவாக வரும் இரவுகளில் தான் 
நாங்கள் 
தூக்க நிம்மதியைச் சந்திக்கின்றோம்...! 
எங்களின் அரிச்சுவடியே ...! 
நீதான் எங்களுக்கு ஆசிரியரும்....!! 
கல்விகூடங்களில் 
எங்களுக்கு 
"உலக சரித்திரத்தைத்" தான் 
பாடமாக சொல்லித்தந்தார்கள் ...! 
ஆனால் எங்கள் சரித்திரத்தில் 
உனது பள்ளியில் தான் 
நாங்கள் 
உலகத்தையே 
பாடமாக படிக்கின்றோம் ...!! 
நட்பே..... ! 
எங்களின் ஏக்க மனதுகளை 
எளிதாக்கி விடும் தந்திரமே ...! 
காலம் எங்களுக்குச் செய்த 
ஒரே ஒரு நல்ல கைங்கரியம்.. 
நீ மட்டும் தானே... !!


                 - சுப.முருகானந்தம் ( இக்கவிதையை வெளியிட்ட 'eluthu.com'க்கு  நன்றி )

Saturday, July 20, 2013

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! --நா.முத்துநிலவன் கட்டுரை—

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!

--நா.முத்துநிலவன் கட்டுரை—




      என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு  நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.             
அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் –அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.  
கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழி என்பது ஒரு பகுதிதான். அதைவிட, வகுப்பிலும், விடுதியிலும் இருக்கும்போது, மற்றவர்களோடு எப்படிப் பழகுவது, நல்லது கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதுதான் உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாகப் பாதியும், ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும், கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்விஅறிவு!  அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும், கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.  
ஆனால் உன்போலும் பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசி, கணினி, தொலைக்காட்சியுடனே செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும், என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். நீ எனது செல்பேசியில் திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித்தந்ததை நான்என் நண்பர்களிடமெல்லாம் காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன் “இது எப்படிங்க? என்செல்பேசியிலும் வச்சுத்தாங்களேன்?“ என்று சொல்லும் போது “இது என்மகள் வச்சுத் தந்தது, எனக்குத் தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்படி மின்-நூல்களைப் படிப்பது, மின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும் பயன்பாடுகள்  ஒருபக்கமிருக்க, வேறுபல திசைகளில் நேரவிரயத்துடன், நம்மைப் புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை. அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும்.
இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர், மிகுந்த –பன்முக- திறமைசாலிகளாக இருப்பதை, சில செய்தி-தொலைக்காட்சி-களில் பார்த்து வியந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா-நானா விவாதங்கள், சூப்பர்-சிங்கர், கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில பேச்சு மற்றும நேரலையாகக் கருத்துக்கூறும் நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து  மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!
இதுபோல் நல்லநிகழ்ச்சிகளை பார்த்துரசிக்காமல், குறும்புசெய்து திட்டும்குட்டும் வாங்காமல், நல்ல விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல், வெளியில் போய் விளையாடி மகிழாமல், வீட்டுக்குள் உட்கார்ந்து “ஓடிவிளையாடு பாப்பா” என்று மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்குதை எப்படிச் சாதனைஎன்று சொல்லமுடியும்? அவர்கள் குழந்தைப் பருவத்தையே படிப்புக்காகத் தியாகம் செய்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்க விரும்புகிறேன்.
முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டு, ஓவிய, இசை முதலான பலப்பல வகுப்புகளையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானே? பல பள்ளிகளில் முக்கியமாக “மாநில முதலிடம், இரண்டாமிடம், மற்றும் 450க்கு மேல் 800பேர்” என்று விளம்பரம் செய்து கல்லாக்கட்டும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில் இருக்கும் ஓவியம்,விளையாட்டு,சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகளே நடத்தப்படுவதில்லை! ஒரே புத்தகத்தை இரண்டுவருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளிபிசகாமல் “வாந்திஎடுத்து” எழுதிக்காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனதான். பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத்திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா? முதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா யோசித்துப் பார்!  
இதனால்தான் மகளே, எனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த இடத்திலும் நான், “என் எதிரே மலர்ந்த முகங்களோடு அமர்ந்திருக்கும், இன்றைய மாணவர்களான- எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான, எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே! குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே! தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களே, அன்னை தெரஸாக்களே!” என்று சொல்லும்போது கூட்டமே ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும்.  இது பேச ஆரம்பிக்கும்போதே, பார்வையாளர்களைக் கவர நான் செய்யும் உத்திதான் எனினும், அதில் இருக்கும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்லவே?
ஆனால், எனதுநண்பர் ஒருவர் -மத்திய அரசின் விருதுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- சொன்ன ஒரு கருத்தும், மற்றொரு பக்கம் உறுத்தத்தான் செய்கிறது. அவர் சொன்னார் – “சார், நாங்கள்ளாம் 1985மற்றும் 89ஆம் ஆண்டுகளில் நடத்திய பெரும்பெரும் போராட்டங்களால், இப்போது எங்கள் சம்பளமும் சரி பென்ஷனும் சரி உயர்ந்து நிற்கிறது. நான் 37ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ.60,000 சம்பளத்தை, என்மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்”  “ஆகா, இதுவல்லவா மகிழ்ச்சி” என்று நான்சொல்ல, அவர் சற்றும் மகிழ்ச்சியில்லாமல், உச்சுக்கொட்டிக்கொண்டு, “அட போங்க சார், வாழ்க்கைன்னா என்னன்னு  தெரிஞ்சிக்கறதுக்கு முந்தியே வாழ்ந்துமுடிச்சிடுறாங்கெ சார்!  பெரியபடிப்பு, கைநெறய சம்பளம், ஆனா வாழ்க்கைன்னா என்னன்னே தெரியலசார்! அல்பவிஷயத்த பூதாகரமாக்கி அடிச்சிக்கிறது, பெரிய விஷயங்கள புரிஞ்சிக்காமயே லூஸ்ல விட்டுர்ரதுன்னு இருந்தா என்ன சார் அர்த்தம்? சும்மா டென்ஷன் டென்ஷன்னு... 27வயசுக்காரன் சொன்னா, 60வயசுல நா என்ன சொல்றது? என்று அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமலே போனதற்குக் காரணம் என்ன? அந்தப் பாவத்தை நமது பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அல்லவா செய்துவிட்டன என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது! குதிரைக்குக் கண்படாம் போட்டது போல, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காமல் “நேராக“பார்! மதிப்பெண் மட்டும் தெரிகிறதா? சரி என, பயிற்சிபெறும் யாரும் யதார்த்த உலகத்தை விட்டு அந்நியப் படுவதன் காரணமும் பள்ளியில் –புரியாமலே- மனப்பாடம் செய்வதில் தொடங்கிவிடுகிறது அல்லவா?
இன்றைய இளைய சமுதாயம் நன்றாகப் படிக்கிறது ஆனால், படிப்பை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது?  எதை, எதற்காகப் படிக்கிறார்கள் என்று தெரிந்துதான் படிக்கிறார்களா? 
எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம்,                                                      
பி.ஈ.படித்தால்பொறியாளர்ஆகலாம்.                                                  
பி.எல்.படித்தால்வழக்குரைஞர்ஆகலாம்,                                         
ஐ.ஏ.எஸ்.படித்தால்மாவட்டஆட்சியர்ஆகலாம்,                                                 
எதுவுமேபடிக்காமல்மந்திரியும்ஆகலாம்.                                              
ஆனால்,என்னபடித்தால்மனிதர்ஆகலாம்?                                                  
மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம்.  என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.

அதனால், நீ என்ன வேண்டுமானாலும் படி, எல்லாவற்றுக்குள்ளும் மனிதரை மட்டும் மறக்காமல் படி, அல்லது மனிதருக்காக எதுவேண்டுமானாலும் படி. ஆனால், நேர் எதிராகச் சிலர், படிப்பு ஏற ஏற மனிதரை மறந்துவிடுகிறார்கள் அல்லது மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறந்து போகிறார்கள்!
கலைஇலக்கிய வாதிகள் பலர் பள்ளி கல்லூரிப்படிப்பே இல்லாதவர்கள். ஆனால், அந்தப் “படிக்காதவர்கள்“தான் பல நூறு பேர்களுக்குப் பட்டங்களையே தருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? நான் சொல்வது படிக்காமலே பல கல்லூரிகளை நடத்திப் பட்டம் வழங்கும் –கல்வி வள்ளல்கள் எனும் பெயரோடு உலவிவரும் “கல்வி முதலாளிகளை அல்ல! அது இன்றைய நம் சமூகத்தின் முரண்பாடு! அவர்களிலும் நல்லவர் சிலர் –விதிவிலக்குகளாக- இருக்கிறார்கள் என்றாலும் நான்சொல்லவந்தது அவர்களையும் அல்ல. கல்லூரிப்படிப்புப் படிக்காத –ஆனால் சமகால மனிதர்களைப் படித்த- மேதைகளான எழுத்தாளர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3ஆம் வகுப்புத் தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துகளை ஆய்வு செய்த படிப்பாளிகள் பலநூறுபேர் “முனைவர்” (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?
பட்டம் பெற்ற மனிதர்களுக்கான பணிகளும் பதவிகளும் மாறிமாறி வரும், போகும், பதவிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், ஆனால், பதவிகளை வகிக்கும் மனிர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”-குறள் இதைத்தானே சொல்கிறது? பதவிகளுக்காகவே வாழும் மனிதர்களைப் பற்றி ஒரு சொலவடை இருக்கிறது-
தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!”  இது எப்படி இருக்கு? ரொம்ப எதார்த்தமா இருக்குல்ல?
ஆமாம் அவ்வளவுதான், பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும், மனத்தளவில் செத்துப் போவது அதனால்தான்! பதவிகளை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தவாய்ப்பு என்றுநினைக்கும் இடதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருந்தால் கூட “தோழர்” எனும் ஒரு சொல்லுக்குள் அடங்கி நிற்பார்கள். இடதுசாரித் தலைவர்களை மட்டும்தான் இன்னமும் தா.பா.வர்ராராமில்ல?ஜி.ஆர்.பேசுறாராமில்ல? என்று பெயர்ச்சுருக்கத்தைச் சொல்லிச் சாதாரணத் தொண்டர் அழைப்பதைப் பார்க்கலாம். மற்ற கட்சிகளில் வட்டம், மாவட்டங்களையே பெயர் சொல்லி அழைக்க முடியாது! அவர்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர்களாகி விட்டார்கள் என்று அர்த்தம். அதாவது அவர்கள் மனிதர்களாகவே இல்லை என்பது பொருள்!
சிறந்த சிந்தனையாளரும் நல்ல தமிழறிஞருமான சாலய்.இளந்திரையன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதோ அந்தக்கவிதை - 
“எழுதிவைத்த புத்தகத்தில் முழுகிப் போவாய்,
எதிரிருக்கும்மானுடரைபபடிக்கமாட்டாய்,
கழுதைகளும் புத்தகத்தை மேயும், பின்னர
கால்முட்டி இடித்திடவே நடக்கும் தோழா”   என்பது,. புத்தகங்களைப் படிக்கத்தான் வேண்டும். அதற்காகப் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை அதை நடைமுறைப்படுத்த, மனிதர்களுக்காக அந்தச் சிந்தனைகளைப் பயன்படுத்த வேண்டும்.
முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், “முதல்மதிப்பெண்“ மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே லட்சியமாக நினைக்கவைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்ன? எழுத்துகளை மேய்ந்த அஜீரணத்திற்கு மருந்து தேடி, இவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே முடிந்து விடுகிறதே! நல்ல கவிதை தேமா, புளிமா, பண்புத்தொகை, வினைத்தொகைகளுடன் இருக்கலாம். ஆனால், இந்த இலக்கணக் குறிப்புகளை அறிந்து மதிப்பெண் பெறும் பதட்டத்தில், அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகை, ஆழமான அர்த்த்த்தை என்பதை அறிந்துகொள்வதற்குள் படிப்பே முடிந்துவிட்டதே!
இதைத்தான் நமது மகாகவி பாரதி –
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”  என்று சொன்னான். இதுவும் புரியவில்லை என்றால், குளத்துக்குள் எத்தனை நாள் கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும், பயனையும் என்றுதான் சொல்ல வேண்டும்.
டந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், ஒருபாடத்தில் மட்டும்தான் முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன்அம்மா கூறினார். அது போதும் மகளே! முதல்மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம் வீணாக்காதே! உனக்கு மட்டுமல்ல, வழக்குரைஞராக இருக்கும் உன் அக்காவுக்கும், கணினிப் பணியிலிருக்கும் உன் அண்ணனுக்கும் -அவர்கள் படித்தபோது- இதையே சொல்லியிருக்கிறேன்.
பாடப் புத்தகங்களைப் படித்துப்படித்து “உருப்போட்டு“, முதல் மதிப்பெண் எடுப்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாகத் தோன்றும். ஆனால், அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பின்னால் என்ன சாதித்தார்கள் என்று யோசித்துப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த பல பத்தாண்டுகளாக “மாநில அளவில் முதல்மதிப்பெண்“ பெற்ற மாணவர்களுக்கு –அவர்களின் முதல்மதிப்பெண் சாதனைக்காக- பலப்பலப் பரிசுகள் தரப்படுகின்றன. அன்று அவர்கள்தாம் தொலைக்காட்சிகளின் கதாநாயக/நாயகியர்! இனிப்பு ஊட்டுவதென்ன? தோழர்-தோழியர் தூக்கிவைத்துக் கொண்டாட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் கொடுப்பதென்ன?!!! எல்லாம் அந்த ஒரு நாளோடு சரி. அதன் பின் ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே ஆண்டுதோறும் நடந்துவருகிறது அல்லவா?
நன்றாக யோசித்துப் பார்த்தால், பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, “பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநிலமுதன்மை எடுப்பேன்“ என்று வாரிவழங்கும் உறுதிமொழியைப் பெரும்பாலும் –அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக எனக்கு நினைவில்லை.
இப்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேனென்றால், கடந்த சிலபல நாள்களாக, பள்ளியிறுதி(SSLC),, மற்றும் மேல்நிலை(+2) வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்து, செய்தித்தாள்களின் பக்கங்களையெல்லாம் தனியார்பள்ளி கல்லூரிக் கல்விவள்ளல்களின் விளம்பரங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை நீயும் பார்த்திருப்பாய்! மாநில முதன்மை பெற்ற மாணவர்களின் பேட்டிகளால் செய்தித்தாள்கள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இந்த ஆண்டு பத்தாம்வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை வாரிக் குவித்து விட்டார்கள் போ! மாநிலஅளவில் முதல்மதிப்பெண்ணே ஒன்பது பேர்! இரண்டாமிடத்தில் 32பேர் மூன்றாமிடத்திலோ 148பேர்!
இந்த மாணவர்கள் மீண்டும் இதே அளவுக்குச் சாதிக்கா விட்டாலும், நன்றாகவெ படித்து, விரும்பும் உயர்கல்வியை விரும்பும் கல்விநிறுவனத்தில் முடித்து, நல்ல தேர்ச்சிகாட்டி, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, மாவட்டஆட்சியராகவோகூட வந்துவிடலாம் ஆனால், அந்த மதிப்பெண் சாதனையாளர்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்றால்... பெரும்பாலும் ஏமாற்றம்தான்... ஏனெனில், வாழ்க்கையில் வெற்றி என்பது கைநிறையச் சம்பளம் தரும் நல்ல வேலைக்குப் போவது, நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது, குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்வது, கார்வாங்குவது, பங்களா கட்டுவது என்று “செட்டில்” ஆவதில் இல்லை! அது சுயநலமிக்க வாழ்க்கை. அது நமக்குத் தேவையுமில்லை மகளே! இதைத்தானே பாரதிதாசன் மண்டையிலடித்தாற்பேலச் சொன்னார்?
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு                                                        
சம்பாத்தியம் இவையுண்டு தானுண் டென்போன்                                  
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்                                                     
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“ நாட்டின் நல்லகுடிமகனாக, சிறந்தமனிதராக, புகழ் பெறாவிட்டாலும் சாதாரணமாக அடுத்தவர் நினைவில் தோன்றும்போது (IMAGE) நல்ல மனிதராக வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கையின் அடையாளம். இதைத்தான் வள்ளுவப் பெரியாரும், “தோன்றின் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்று சொல்லியிருக்க வேண்டும்.
மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல, நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக்கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும் மாறி 100மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் விரைவில் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.
தேர்வில் தோல்வியடைந்தாலும் போராடி வென்று இந்தச் சமுதாய முரண்பாடுகளைப் புரிந்து கொண்டு சமூக மனிதனாக” நாலுபேருக்கு நன்மை செய்து,சாதாரணமாகவே வாழ்பவன்தான் உண்மையில் வெற்றி பெறுகிறான். தேர்வில் வெற்றிபெறுவது முக்கியமா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமா என்று கேட்டால் கிடைக்கும்  விடை இதை உனக்கு இன்னும் விளக்கிவிடும். ஆனால், முதல் மதிப்பெண் வெற்றி தானே வாழ்க்கை வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று கேட்டால் பெருவெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்கவில்லை என்னும் வரலாற்று உண்மையை நீ புரிந்துகொள்ள வேண்டும். தனது பள்ளிப்படிப்பில் –மற்ற பாடங்களை விடவும் குறைவாகவே வரலாற்றுப்பாடத்தில் மதிப்பெண் எடுத்த காந்திதான் இந்திய வரலாற்றையே தன் வாழ்க்கையால் மாற்றி எழுதினார். இன்னொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கிய லெனின் அந்தப் படிப்புக்குத் தொடர்பில்லாத அரசியலில்தான் சோவியத்து நாட்டு வரலாற்றை மட்டுமல்ல, உலக வரலாற்றையே புதிதாக எழுதிவிட்டார்!
படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கையைத் திட்டமிட்டுக்கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிலர்பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரை கற்றுக்கொண்டு வா. சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே! அப்புறம் –பாடப்புத்தகம் தவிரவும்- என்ன புத்தகம் புதிதாகப் படித்தாய் என்றும் மின் உலகில் புதிதாக எனக்கென்ன கற்றுக்கொடுக்கப் போகிறாய் என்றும் எனக்குச் சொல்லு.                                       
சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...                             
நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...                                
சித்தர்களும் யோகியரும் சிந்தனையில் ஞானிகளும்                                         
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்                                                   
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க...                                        
எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க...
– பட்டுக்கோட்டையார்  பாடல்

அவ்வளவுதான் மகளே! 
அன்புடன் 
உன் அப்பா.           

Thursday, July 18, 2013

ஊனம் மனதிலா ? உடலிலா?



ஒருவன் 
மலையென நிமிர்ந்த தோள் 
விளைந்த மரமெனும் கையும் காலும் ....
ஓடியே உலகை சுற்றும் 
நெஞ்சுரம் கொண்ட மாந்தன்......
கண்ணிலே ஒளிதானில்லை....- அது 
காட்டிடும் வழிதானில்லை.....

மற்றொருவன்...
கையுண்டு .. கண்ணுண்டு 
கால்களில்லை ...
நத்தையும் அவனும் ஒன்று ...
நகர்வதில் உலகை கண்டு .....

நண்பர்களாயினர் இருவருமே..

நடக்க முடிந்தவன் நடந்தான் ..
பார்க்கத் தெரிந்தவன் ...
அவன் தன் தோள்மீது 
அம்ர்ந்து வழிகாட்டிடவே ....... 
நாடெங்கும் ஒலித்தது தமிழ் பாட்டு 
ஞாலம் வியந்தது அதை கேட்டு ...

உடலிலே  அழகோடு 
உள்ளத்தில் குறையோடு 
உள்ளவர் வெறுங்கூடு....
மனதெலாம் நிறைவோடு 
மகிழ்ச்சியில் உறவாடும் 
மனிதருக்கில்லை குறைபாடு ....

உடல் நலக் குறைபாட்டில் 
உள்ளதோ கேடு?
மனநலக் குறைபாடே 
பொதுநலக் கேடு .....

ஊனம் தமிழில்லை 
ஊனம் தமிழர்கில்லை 

மனிதஇனம் தழைத்திடவே 
மனநலம் போற்றுவோம் 
மாற்றுத் திறனாளிகளை

மனதார வாழ்த்துவோம் ......

Monday, July 8, 2013

"ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் " நூல் படித்தேன்


ஆரியம் ஒவ்வொரு காலத்திலும் ஒரு ஆற்றலுள்ள தமிழனை விலைபேசி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும்.கவிஞர் கண்ணதாசனை விலை பேசி அர்த்தமுள்ள இந்துமதம் எழுதச்செய்து சரிந்த இந்து மதத்தை தாங்கிப் பிடித்தனர். இப்போது அதே வரிசையில் எழுத்தாளர் குணா எனப்படும் எஸ் .குணசீலன் என்பவரின் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று தமிழ் தேசிய வியாதிகளால் தூக்கிப் பிடிக்கப்படும் அரைவேக்காட்டுத்தனமான ஆராய்ச்சி .? நூல்....அப்போது போலவே , இப்போதும் , கிளர்ந்தெழுந்து அந்த நூலை அலசி ஆராய்ந்து ...மானமிகு. மஞ்சை வசந்தன் அவர்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் படைத்துள்ள "ஆரியத்தால் வீழ்ந்தோம்..திராவிடத்தால் எழுந்தோம் " நூல் படித்தேன்   தமிழர்தம் இனமான போருக்கு நல்ல ஆயுதம்.தமிழை, தமிழர்களை காக்கும் கவசமே "திராவிடர்" எனும் சொல் , ஆரியம் உள் நுழைய அனுமதிக்காத அரண் அது. இனவுணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள்.இன்னும்..இன்னும்.....248 பக்கங்கள். விலை.ரூ.100.
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!