Sunday, December 2, 2018

வாழ்கநீ நூறாண்டு...!* மதுரை சுப.முருகானந்தம்

*வாழ்கநீ நூறாண்டு...!*

மதுரை சுப.முருகானந்தம்


பள்ளியை விட்டு வந்த
பால்முகம் மேடை ஏறிச்
சொல்லிலே இனிமை கூட்டிச்
சுவையினில் பொருளைச் சேர்த்து
வில்லினை விட்ட அம்பாய்
வீணர்தம் நெஞ்சைத் தைத்த 
நல்வினை நடக்கக் கண்டு 
ஞாலமும் வியந்த தம்மா!

கல்வியில் முதல்வ னாகிக்
களத்திலும் முதல்வ னாகிப்
பள்ளியில் நாள்க ளெல்லாம் 
பலபல ஊர்கள் சென்று
சொல்லிடை 'அருள்கூர்ந் தென்று'
தெள்ளிய குரலால் கூவி
அள்ளிய  நூல்கள் காட்டித்
துல்லித முரைப்பாய்  நீயே

கோரிய பணமும் கொட்டும் 
குன்றென வளமும் கிட்டும் 
ஊரறி வழக்கு ரைஞர் 
உறுவது நீங்கி எம்பால் 
பேரருள் கொண்டு நீதான் 
பெறுமதி விலக்கி வந்து 
பாரறி வாள ரய்யா 
பணிதனை ஆற்று வாயே!!

பனியினைக் கதிரும் வெல்லும் 
பகையினை உன்றன் சொல்லும் 
பிணியிடை நலிந்த போதும் 
பேசிட அஞ்ச லில்லை
கனியென உலகு சூழும் 
கருத்தினை வகையாய் நாளும்
 மணியெனத் தருவாய் அய்யா 
மதிநலம் பெறுவோம் ஈங்கே!!

குடையென இனத்தைக் காத்துக்
குவலயம் சுற்றும் ஏந்தல்
படையென உமக்குப் பின்னால் 
பயின்றது தமிழர் சேனை 
நடையினில் வேகம் கொண்டு 
நடத்துக அறிவுத் தொண்டு 
இடையினில் பத்தோ டைந்து
 இருக்கவே நீநூ
றாண்டு!!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!